<http://www.jeyamohan.in/87638?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+jeyamohan+%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%29#.VzFqCdJ97Z4>
 jeyamohan.in
<http://www.jeyamohan.in/87638?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+jeyamohan+%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%29#.VzFqCdJ97Z4>
பிராமணர்- பழியும் பொறுப்பும்

   - May 9, 2016
   -  3 min read
   -  original
   
<http://www.jeyamohan.in/87638?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+jeyamohan+%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%29#.VzFqCdJ97Z4>

[image: maxresdefault]
<http://www.jeyamohan.in/wp-content/uploads/2016/05/maxresdefault.jpg>

அன்புள்ள ஜெமோ

என் பெயர் சத்யநாராயணன். நான் பிராமணன். அதாவது ஸ்மார்த்தன். இந்தசாதியில்
நான் பிறந்ததே ஒரு பெரிய தவறு என்னும் எண்ணம் வரும்படியாக நம் சூழல் உள்ளது.
எவ்வளவோ நாட்கள் இதற்காக நான் வருத்தப்பட்டிருக்கிறேன். நான் பிறந்து
வளர்ந்தது எல்லாம் தஞ்சைமாவட்டத்தில் திருவாரூரில். அங்கே எப்போதுமே
பிராமணர்களைப்பற்றிய ஒரு கிண்டல் இருக்கும். எல்லா இடத்திலும் ஒதுக்கி
வைப்பார்கள். சின்னச்சின்ன அவமதிப்புகள் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்காது.
அதையெல்லாம் பட்டியலிட்டால் பெரிய கதை. முக்கியமாக என் நண்பர்களே என் அம்மா
அக்காக்களைப்பற்றி கேவலமாகப்பேசுவார்கள்.

இருந்தாலும் நான் அனைவருடனும் சேர்ந்துகொள்ளத்தான் முயற்சி செய்வேன். அதற்காக
நான் சிக்கன் மட்டன் எல்லாம் கூட சாப்பிட்டிருக்கிறேன். எல்லாவற்றுக்கும்
ரெடியாக இருந்தேன். ஆனாலும் எந்தக்க்கும்பலிலும் சேர முடியவில்லை.
ஒருகட்டத்தில் அது முடியாது என்று நினைத்து நானே ஒதுங்கிக்கொண்டேன்.
பிராமணர்களாகிய ஒரு சில நண்பர்களுடன் இருக்கிறேன். மற்றவர்களுடன் எந்த உறவு
இருந்தாலும் எங்கோ ஒரு இடத்திலே புண்படுதல் நிச்சயம்.

அதற்கு வழியாக சிலர் கண்டுகொண்டது நேர் எதிராக ஆகிவிடுவது. நான் பிராமணனே அல்ல
என்று சொல்வது. பிராமணர்களை மற்றவர்களை விட இவர்கள் கேவலமாக பேசுவார்கள்.
அதுவும் என்னால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை. அப்படிப்பேசினாலும்
ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது ஒருபக்கம். ஆனால் என் பண்பாட்டை நான் அப்படி
தூக்கி வீசிவிடமுடியாது. என் அப்பா தாத்தா மேல் எனக்கு மதிப்பு உண்டு.
எனக்குக் கடவுள்நம்பிக்கை உண்டு.

ஒதுக்குமுறை என்பது என்றைக்குமே பெரிய துன்பம். அதை அனுபவித்தவர்களுக்கே அது
தெரியும். எந்தபிராமணனும் இந்த அவமதிப்பைத்தாங்கித்தான் வாழ்கிறான். அவன்
பெரிய பணக்காரன், உயர்குடி என்றால் அதுவேறு ஒருவட்டம். நான் நடுத்தரவர்க்க
பிராமணனைப்பற்றிப்பேசுகிறேன்

உங்கள் எழுத்துக்களை நான் ஈடுபட்டு வாசிக்கிறேன். வெண்முரசு எனக்கு ஒரு தனி
உலகம். இதைக்கேட்கவெண்டும் என தோன்றியது. பிராமணனாகப்பிறந்ததற்காகவும் என்
மூதாதையருக்காகவும் நான் வெட்கப்படவேண்டுமா? தமிழகத்திலுள்ள அத்தனை
தப்புகளுக்கும் பிராமணன் ஒருத்தன்தான் காரனமா? பிராமணன் மட்டும்தான் பழி
ஏற்கவேண்டுமா?

