ஓம்
”திருக்குறளைவிட சிறந்த மேனேஜ்மென்ட் புத்தகம் வேறு கிடையாது”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
        பயணங்களே எஸ்.ராமகிருஷ்ணனின் முகவரி. பருவங்கள் அவரது செல்லப் பிராணி.
விரிந்து கிடக்கும் மானுடப் புத்தகத்தை வெயில் போல், மழை போல் இயல்பாய்ப்
படித்துச் செல்லும் விருந்தாளி. அழகையும் சிறகையும் தனக்குள் வளர்க்கும்
கூட்டுப் புழு போல் புத்தகங்களில் தனக்கான தரிசனங்களைக் கண்டவர்.
படைப்புகளின் மூலம் பட்டாம்பூச்சியாகி வாழ்வனுபவத்தின் வண்ணங்களை நமக்கு
அளிப்பவர். அவருடன் ஒரு சந்திப்பு தேன் போல.

        தற்கால தமிழ் இலக்கியத்தின் முகியப் படைப்பாளியான எஸ் ராமகிருஷ்ணனை பெரு
மழையும் சிறு வெயிலும் கண்ணாமூச்சி ஆடிய காலைப் பொழுதில் சந்தித்தோம்.
(விகடன் புக்ஸ்-2008 ஜனவரி)

        ”முதன் முதலில் புத்தகங்கள் எப்படி உங்களுக்கு  அறிமுகமாயின.?”

        “ எனக்கு அறிமுகமான முதல் புத்தகம் காமிக்ஸ். எங்கள் வீட்டில் ஒரு
நூலகம் இருந்தது. அதில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூற்றுக்கணக்கான
புத்தகங்கள் இருந்தன. அந்த உலகத்தில் இருந்த ஒரு காமிக்ஸ் புத்தகத்தை
பன்னீரண்டு வயதில் வாசிக்க ஆரம்பித்த போதுதான் புத்தகம் என்ற விசித்திர
உலகினை அறியத் துவங்கினேன். தேடித் தேடி காமிக்ஸ் புத்தகங்களைப்
படித்தேன். விளையாட்டில் அதிக ஆர்வம் இல்லாமல் இருந்த எனக்கு புத்தகங்கள்
ஒரு கற்பனையான உலகைத் திறந்துவிட்டன. ரிப்கெர்பிஃயும், ஜானி நீரோவும்,
இரும்புக்கை மாயாவியும், வேதாளமும் என் பிரிக்கமுடியாத நண்பர்களானார்கள்.
அன்று தொடங்கி இன்று வரை, ஆக்டோபஸ் போல புத்தகங்கள் தன் அரூபமான
கரங்களால் எப்போதுமே என்னைப் பிடித்துக் கொண்டுதானிருக்கின்றன.”

        ”உங்கள் வாழ்க்கையில் மிகவும் பாதிப்பு ஏற்படுத்திய புத்தகங்களை ப்
பற்றிச் சொல்லுங்கள்.”

        ஒவ்வொரு வயதிலும் ஒரு புத்தகம் என்னை முழுமையாக ஆக்ரமித்துக்
கொண்டிருக்கிறது. மஞ்சள் காமாலை கண்டவன் உடல் முழுவதும் மஞ்சளாகி விடுவது
போல, புத்தகத்தின் ஆழ்ந்த பாதிப்பு அதன் மொழியை, சிந்தனையை எனக்குள்
அப்படியே பதிய வைத்திருகின்றது. பாரதியாரின் கவிதைகள், பள்ளி வயதில்
துவங்கி இன்று வரை எனக்குள் எப்போதும் ஒரு ஆவேச மன நிலையையும் கவித்துவ
எழுச்சியையும் ஏற்படுத்தி வருகின்றது. ஆண்டாளின் ‘திருப்பாவை, ஒவ்வொரு
முறை கேட்க்கும் போதும் காதலின் உன்னதமான தவிப்பையும் நெருக்கத்தையும்
உணரச் செய்கிறது. தமிழில் ஆறுமுக நாவலரால் மொழியாக்கம் செய்யப் பட்ட ‘
பைபிள்’ எனக்குள் அன்பையும் பிரியத்தையும் தீவிரமாக்கியிருக்கின்றன.
ஆங்கிலத்தில் ஷேக்பியரின் ’மேக்பெத்’, ’ஒத்தல்லோ’  இரண்டும் வாசித்த
நாட்களில் இருந்து இன்றுவரை என் மனதில் அழியாத வாசகங்களாக உள்ளன.
டால்ஸ்டாயின் ’புத்துயிர்ப்பு’, ‘அன்னா கரீனா’, டஸ்டயெவ்ஸ்க்யின்
‘வெண்ணிற இரவுகள்’,’கரமசோவ் சகோதரர்கள், செல்மா லகர்லேவியின்’ தேவ மலர்’,
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் ‘ நூற்றாண்டுகாலத் தனிமை’, போர்ஹேயின்
‘சிறு கதைகள்’, வைக்கம் முகம்மது பஷீரின் ‘பால்ய கால சகி’,  தேவ தச்சன்
கவிதைகள் போன்றவை என்னை உருவாக்கியதில் முகிய பங்கு வகிக்கின்றன.”

