---------- Forwarded message ---------- From: காமேஷ் <[email protected]>
வாஷிங்டன் : அமெரிக்கா தனது கடன் உச்சவரம்பை எட்டிவிட்ட நிலையில், அந்த உச்சவரம்பை மேலும் அதிகரிப்பது குறித்து, அந்நாட்டு காங்கிரஸ் சபையில் இன்று ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. இந்த உச்சவரம்பு அதிகரிக்கப்படாவிட்டால், அமெரிக்கா தனது கடன்களைத் திருப்பியளிக்க முடியாமல் போய்விடும். அதனால், இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. அமெரிக்கா, வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் வாங்கிய கடன் தொகை, கடந்த மே மாதம் 14.3 டிரில்லியன் டாலரைத் தொட்டது. இது தான் அமெரிக்காவின் கடன் உச்சவரம்புத் தொகை. இதையடுத்து, அந்நாட்டு நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் கடன் உச்சவரம்பு மாற்றியமைக்கப்படா விட்டால், நாடு நிதி நெருக்கடியைச் சந்திக்கும் என்று எச்சரித்திருந்தது. (1 டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி. 1 டிரில்லியன் டாலர் என்பது ஒரு லட்சம் கோடி டாலர்.) ஒபாமா ஆலோசனை: கடந்த ஒரு வார காலமாக, வெள்ளை மாளிகையில், அதிபர் பராக் ஒபாமா தலைமையில், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த எம்.பி.,க்களுடன் ஐந்து முறை ஆலோசனைகள் நடந்தன. அதில், கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட வேண்டும், நாட்டின் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட வளமான அமெரிக்கர்களின் வரி அதிகரிக்கப்பட வேண்டும், என அதிபர் ஒபாமா கூறினார். ஆனால், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி எம்.பி.,க்கள், "கடன் உச்சவரம்பை அதிகரிக்க வேண்டுமானால், வரியை அதிகரிக்கக் கூடாது. அரசின் செலவினங்களைப் ஆண்டுக்கு 111 பில்லியன் டாலர் வீதம் குறைக்க வேண்டும்' என நிபந்தனை விதித்தனர்.இதனால், ஐந்து கட்ட ஆலோசனையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இறுதி நாள்: கடன் உச்சவரம்புத் தொகையை அதிகரிக்க வேண்டுமானால், அமெரிக்க அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கான தீர்மானத்தை, இம்மாதம் 22ம் தேதிக்குள் எடுக்க வேண்டும்; அதையடுத்து, சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்; மொத்தத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் முடித்து விட வேண்டும் என்று ஒபாமா தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று, அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், செலவினங்களைக் குறைத்து, கடன் உச்சவரம்பை அதிகரிப்பதற்காக சட்டத் திருத்தத்திற்கு வழி செய்யும், "கட், கேப் அண்டு பேலன்ஸ்' என்ற மசோதாவை எதிர்க்கட்சியின் மூத்த தலைவரும், பிரதிநிதிகள் சபை சபாநாயகருமான ஜான் பாய்னர், கொண்டு வர உள்ளார். இம்மசோதா, நிறைவேறுமா னால் ஒபாமா அரசு குடியரசு கட்சிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டதாகும். மேலும், செனட் சபையில் அரசு சார்பில் மசோதா கொண்டு வர முடியாது. இதனால் அவருக்கு பெரும் அரசியல் நெருக்கடி ஏற்படும். இந்த மசோதாவை நிறைவேற விடாமல், அரசின் மசோதாவை வெற்றி பெற செய்யும் முயற்சியில் ஒபாமா உள்ளார். இது நடக்கையில் அரசு மசோதா நிறைவேறாதவாறு அபாய நிலை ஏற்படும் குழப்பமான சூழ்நிலை உள்ளது. இந்தியா, சீனா பாதிக்கப்படுமா? : கடந்தாண்டு அமெரிக்க வங்கிகள் தொடர் மூடல் நிகழ்ந்த போது, இந்தியா உட்பட பல நாடுகள் அதன் பாதிப்பை சமாளிக்க வேண்டியதாயிற்று. அமெரிக்கா கடனில் மூழ்கினால், கடன் மதிப்பீட்டு நிறுவனங்களான "மூடிஸ்' உள்ளிட்டவை, அமெரிக்காவின் கடன் நம்பகத் தன்மை குறியீட்டைக் குறைக்க நேரிடும். இதையடுத்து, அந்நாட்டில் உள்ள வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறும். அதனால், டாலரின் மதிப்பு சரியும். இந்தத் தொடர் சரிவுச் சங்கிலியின் இறுதியில், அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொண்டுள்ள சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் சிக்கலுக்குள்ளாகும். அமெரிக்காவுக்கு 1 டிரில்லியன் டாலர் கடன் பத்திரங்கள் வடிவில், சீனா கடன் அளித்துள்ளது. "இப்பிரச்னையை, முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் தீர்க்க வேண்டும்' என, அமெரிக்காவை சீனா கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவை பொருத்தவரை, "தகவல் தொழில்நுட்பத் துறையில், "அவுட் சோர்சிங்' எனப்படும் வெளியிடப் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்காவுடனான வெளியிடப் பணி, இந்திய அன்னியச் செலாவணியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால், தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியும் பிற ஏற்றுமதிகளும் பெருமளவில் பாதிக்கப்படும்' என நிபுணர்கள் கூறியுள்ளனர். குடியரசுக் கட்சி புகார்: இதற்கிடையில், அமெரிக்காவின் கடன் பிரச்னை குறித்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒபாமாவின் நிர்வாகம் மிகைப்படுத்தி பேசி வருவதாக, குடியரசுக் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். உள்நாட்டில் வரியை அதிகரிப்பது, செலவினங்களைப் பெருமளவில் குறைப்பது, கடன் உச்சவரம்பை அதிகரிப்பதன் மூலம் மேலும் சில கடன்களை வாங்கிச் சமாளிப்பது ஆகியவற்றின் மூலம் அமெரிக்க பொருளாதாரம் சரிந்து விடாமல் காக்க முடியும் என்பது அவர்களின் வாதமாக உள்ளது. எனினும், இதுகுறித்து அவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும், அமெரிக்கா பொருளாதார நெருக்கடிக்கு தற்போது ஆட்பட்டால், கடந்த 2008ல் உலகம் சந்தித்ததை விட, மிக அபாயகரமான பொருளாதார நெருக்கடியை உலக நாடுகளும் சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். கடன் மதிப்பீட்டு குறியீடு : உலகளவில், தனியார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், மாநில மற்றும் மத்திய அரசுகள் நிதி திரட்டுவதற்காக, கடன் பத்திரங்கள் வெளியிடும். கடன் பத்திரங்களை வெளியிடுவோர் கடனை திருப்பிச் செலுத்தும் தகுதியுடையவர்களா, இல்லையா என, ஆராய்ந்து அவற்றுக்கு மதிப்பீட்டுக் குறியீடுகள் அளிக்கப்படும். இந்தக் குறியீடுகளை அளிக்கும் நிறுவனங்கள், "கடன் மதிப்பீட்டு ஏஜன்சிகள்' எனப்படும். பிரபல ஏ.எம்.பெஸ்ட், டன் அண்டு ப்ராட்ஸ்ட்ரீட், ஸ்டாண்டர்டு அண்டு புவர் (எஸ் அண்டு பி) மற்றும் மூடிஸ் போன்ற ஏஜன்சிகள் தங்களுக்கென பிரத்தியேக குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன. "எஸ் அண்டு பி' ஏஜன்சியைப் பொருத்தவரை, மிக நம்பகத் தன்மை வாய்ந்த நாட்டுக்கு "ஏ.ஏ.ஏ' என்பதும், நம்பகத் தன்மை இழந்துவிட்ட நாட்டுக்கு "டி' என்பதும் குறியீடாகப் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கா தற்போது, "ஏ.ஏ.ஏ' குறியீட்டைப் பெற்றுள்ளது. ஆனால், "மூடிஸ், எஸ் அண்டு பி' உள்ளிட்ட பல ஏஜன்சிகள், அமெரிக்காவின் "ஏ.ஏ.ஏ' குறியீட்டைக் குறைக்கப் போவதாக மிரட்டியுள்ளன. இதனால், அமெரிக்காவின் டாலர் மதிப்புக்கு சவால் ஏற்படும். குடியரசு கட்சி மிரட்டல் ; நடுத்தர மக்களுக்கான சுகாதாரத் திட்டத்தை, எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் பலத்த எதிர்ப்பை மீறி கடந்தாண்டு ஒபாமா கொண்டு வந்தார். அடுத்தாண்டு வர உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் , ஜனநாயகக் கட்சி சார்பில் இரண்டாவது முறையும் போட்டியிட ஒபாமா முடிவெடுத்துள்ளார். தற்போதைய சிக்கலில் குடியரசுக் கட்சியின் ஒத்துழைப்பு இருந்தால் தான், ஒபாமாவின் ஆட்சி பிழைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதை தங்கள் துருப்புச் சீட்டாக பயன்படுத்தக் கருதியுள்ள குடியரசுக் கட்சி, சுகாதாரத் திட்டம் வாபஸ் உள்ளிட்ட சில மிரட்டல்களை முன்வைத்துள்ளது. அந்த மிரட்டல்களின் அடிப்படையில் தான் இன்று, பிரதிநிதிகள் சபையில் மசோதா கொண்டு வர உள்ளது. தினமலர் -