சத்யா

அன்புள்ள சத்யா,

வேறுவேறு சொற்களில் இக்கேள்விகளுக்கு முன்னரே பதில் சொல்லிவிட்டேன்.
தமிழகத்தில் உள்ள பிராமண வெறுப்பு என்பது மிகமிகப்போலியானது. ஒரு கீழ்த்தர
அரசியல் உத்தி அது. பிராமணரல்லாத உயர்சாதியினர் [நாயர்கள் முக்கியமாக]
சாதியாதிக்கத்தை கடுமையான வன்முறைமூலம் நிலைநிறுத்தி பிறசாதியினரைச்
சுரண்டிப்பிழைத்தவர்கள்.

ஜனநாயகம் எழுந்து வந்தபோது அச்சுரண்டலின் பழியிலிருந்து தப்பிக்க சாதியை
உருவாக்கி நிலைநிறுத்திய பொறுப்பை சாதுரியமாக பிராமணர் தலையில் கட்டினர் .
அன்றைய ஆசாரப் பிராமணர்களும் ‘ஆமா நாங்கதான். நாங்கதான் எல்லாத்தையும்
உண்டுபண்ணினோம்’ என்று ஏற்றுக்கொண்டார்கள்.

பின்பு இங்குள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்களும் அந்த உத்தியைக் கைகொண்டன.
இவர்கள் உச்சகட்ட சாதிவெறியர்கள். தலித்துக்கள்மேல் பூமியில் எங்குமில்லாத
அளவுக்கு காழ்ப்பு கொண்டவர்கள். அதேசமயம் முற்போக்கு  பாவனை மேற்கொள்வார்கள்.
அதற்கான வழி பிராமண வெறுப்பைக் கக்குதல்

சாதியை உருவாக்கி ,நிலைநிறுத்தி ,சுரண்டியதில் எல்லா சாதியினருக்கும் சமானமான
பங்குண்டு.  அந்தப்பங்கு மேலிருந்து கீழிறங்கும்தோறும் அவர்களும் மேலிருந்து
ஒடுக்கப்பட்டார்கள் என்பதனால் சற்று குறைகிறது. ஆகவே தமிழகத்தில்
பிராமணர்களும், வேளாளர்களும், முதலியார்களும் ,செட்டியார்களும் சாதியை
நிலைநிறுத்தியதன் பொறுப்பை முதன்மையாகச் சுமக்கவேண்டும். அதற்காக வெட்கவும்,
அதற்காக பிராயச்சித்தம்செய்யவும் வேண்டும். அதில் பிராமணர்களுக்கு மேலதிகமான
பொறுப்பு ஏதுமில்லை. அப்படிப் பொறுப்பாக்குவது பிறசாதியினரின் கீழ்மைநிறைந்த
அரசியல் தந்திரம்

இந்த பொறுப்பேற்றல் இருக்குமென்றால், பிராமணராக இருப்பதற்கே
வெட்கவேண்டியதில்லை. பிராமணர்கள் இந்தியாவின் நீண்ட பண்பாட்டு மரபை, மதத்தை
நிலைநிறுத்தும் நிலைச்சக்தியாக ஈராயிரமாண்டுக்காலம் செயல்பட்டிருக்கிறார்கள்.
அவர்களிடமிருந்த பாரம்பரியம் மட்டுமே அழியாமல் இருபதாம்நூற்றாண்டை
வந்தடைந்திருக்கிறது. அதன் பொருட்டு அவர்கள் பெருமைகொள்ளலாம்

அம்மரபில் மரபின் நல்ல அம்சங்களும் தீய அம்சங்களும் உண்டு. அவற்றைச்
சீர்திருத்தவும் அவர்களே முன்னோடியான முயற்சி எடுத்தனர். பாரதி, அ.மாதவையா,
மகாவைத்யநாத அய்யர், சுப்ரமணிய சிவா, வ.ரா போன்ற முன்னோடிச்
சீர்திருத்தவாதிகளின்பொருட்டும் பெருமைகொள்ளலாம்

பிராமணர்கள் வன்முறை அற்ற சமூகமாக, கல்வியை மட்டுமெ ஆயுதமாகக் கொண்டவர்களாக
இங்கே செயல்பட்டிருக்கிறார்கள். சமரசத்தை உருவாக்குபவர்களாகவும்,
இணைப்பவர்களாகவும் கற்பிப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதன்பொருட்டு
பெருமிதம் கொள்ளலாம்.