        ”புத்தகங்கள் படிக்க வேண்டியதின் அவசியம் என்ன?”

        ”நினைவுகளைப் பதிவு செய்து வைப்பதற்கு, இதுவரை உலகில் கன்ண்டுபிடிக்கப்
பட்டவற்றில் மிக எளிய வழி புத்தகங்கள் மட்டுமே. ஒவ்வொரு புத்தகமும்  ஏதொ
ஒரு நினைவின் சாட்சியே. தமிழ் வாழ்வியலின் சாட்சிகளாகத் தான் சங்க
இலக்கியமும் சிலப்பதிகரமும் உள்ளன. மேலும், நம் வாழ்வனுபவங்களுக்கு
வெளியில் உள்ள உலகையும், என்றைக்குமான மனித ஒழுக்கம், அறம், நன்மை, தீமை
போன்றவற்றை அறிந்து கொள்ளவும் சக மனிதர்களின் வாழ்க்கை மிது அக்கறை
கொள்ளவும் தன் புத்தகங்கள் வசிக்கப் படுகின்றன. அண்டை வீட்டுக் காரனுக்கு
அடி விழுந்தாலும் கலங்காத நாம்,  புத்தகத்தில் நமக்குப் பிடித்த ஒரு கதா
பாத்திரத்தின் துயரத்திற்காகக் கண்ணீர் விடுகிறோம், ஏன்? அதுதான்
புத்தகத்தின் வலிமை. கண்ணாடி நம் முகத்தை மட்டுமே காட்டும். புத்தகங்கள்
நம் அகத்தைக் காட்டுகின்றன. நீங்கள் என்ன புத்தகம் படிக்கின்றீர்கள்
என்பதை வைத்து நீங்கள் யார், என்ன வகையான இயல்பு கொண்டவர் என்று சொல்லி
விட முடியும்.”

        ”குழந்தைகளுக்கு புத்தகத்தை அறிமுகம் செய்வதுஎப்படி?”

        ”இன்றைய சூழலில் குழந்தைகள் படிக்க வேண்டுமானால் முதலில்பெரியவர்கள்
படிக்கும் பழக்கத்திற்கு உள்ளாக வேண்டும். எந்தக் குழந்தையும் நான்
படிக்க மாட்டேன் என்று சொல்வதில்லை. நாம் தான் அவர்களுக்கு அறிமுகம்
செய்யத் தவறுகிறோம். ஐஸ்க்ரீம் பார்லர், பிஸ்சா கார்ணர், சினிமாத்
தியேட்டருக்கு அழைத்துச் செல்வதில் காட்டும் அக்கறை, புத்தகக் கடைக்குக்
அழைத்துச் செல்வதில் ஏற்படுவதில்லை. இது மாறவேண்டும். அது போலவே கதைகளை
குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டும் பழக்கம் நமக்கு வரவேண்டும். எங்கள்
வீட்டில், நான் சிறியவனாக இருந்த நாட்களில் புத்தகம் வாங்குவதற்கு என்று
மாதம் தோறும் ஐந்து ரூபாய் தருவார்கள். அதைச் சேமித்து வைத்து, வருட
இறுதியில் ஐம்பது ரூபாய்க்கு புத்தகம் வாங்குவேன். இது போன்ற பழக்கம்
குழந்தையைத் தனக்கு விருப்பமான புத்தகத்தைத் தேடி வாங்கச் செய்யும்.”

        ”வாசிப்புப் பழக்கம் இப்போது தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காகவும்
சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை அறிந்து கொள்வதற்காகவும் என சுருங்கி
விட்டதே... ஏன்? ”

        ”அது உண்மையல்ல. அப்படி ஒரு தோற்றம் உருவாக்கப் பட்டிருக்கிறது. இன்றைய
பரபரப்பான உலகில் பணம் மட்டுமே குறிக்கோளாக முன் நிறுத்தப்படுகிறது.
சந்தையின் பகட்டும், கவர்ச்சியும் புத்தகங்களையும் தொற்றிக்
கொண்டிருக்கின்றது. ஆனால், எல்லாப் புத்தகங்களுக்கும் இது பொருந்தாது.
திருக்குறளை ஒருவன் ஆழ்ந்து வாசித்து உள்வாங்கிக் கொண்டால் அதைவிட சிறந்த
மேனேஜ்மென்ட் புத்தகம்  வேறு கிடையாது. அதே புத்தகத்தை தத்துவம், காதல்,
அரசாங்கத்தை எப்படி நிர்வகிப்பது உட்பட பலதையும் அறிந்து கொள்ளவும்
பயன்படுத்தமுடியும். அன்றைக்கும் சரி இன்றைக்கு சரி இலக்கியமானலும்,
அறிவியல் ஆனாலும் புத்தகங்களின் பிரதான நோக்கம் மனித வாழ்வை
மேம்படுத்துவதே.”

