.........................வறுமையிலேயே வாடிக்கொண்டு, வாழ்க்கை தமக்கு
வாய்க்கவில்லையே என - மூக்கைச் சிந்துவோருக்கு எல்லாம் ஒன்று சொல்லுவேன்.

'ஊழிற் பெருவலி யாவுள' என்பது, ஒருபுறம் இருக்கட்டும். 'வாழ்க்கை' எனும் சொல்லை
- அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துப் பாருங்கள்...

அந்த ஊழ், ஆகும் கூழ்!

*நொ*ந்தாரையும்; நொந்து நொந்து வெந்தாரையும் பார்த்து...

வாழ்க்கையின் முதல் எழுத்து அழைக்கின்றது 'வா' என்று;

முதல் எழுத்தும் இரண்டாம் எழுத்தும் சேர்ந்து 'வாழ்' என்கிறது.

எதை நம்பி என்னும் கேள்விக்கு, நான்காம் எழுத்து நவில்கின்றது விடை 'கை' என்று;

அதுமட்டும் அல்ல, கைகொண்டு உழைத்தாலும், காக்க வேண்டியது ஒன்று உண்டு என்று
சொல்கிறது - முதல் எழுத்தும், மூன்றாம் எழுத்தும், நான்காம் எழுத்தும் சேர்ந்து
'வாக்கை' என்று;

மேற்சொன்ன கருத்தை உள்வாங்கி உழைத்தால் - நீ பெறுவது என்னவென்று முதல்
எழுத்தும் நான்காம் எழுத்தும் சேர்ந்து சொல்கிறது 'வாகை' என்று!

'வா';

'வாழ்';

'கை';

'வாக்கை';

'வாகை'; - எனும் அய்ந்து சொற்களைத் தன்னுள் சூல்கொண்டு நிற்கும் ஒரே சொல்
'வாழ்க்கை'!

*ஆ*க, அடியேன் அறிவிப்பது ஆதெனில்...

வாழ்க்கை என்பது மழை நாளில் உன் வீட்டு வாசலில் முளைக்கும் நாய்க்குடை அல்ல;
அது நிழற்குடை!

தாரித்திரிய வெயில் தழல் பரப்பி, உனைத் தகிக்கையில் - உனக்கு நிழல் பரப்பி
உதவவல்ல அந்த நிழற்குடையை, நீதான் முயன்று முன்நின்று வனைந்தெடுக்க வேண்டும்!

நாய்க்குடை - வான் வடிக்கும் நீரில் விளைவது; நிழற்குடை, உனது ஊன் வடிக்கும்
நீரில் உண்டாவது!

வேர்வையில் விளைவது வாழ்க்கை; வேர்வையை வெல்லுமோ ஊழ்க்கை?'

*45* ஆண்டுகளுக்கு முன்னம், என்னிடம் உதவியாளராகச் சேர மூன்று பேர்
விரும்பினர்.

ஒருவர், திருவல்லிக்கேணியில் ஃபார்மஸி வைத்திருந்தவர்; இன்னொருவர் டான்ஸ்
மாஸ்டர் தங்கப்பனோடு பணிபுரிந்தவர்; மூன்றாம் நபர் - தன் கிராமத்தில் இருந்து
விடாமல் எனக்குக் கடிதம் போட்டவர்.

ஏதோ காரணங்களால் இந்த மூவரையும் என் உதவியாளர்களாக ஏற்க என்னால் ஏலவில்லை!

*ஆ*யினும் அந்த மூவரும், தொய்யவில்லை; துவளவில்லை; நையவில்லை; நலியவில்லை! சகல
வலிகளையும் தாங்கிக்கொண்டு - வாழ்க்கை தனக்கு வாய்த்தே தீரும் என்று...
புயல்களால் வீழ்த்தவொண்ணாப் புற்களாய் நின்றனர்; வென்றனர்!

முதல் நபர் - நூறு படங்களை இயக்கியவர்; இரண்டாம் நபர் - ரஜினி, கமல் படங்களை
இயக்கி இசைகொண்டார்; மூன்றாம் நபர் - தான் இயக்கிய முதல் படத்தையே பெரிய
வெற்றிப் படமாக ஆக்கியவர்!

என்னிடம் வேலை தேடி வந்த இந்த மூவரிடமும், நான் பாடலாசிரியனாக வேலை பார்த்தேன்!

கண்ணில் சினிமாக் கனவோடு சென்னை வரும் என் சகோதரா!

இந்த மூவரைப்போல்

இடையறாது - நீ

முயல்! முயல்! முயல்! ஒருநாள் -

மூஞ்சூறும் ஆகும் முயல்!

*அ*து சரி;

அந்த மூவர் யார் என்று சொல்லவில்லையே!

திரு.இராமநாராயணன்;

திரு.ஆர்.சி.சக்தி;

திரு.கங்கை அமரன்!

--
A pessimist sees the difficulty in every opportunity, an optimist sees the
opportunity in every difficulty.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"tamilcommunity" group.
To post to this group, send email to [email protected].
To unsubscribe from this group, send email to 
[email protected].
For more options, visit this group at 
http://groups.google.com/group/tamilcommunity?hl=en.

அவர்களுக்கு பதிலளிக்க