வெற்றுக்கூச்சலிடும் அரசியலாளர் அன்றி நடைமுறை அணிந்த எவரும் உணர்ந்த
ஒன்றுண்டு. தமிழ்ச்சூழலில் கல்வி,சட்டம் போன்ற பல துறைகளில் பிராமணர்களின்
பங்களிப்பு குறைந்தது பெரிய தரவீழ்ச்சிக்கு இடமளித்தது. அவர்கள்
தமிழ்ச்சமூகத்தில் சில அடிப்படை விழுமியங்களின் குரலாக இருந்தனர். அவர்களின்
பங்களிப்பு முக்கியமானது

அறிவுத்துறையில் இலக்கியவாதிகளாக, கல்வியாளர்களாக, சிந்தனையாளர்களாக
முன்னோடியான பங்களிப்பு அவர்களுக்குண்டு. பாரதி முதல் சுந்தர ராமசாமி வரை,
உ.வே.சாமிநாதய்யர் முதல் ஐராவதம் மகாதேவன் வரை அவர்கள் இன்றி தமிழிலக்கியமோ
பண்பாடோ பேசப்படவே முடியாது.

ஆகவே பெருமிதம் கொள்ளுங்கள். எவர்முன்னாலும் சிறுமைகொள்ளாதீர்கள். குன்றுவதும்
குறைந்துபோக முயல்வதும் உங்கள் முன்னோடிகளுக்கு நீங்கள் செய்யும் அவமதிப்பு.
உங்களைச் சிறுமைசெய்ய முயல்கிறார்கள் என்றால், அவமதிக்கிறார்கள் என்றால் அது
அவர்களின் தாழ்வுணர்ச்சியால் என உணருங்கள். நீங்கள் நின்றிருக்கும்
உயரத்திலிருந்து அவர்களை கனிவுடன் பாருங்கள். மன்னியுங்கள். வெறுக்காதீர்கள்.

ஆனால் இன்னொன்றும் உண்டு. பிராமணர் என்று உணரும்போதே நீங்கள் இயல்பாக
பழைமையின் எதிர்மறை அம்சங்களில் சென்று படிந்துவிட வாய்ப்புண்டு.
சாதிக்கொடுமைகளை, தீண்டாமையை, பெண்ணடிமையை எல்லாம் மரபென வலியுறுத்தும்
அமைப்புகளையும் மனிதர்களையும் சாதியின்பொருட்டே நீங்கள் உங்களவர் என
ஏற்றுக்கொண்டீர்கள் என்றால், அவர்களின் பொருட்டு நிலைகொண்டீர்கள் என்றால்,
நீங்கள் சிறுமையடைகிறீர்கள்.

கணிசமான பிராமணர்கள் வெறுக்கப்படுவது அவர்களின் மேலோட்டமான நட்புமுகத்திற்கு
அப்பால் சகமானுடரை இழிவெனக் கருதும் அந்த மேட்டிமை அம்சம் எங்கோ ஆழத்தில்
இருந்து, தருணம் கிடைத்தால் வெளிப்படும் என்பதை பலர் உணர்ந்திருப்பதனால்தான்.
குறிப்பாக பொருளியல் மேன்மை அடைந்து, அதிகாரத்தை அணுகும்தோறும் பிராமணர்களிடம்
அந்த மேட்டிமைத்தனம் வெளிப்படுகிறது.

அதன் மீதான வெறுப்பும் நிராகரிப்பும் மற்றவர்களிடமிருப்பது இயல்பே என
புரிந்துகொள்ளுங்கள். அந்தத் தரப்புகளில் இருந்து விலகுங்கள். அதை
உங்களிடமிருந்து தேடி எடுத்து பிடுங்கி வெளியே போடுங்கள். அந்தச் சுயபரிசோதனை
கடைசிவரை இருந்துகொண்டே இருந்தாலொழிய, நீங்கள் ஆன்மீகமாகவும் விடுதலை
அடையமுடியாது.

இன்னும் நுட்பமான ஒன்றுண்டு. இது நாம் பிறந்து வளர்ந்த சூழலில் இருந்து
இயல்பாகவே நமக்குக் கிடைப்பது. நம் ரசனை, எண்ணப்போக்கு ஆகியவை அதிலேயே வடிவம்
கொண்டிருப்பதனால் நமக்கு அதிலுள்ள பிழைகூட கண்ணுக்குப்படுவதில்லை.

கணிசமான பிராமணர்கள் இலக்கியம், கலை, ஆன்மீகம் ஆகியவற்றில்
பிராமணியத்தன்மைகொண்டவற்றை மட்டுமே ஏற்கக்கூடியவர்களாக, பிற அனைத்தையும்
அறியாமலேயே கீழானவையாக கருதக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இது அவர்களிடம்
தன்னிச்சையாக வெளிப்படும். இயல்பாகவே புதுமைப்பித்தன் பிடிக்காது, மௌனி
பிடிக்கும். நுண்ணியல்பாலேயே வள்ளலாரோ நாராயணகுருவோ உவப்பாக இராது, ரமணரோ
ஜே.கிருஷ்ணமூர்த்தியோதான் உண்மையான ஞானிகள் எனத்தோன்றும்.