        ”கதை படிகும் பழக்கம் பரவலாகக் குறைந்துவிட்டதாகச் சொல்லப்படுவது 
உண்மைதானா?”

        ”அது பொய் என்பதை, லண்டனில் துவங்கி சென்னை வரை ‘ஹாரிபாட்டர்’ வாங்க
வரிசையில் நிற்கும் காட்சிகள் திரும்பத் திரும்ப நிரூபிக்கின்றன. வருடம்
தோறும் புத்தகக் க்காட்சிகளில் அதிகம் விற்பனையாவது கதைகள் தான்.
‘பொன்னியின் செல்வன்’ விற்கும் அளவிற்கு அகராதிகளோ, பொது அறிவுப்
புத்தகங்களோ விற்பதில்லை.

        ”ஒரு நல்ல வாசகர் இந்தப் புத்தகங்களை கட்டாயம் படித்திருக்க வேண்டும்
என்று நீங்கள் நம்புகின்ற 25 தமிழ்ப் புத்தகங்களைச் சொல்லுங்கள்.......”

        ”ஆண்டாளின் ‘திருப்பாவை, பாரதியார் கவிதைகள், சித்தர் பாடல்கள்,
கம்பராமாயணம்,  மகா பாரதம் (கும்பகோணம் ராமானுஜாச்சாரியார் பதிப்பு, ஒரு
புளிய மரத்தின் கதை-சுந்தர ராமசாமி, பெரியாரின் சிந்தனைகள்- ஆனை முத்து
தொகுப்பு, பொன்னியின் செல்வன் -கல்கி,, அம்மா வந்தாள்-தி.ஜானகிராமன்,
புயலிலே ஒரு தோணி- பா.சிங்காரம், கோபல்லகிராமம்- கி.ராஜ நாராயணன், அக்னி
நதி-குரதுல்துன் ஹைதர், ஆரோக்கிய நிகேதனம்-தாராசங்கர் பானர்ஜி, நீலகண்டப்
பறவையைத் தேடி-அதின்பந்தோபாத்யாய, அந்நியந் ஆல்பெர் காம்யு, தமிழக வரலாறு
(இரண்டு தொகுதிகள், அரசு வெளியீடு, குறுந்தொகை,  குட்டி இளவரசன்
-அந்த்வாந்த் செந்த் எக்சுபெரி, இடைவெளி-சம்பத் மற்றும் புதுமைப்
பித்தன், ஜெயகாந்தன், வண்னதாசன், வண்ணநிலவன், அசோக மித்திரன்,
கு.அழகர்சாமி ஆகியோரின் சிறு கதைகள்.”

        ” வருகின்ற புத்தகக்  காட்சி பற்றி....”

        ” என்னுடைய நான்கு புத்தகங்கள் வெளியாகின்றன. சென்னையின் 150
வருடத்துக்கு முந்தைய சரித்திரத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ள
’யாமம்’  என் புதிய புதினம். புத்தகக் காட்சி நிறுவனர்களுக்கு ஒன்று
சொல்ல விரும்புகின்றேன். புத்தகக் காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக
வசூலிக்கும் பணத்துக்கு,  டிக்கெட்டுக்குப் பதிலாக சிறு வெளியீடு ஒன்றை
இலவசமாகத் தரலாம். அதில் நூறு சிறந்த நூல்களின் பட்டியல் தொடங்கி தமிழின்
சிறந்த கவிதைகள், சிறு கதைகள், குழந்தைப் பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள்
என எவ்வளவோ செய்ய இயலும். இரண்டு டாலர், ஐந்து டாலர் புத்தகக் கடை என்று
அமெரிக்காவில் உள்ளன. அது போல் மலிவு விலைப் புத்தகக் கடைகள் நம்மூரிலும்
உருவாக்கப் படவேண்டும்.”

நன்றி: விகடன் புக்ஸ். (பிரைவேட் சர்குலேஷன் ஒன்லி).
ஓம். வெ.சுப்பிரமணியன்  aum

Reply via email to