ஓம்.
ஆராவமுதனை உங்களுக்குத் தெரியுமா! அவன் ஒரு மூங்கைப் பிள்ளை. மாற்றுத்திறன்
கொண்டவன், குள்ளமான சிறிய உருவம் படைத்தவன். உறவு என்று சொல்லி அவனுக்குத்
தெரிந்தவர் அன்னை ஒருத்திமட்டுமே. வயது முதிர்ந்து, வறுமையின் பிடியில் சிக்கி,
சுற்றத்தாரால் முழுவதும் புறக்கணிக்கப்பட்டு, கைவிடப் பட்டு, தன் பிள்ளை
ஆரவமுதனுக்காக மட்டுமே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, எப்படித்தான் இவன்
வாழப்போகிறான் என்ற விடைதெரியா கேள்வியினை மனத்தகத்தே கொண்டு, சதா சர்வ காலமும்
அவனுக்கு வேண்டி பிரார்த்தனை செய்துகொண்டே நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவள் அந்த
அன்னை

ஆராவமுதன் ஒரு தன்னை மறந்த தியாகப் பிரம்மம் போன்றவன். எவர் என்னசொன்னாலும் அதை
மனதுவந்து முடித்துக் கொடுக்கும் பேரறிவாளன். அந்த ஊரிலேயே உள்ள ஒரு உயர்ந்த
சாப்பாட்டுக் கடை முதலாளி அவனை தன்னிடம் பணியில் வைத்துக் கொண்டார். ஏதோ ஒரு
சில பண்டங்களையும் சோற்றையும் தின்று மூவர் செய்யும் பணியை தான் ஒருவனாகவே
செய்து முடிக்கும் அயராத உழைப்பு அவனுடையது, உழைப்பினைப் பார்த்து அவனுக்கு
மேலும் ஓய்வு தருவதற்குப் பதிலாக அவனுடைய யதர்த்தமான அப்பாவித் தன்மையைக் கண்டு
இரக்கம் சிறிதும் கொள்ளாமல் அவனை மேலும் சிரமப்பணிகளைச் செய்யுமாறு
சுமையேற்றும் சக ஊழியர்களை அவன் உணர்ந்து கொள்வதுமில்லை,  அவர்களின் மிது
வருத்தம் கொள்வதுமில்லை. எங்கேயோ இடி இடிக்கிறது, எங்கேயோ மழை பொழிகின்றது
என்றாற் போன்று எப்போதுதான் அவனுக்கு அந்தக் கடையினின்றும் பணி ஓழிந்து
வீட்டுக்குப் போவான் என்பது தெரிவதில்லை.. ஒரு கிழமைத் தாய் அங்கே இவனுக்காக
மட்டுமே காத்திருக்கிறாள் என்பதைக் கூட உணராதவனாய் உடல் சோர்ந்து அங்கு
வீட்டுக்குத் திரும்பும் போது, ,”மகனே! வந்தாயா?! என்று வினவும்கும் தாயிடம்
தன் முகத்தைத் தூக்கி அவளைப் பார்க்காமலேயே ஒரு உறுமலைக் காட்டிவிட்டு,
கிழவியின் வற்புறுத்தலுக்காக மட்டும் குளிர்ந்த நீரில் முகம் கைகால் கழுவி
கிழிந்து தரையில் விரிக்கப்பட்டிருக்கும் கோரம் பாயில்  சற்று அமர்வான் .
கிழவிதரும் ஏதோ ஒரு கஷாயத்தை வாங்கி அனாயாசமாக வயிற்றினுள் கொட்டிவிட்டு,
நிமிர்ந்தோ, மல்லாக்கவோ படுத்து அப்படியே தூங்கிப் போவான்.கிழவி அவன் அருகில்
உட்கார்ந்து எவரும் விரும்பிப் பார்க்காத தன் மகனின் கடின உழைப்பால் உரமேறிய
அவன் புஜங்களில் தன் வலிமையிழந்து பலம் குறைந்த கைகளால் தடவுவாள். அவன் அதை
உணர்கிறானா? அன்றி  மறந்துபோவானா? என்று உணர்ச்சியற்ற கட்டையாய் அவன்
கிடப்பதைப் பார்த்து ஒளியிழந்த இரு கண்களும் அருவியாய்ப் பொழிய தூங்காது அவனைப்
பர்த்தபடியே வெகு நேரம் விழித்திருந்து  கண்ணீர் வழிந்தோடிய முகத்தை அவன் மீது
வைத்துக்கொண்டு சாய்ந்து தூங்கியிருப்பாள்.

விடிந்ததும் அவன் காலைக் கடன் முடித்து கடைக்குச் சென்றால் இரவு 7-00 மணிக்கோ,
8-00 அல்லது 9-00 மணிக்கோ திரும்பி வருவான். அப்போதிலிருந்து ஒரு மாய இருள்
அங்கு சூழ்ந்தால் போல் கிழ அன்னை  சுருங்கி போவாள். அவன் வரும் நேரம் எதிர்
நோக்கி காத்திருப்பது மட்டும் தான் அவளுடைய பிரார்த்தனை. இன்னும் எத்தனை
நாட்கள் இவனுடன் நான் இருப்பேன் ஈச்வரா, அவனை காத்துக்கொள்”

அவன் வாய் பேசமாட்டான். வாயினால் சில ஓசைகளை மட்டுமே எழுப்பமுடியும். அவன்.
நன்மையோ பிறர் தரும் துன்பமோ, தீமையோ எதுவும்  தெரிந்து கொள்ள முடியாதவன்.