ஏன் ,அப்படித்தோன்றக்கூடாதா எனக் கேட்கலாம். எனக்கு இயல்பாகவே அப்படித்
தோன்றுகிறது என வாதிடலாம். ஏன் அப்படித்தோன்றுகிறது என்பதற்கான ஒரு
சுயவிமர்சனம் தேவை என்று மட்டுமே நான் சொல்ல விழைகிறேன். முப்பதாண்டுகளுக்கும்
மேலாக என் மிக நெருக்கமான நண்பர்களாக இருக்கும் பிராமணர்கள் பலர் இப்படித்தான்
இருக்கிறார்கள். அவர்களால் வெளியே வரவே முடியவில்லை. இச்சிறை உங்களைத்
தனிமைப்படுத்துகிறது. அதைக் கூர்ந்து நோக்குங்கள்.

கடைசியாக, பிராமணர் என்பது ஒரு தகுதி என்பதில் ஐயமில்லை. அது முன்னோடிகளின்
பங்கெடுப்பின் நீட்சியாக வரும் தகுதி. நான் பாரதியின் , உவேசாவின் தொடர்ச்சி
என ஒருவன் உணர்வதன் பெருமிதம். வெறுமே பிராமணனாகப் பிறந்தமையால் அப்பெருமிதம்
உருவாவதில்லை. அந்த நீட்சியில் தன்னை முயன்று பொருத்திக்கொள்ளும்போது வருவது
அது. வெறுமே பிறப்படையாளம் சார்ந்து மட்டும் பெருமிதம் கொள்ளும்போது அது
தளையாக ஆகிறது

பிராமணராகப் பிறந்தமையால் ஓர் அறிவதிகாரம் இருப்பதாக கருதிக்கொள்வதும், பிறரை
விட மேலதிகமாக தகுதிகள் கொண்டிருப்பதாக எண்ணுவதும் ,நுட்பமான பாவனைகள் மூலம்
பலசமயம் பிராமணர்களிடம் இயல்பாக வெளிப்படுகிறது. அதுவே பிறரை அகற்றுகிறது.
அதிலிருந்து வெளியே வருவது நாம் ஆன்மீகமாக மேலெழவும் ,விடுதலைகொள்ளவும்
இன்றியமையாதது

இந்த குறைகளும் சிக்கல்களும் எல்லா சாதியினருக்கும் உண்டு. வேளாளர்களில் பலர்
வேளாளர் அல்லாத எழுத்தாளர்களை வாசிப்பதே இல்லை என்பதையே கண்டிருக்கிறேன்.
அதற்கும் அடுத்த சாதியினர் காட்டும் சாதிமேட்டிமைத்தனம் பெரும்பாலும்
தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடு

எல்லா சாதியினரிடமும் சாதிசார்ந்த பிறப்புச்சூழலில் இருந்து வெளிவருவதன் சவால்
பெரிது என்றே சொல்ல விழைகிறேன். ஆனால் பிராமணர்களிடம் இதை மேலும் குறிப்பாகச்
சொல்ல நான் எண்ணுவேன்.கல்வி சார்ந்த பின்புலம் காரணமாக அவர்களால்
அறிவுச்செயல்பாடுகளில் மேலும் விரைவாக ஈடுபட முடியும். வன்முறையற்ற
குடும்பச்சூழல் அவர்களுக்கு ஆன்மிகமான வளர்ச்சிக்கான அடித்தளம். அவர்கள்
முயன்றால் செல்லும்தொலைவு அதிகம். அதை எளிய மேட்டிமைவாதமாகச்
சுருக்கிக்கொண்டால் அதுவே வெளியே செல்லமுடியாத சிறை.

இந்தியா பிராமணரின்றி அமையாதென்று எண்ணுபவன் நான். அவர்கள்
இந்தியப்பண்பாட்டின் மகத்தான உருவாக்கம் என்றே சொல்லத்துணிவேன். தேங்கி நின்று
வெற்று அடையாளத்தைச் சுமந்து நிற்பவர்களைச் சொல்லவில்லை. மிகச்சிறந்தவற்றை
ஏற்றுக்கொண்டு மேலே சென்றவர்களைச் சொல்கிறேன். பாரதியும் சுந்தர ராமசாமியும்
பிராமணர்களே. பிராமணிய அடையாளத்தால் அல்ல. அதன் சிறந்த கூறுகளை மேலெடுத்து
,அல்லவற்றை அடையாளம் கண்டு ,வெட்டி வீசி முன்சென்றவர்கள் என்பதனால். அவர்களின்
காலடியிலிருந்தே நான் உருவாகி வந்துள்ளேன்.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to