தமிழ் என்னும் விந்தை!

[image: love-poems-do-they-still-exist-14]

சதுரங்க பந்தம் -1 - ச.நாகராஜன்

சதுரங்க துரக கதி பந்தம்


உலகில் உள்ள சில மொழிகளில் மட்டுமே சித்திர கவிகளை அமைக்க முடியும். தமிழில்
அற்புதமான சித்திர கவிகள் ஏராளம் உண்டு. இவற்றில் ஒன்று சதுரங்க பந்தம். இந்த
சதுரங்க பந்தங்களிலும் பல்வேறு வகைகள் உண்டு. அவற்றில் ஒன்று சதுரங்க துரக கதி
பந்தம். சதுரங்க விளையாட்டில் ஒரு குதிரை எப்படித் தாவி தாவி கட்டம் விட்டுக்
கட்டம் மாறுமோ அது போல அந்தந்த கட்டங்களில் சொற்கள் வருமாறு அமைக்க வேண்டும்.
அதே சமயம் கவிதையின் இலக்கணமும் மீறக் கூடாது; நல்ல பொருளும் அமைந்திருக்க
வேண்டும். இப்படிப்பட்ட மிகவும் கஷ்டமான விதிகளுக்கு உட்பட்டு கவிதை இயற்றுவது
மிகவும் கடினம். பெரும் தமிழ்ப் புலவரான வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார்
இப்படிப்பட்ட பந்தங்கள் இயற்றுவதில் வல்லவர். தமிழ் மீதுள்ள பற்றின் காரணமாக
சூரியநாராயண சாஸ்திரியார் என்ற பெயரை பரிதிமால் கலைஞர் என்று மாற்றிக்
கொண்டவர் இவர்.
சித்திர கவி விளக்கம் என்ற அரிய தமிழ் நூலைப் படைத்து அதில் 22 வகை சித்திர
கவிகளை விளக்கியுள்ளார். அதில் இந்த பந்தமும் ஒன்று.

சதுரங்க துரக கதி பந்தப் பாடல் இது தான்:-

தேரினெந் நெஞ்ச நீ திரித லென்கொலோ

நாரொடும் வியன்றமி ணயந்து தூவிய

காரெனும் பரிதிமால் கணங்கொள் பூவரா

ரீரடி யேழைசூட் டியையப் போற்றுவாம்

இந்தப் பாடலில் உள்ள எழுத்துக்களைக் குதிரை பாயும் போக்கில் அமைக்க
ஆரம்பித்தால் அது கீழ்க்கண்ட விதமாக சதுரங்கத்தின் 64 கட்டங்களில் அமையும்.

[image: bandham chathur]

சதுரங்க விளையாட்டில் குதிரை எப்படிப் பாயும் என்பதை அறியாதவர்கள் கீழ்க்கண்ட
கட்டங்களில் வரிசையாகப் பாடலின் எழுத்துக்கள் அமைவதைக் கண்டு மகிழலாம்:-

1, 11, 28, 34, 17, 2, 19, 4
21, 15, 5, 20, 10, 25, 35, 29
39, 56, 62, 52, 42, 57, 51, 41
58, 43, 49, 59, 53, 38, 32, 47,
64, 54, 37, 31, 48, 63, 46, 61
44, 50, 60, 45, 55, 40, 30, 36
26, 9, 3, 13, 23, 8, 14, 24
7, 22, 16, 6, 12, 27, 33, 18

மிகவும் கஷ்டமான இந்தப் பாடல் அமைப்பில் பரிதிமால் கலைஞர் இன்னும் இரண்டு அரிய
விஷயங்களை அமைத்துள்ளார். கட்டங்களின் வலது கோடியிலிருந்து குறுக்காக இடது
கோடி வரை உள்ள எட்டு கட்டங்களில் (மஞ்சள் வண்ணத்தில் சுட்டிக்
காட்டப்பட்டுள்ளது) தனது பெயரான சூரிய நாராயணன் என்பதை அமைத்துள்ளார். அத்தோடு
பாடலில் தனது தமிழாக்கப் பெயரான ‘பரிதிமால்’ என்பதை மூன்றாம் வரியில்
அமைத்துள்ளார்!
பாடலின் பொருளை அவரே தனது சித்திர கவி விளக்கம் என்ற நூலில் கொடுத்துள்ளார்.
1939ஆம் ஆண்டு இந்த நூல் வெளியானது.

அவர் விளக்கும் பொருளைப் பார்ப்போம்:-

தேரின் – ஆராயுமிடத்து
எம் நெஞ்சம் – எம் நெஞ்சமே!
நீ திரிதல் என் கொலோ – நீ கண்ட இடங்கள்தோறும் சென்று திரிதல் யாது கருதியோ?
நாரொடும் – அன்போடு
வியன் தமிழ் நயந்து தூவிய – (மாணாக்கர்க்கு) பெருமை வாய்ந்த தமிழினை
விரும்பிச் சொரியும் (போதிக்கும்)
கார் எனும் பரிதி மால் – மேகத்தினை ஒத்த சூரியநாராயணப் பெயர் கொண்ட ஆசிரியனது
கணம் கொள் பூவர் ஆர் இரண்டு அடி – கூட்டமாகப் பொருந்திய உபய பாதங்களும்
ஏழை சூட்டு இயைய போற்றுவாம் – எளியேமாகிய எமது உச்சியிற் பொருந்துமாறு அவற்றை
வணங்குவோம்

“பலவேறு நற்பயன்களையும் அளிக்கும் செந்தமிழ் மழையினை மாணாக்கர்க்குச் சொரிந்த
கைம்மாறு கருதாத மேகம் போன்ற சூரியநாராயண வள்ளலினது பாத பதுமங்களை உச்சியிற்
கொண்டு (நமஸ்கரித்து) வணங்குவதே காரியமாதலில், நெஞ்சமே! நீ பல விஷயங்களிலும்
போய்ப் பயனின்றித் திரிவதை விட்டு எம்மோடு கூட வணங்க வருவாய்” என்று நெஞ்சை
விளித்துக் கூறியதாம் இச்செய்யுள்.


என் கொல் ஓ! – கொல், ஓ இரண்டும் அசை. தமிழ் நயந்து என்பது தமிணயந்து என்று
ஆனது. வீரசோழியம் சந்திப்படலத்து “ஐம்மூன்றதாம்” என்ற கட்டளைக் கலித்துறையில்,
“மெய்ம்மாண்ப தாநவ்வரின் முன்னழிந்து பினிக்கணவ்வாம்” என்ற விதியால் அமைந்தது.
அன்றி மரூஉ மொழியுமாம். பூவர் – மொழி இறுதிப் போலி

இப்படி விளக்கவுரையையும் அவரே தந்துள்ளார்.


அத்தோடு வல்லி பரிணய நாடகத்தில் இது ஆசிரிய வணக்கச் செய்யுள் என்ற
குறிப்பையும் தருகிறார்.

அற்புதமான கவிதையைப் படைத்த தமிழ்ப் புலவரைப் போற்றுவோம்; சதுரங்க பந்தம்
கண்டு வியப்போம்!

-- 

    <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


[image: BasicShapepoetry]

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



 *v **a n a k k a m**  S u b b u*  [image: ՙ՚ՙ՚ NOBUY SPIN CYCLE]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to