 கடைக்கு சரக்கு விற்பனை செய்பவர்சிலர் ஓடிவந்து ஆராவமுதனின் தாய் இறந்து
போய்விட்டதாகச் சொன்னார்கள். முதலாளி  கேட்டார், ஆராவமுதனிடம் சொன்னீர்களா?
இல்லை யென்றனர். நான் அவனிடம் பக்குவமாகச் சொல்கிறேன் என்று சொன்னவர் கல்லாப்
பெட்டியைத் திறந்து பணம் தந்து  சிலரை அனுப்பி அந்திமக் கிரியைகள் செய்வதற்கான
பொருள்கள், உப பொருள்கள்  வாங்கி வருவதற்கும் , கொள்ளி போடுவதற்கும் ஏற்பாடு
செய்யச்சொல்லிவிட்டு ஆராவமுதனை அழைத்து வரச்சொன்னார்.

 பார்வையற்ற ஒருவனிடம் அழகைப் பற்றி எப்படி விவரிக்கமுடியாதோ அது போல அம்மா
இறந்து போய்விட்டாள் என்ற செய்தியை  அறிவிக்க  முதலாளிக்கு முடியவில்லை.
அவனைக் கட்டி யிழுத்தாற்போன்று அவன் கையிலிருந்த பணியைப் பிடுங்கிவைத்துவிட்டு
அவனுடைய வீட்டிற்கு   அழைத்துச் சென்றார்கள்.

எப்போதும் போவது போன்று அந்த வீட்டிற்குள் ஆராவமுதன் சென்றான். வழக்கமாக அவன்
வரும்போது வழிமேல்  விழிவைத்திருக்கும் அன்னை ஏன் தரையில் படுத்திருக்கிறாள்.
அவனுக்கு உணர்த்துவது யார்? இழுத்து வைத்து அவனைக் குளிப்பாட்டி சில
சாங்கியங்களின் உச்சாடனத்துடன் இறுதிப் பயணமாக காட்டிற்கு அனுப்பிவைத்தார்கள்.
கையில் எரி சுமந்து அன்னைக்கு எரியூட்டினான். ஏதோ கூட்டமாகப் பலர் வந்து ஏதோ
சொல்லி ஏதோ செய்து அவனைத்  தனியே விட்டுவிட்டு ஏகினார்கள்.

அது வரை அங்கு என்ன நிகழ்ந்தது என்று உணராமல் இருந்தான். ஏதோ ஒரு பொட்டலம்
அவனுக்குப் பசியமர்த்தியது.
படுத்தான் தூங்கிப் போய்விட்டான்.

ஏதோ ஒன்று அங்கு நிகழ்ந்திருக்கின்றது, என்ன? ஏன்? எப்படி? எதுவும்
புரியவில்லை. ஏதோ ஒன்று குறைகின்றது? என்னவென்று  சிந்திக்கக் கூட இயலாதவன்..
தூக்கம் பிடிக்கவில்லை. என்ன நடந்தது? ஏன் எல்லோரும் உடன் வர எங்கேயோ
போய்வந்தோம்! ஏன் அம்மா என்னோடு அப்போது பேசவில்லை இன்று? ஏதாவது கலந்து கஷாயம்
போல காரமாய்த் தருபவள் தரவில்லையே? கண்ணைக் கலக்கமாய்க் கொண்டு எல்லோரும்
என்னையே பார்த்து அழுவது போல் தெரிந்ததே! ஏன்?  ஏன் அம்மாவை நடக்கவிடாமல்
சுமந்து சென்றனர்? ஒரே கலக்கமாக் இருந்தது. சாப்பிடவும் முடியவில்லை. அப்படியே
உட்கார்ந்து கொண்டே தூணில் சாய்ந்து தூங்கிப் போனான்.

 உடல் சரிந்து தரையில் படுத்தபோது உடல் வலித்தது. என்றும் ஆதரவாகத் தடவும்
மெல்லிய கரம் ஏன் இன்று தோள்களையும் நடு முதுகினையும் தடவி வருடவில்லை? எங்கே
அந்த மெல்லிய உருவம்? இதுவரை நடந்த அனைத்தும் அவன் நெஞ்சில் இப்போது தூக்கம்
கலைந்தபோது நினைவில் இல்லை. பின் கட்டில் எட்டிப் பார்த்தான். அம்மா
உட்கார்ந்து சாய்ந்துகொண்டிருக்கும் பலகை காலியாக இருந்தது. கண்களை உயர்த்திப்
பார்த்தான். அம்மா உடுத்தி நனைத்து கூரையின் இரண்டு ஓரமூங்கில்களில்
காயப்போட்டு தொங்கும் வண்ணம் சிதைந்து பழைமையாய் ஆகிவிட்ட சேலை காணப்பட்டது.
சற்றே எழுந்து அந்தச் சேலையைக் கையில் உருகி எடுத்து முகத்தோடு
வைத்துக்கொண்டான். ஏதோ ஒன்று தன்னை விட்டு விலகி, விலகிப் போயே போய்விட்டது
என்பது சான்றளிக்கப்பட்டது போன்று உணர்ந்தான், அவன் மூங்கை வாயால் ”அம்மா !
அம்மா!!‘’ என்று அழுதான். அவன் உடலும் உள்ளமும் அம்மாவின் பிரிவை அவன் உடலில்
ஊடுருவித் திணித்தது. ஏதோ ஒன்று புரிந்தது. இதுவரை அழாத ஆராவமுதன் விக்கி
விக்கி அழுதான்.
ஓம்வெ.சுப்பிரமணியன்

Reply via email to