senthilvayal.com
<http://senthilvayal.com/2015/05/11/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be-%e0%ae%ae/>
Read
Later
வீடு வாங்கப்போறீங்களா? மிரட்டும் ரியல் எஸ்டேட் மசோதா

   - by Vayal
   -  May 11, 2015
   -  1 min read
   -  original
   
<http://senthilvayal.com/2015/05/11/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be-%e0%ae%ae/>

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு, வாடகை வீட்டில் வசிக்கும் ஒவ்வொரு
குடும்பத்தினருக்கும் உண்டு. ஆனால் அது, அவர்களுக்கு எட்டாத தூரத்தில் உள்ளது.
நடுத்தர வகுப்பினர், எப்படியாவது வங்கியில் கடன் பெற்று, சொந்த வீட்டுக் கனவை
நனவாக்க முயற்சிக்கிறார்கள். நேர்மையற்ற பில்டர்களால் பல சோதனைகளையும்
துயரங்களையும் அவர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அந்தப் பிரச்னைகளுக்கு
எல்லாம் தீர்வு தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை
மசோதா, பில்டர்களுக்கு சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கெனவே, முந்தைய ஐ.மு கூட்டணி ஆட்சியில், ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை
மற்றும் மேம்பாடு) மசோதா – 2013 கொண்டுவரப்பட்டது. இப்போது அதில், பல
திருத்தங்களை பி.ஜே.பி அரசு செய்துள்ளது. அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய
முயன்றபோது, எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதாவை
தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த மசோதாவை எதிர்க் கட்சிகள் எதிர்ப்பதற்கு என்ன காரணம்?

“காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மசோதாவில் 118
திருத்தங்களை பி.ஜே.பி அரசு செய்துள்ளது. வீடு வாங்குபவர்களுக்கு சாதகமாக
இருந்த பல முக்கிய அம்சங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன. பில்டர்களுக்கு சாதகமாக
மசோதா திருத்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே இருந்த வெளிப்படைத்தன்மை முற்றிலுமாக
அகற்றப்பட்டு உள்ளது.

அடுக்குமாடி உள்ளிட்ட குடியிருப்புகளைக் கட்டும்போது கட்டுமான
நிறுவனத்துக்கும் வீடு வாங்குபவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்படுகிறது.
ஆனால், அந்த ஒப்பந்தப்படி கட்டுமான நிறுவனங்கள் நடந்துகொள்வது இல்லை.
குறிப்பிட்ட காலவரையறைக்குள் வீட்டை கட்டி முடித்து நுகர்வோரிடம் ஒப்படைப்பது
இல்லை. இதுபோன்ற பிரச்னைகளுக்குப் பழைய மசோதாவில் தீர்வுகள் இருந்தன.
அதையெல்லாம் மாற்றி இருக்கிறார்கள்.

அதேபோல, கார்பெட் ஏரியா என்ற தரைப்பரப்பில் எதைச் சேர்க்கலாம், எதைச்
சேர்க்கக் கூடாது என்று பழைய மசோதாவில் தெளிவாக சொல்லப்பட்டு இருந்தது. ஆனால்
இதில், சுவர் மற்றும் பிற பகுதிகளையும் சேர்க்கவும், மொத்த கார்பெட் ஏரியாவில்
கூடுதலாக 20 சதவிகிதம் சேர்க்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இது வீடு
வாங்கும் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அடுக்குமாடி
குடியிருப்பு கட்டுவதற்கு டவுன் பஞ்சாயத்து, சி.எம்.டி.ஏ போன்ற அமைப்புகளின்
ஒப்புதலைப் பெறவேண்டும். அந்த ஒப்புதலைப் பெற்ற பிறகு, பிளானில் எந்த
மாற்றமும் செய்யக் கூடாது என்று பழைய மசோதாவில் இருந்தது. ஆனால் இப்போது,
தவிர்க்க முடியாத சூழலில் பிளானில் மாற்றங்கள் செய்யலாம் என்று மாற்றி
இருக்கிறார்கள். இதுவும் வீடு வாங்குபவர்களுக்கு பாதகமான ஒன்று.

வீடு வாங்குபவர்கள் செலுத்தும் பணத்தில் 70 சதவிகிதத்தை வங்கியில் தனியாக ஒரு
கணக்கு தொடங்கி டெபாசிட் செய்ய வேண்டும் என்று பழைய மசோதாவில் இருந்தது.
அப்படிச் செய்வதன் மூலம், அந்தப் பணத்தை பில்டர்கள் வேறு நோக்கங்களுக்கு செலவு
செய்ய முடியாது. ஆனால் அதை, 50 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என்று
கார்ப்பரேட் கட்டுமான நிறுவனங்கள் கொடுத்த நிர்ப்பந்தத்துக்கு பி.ஜே.பி அரசு
அடிபணிந்துள்ளது. இதுவும் வீடு வாங்குபவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்”
என்கிறார் காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா.

இந்த மசோவில் சில குறைகளும் ஆட்சேபத்துக்குரிய அம்சங்களும் இருந்தபோதிலும்
இந்த மசோதா சில நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக சிலர்
நம்புகின்றனர்.

“ரியல் எஸ்டேட் துறையை தரப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இந்த மசோதாவைப்
பார்க்கலாம். ரியல் எஸ்டேட் தொடர்பான விதிமுறைகள் இந்தியா முழுவதும் ஒரே
மாதிரியாகக் கொண்டு வரப்படும்போது அது, மக்களுக்கு நிச்சயமாக நல்ல
விஷயமாகத்தான் இருக்கும். வீடு வாங்குபவர்களிடம் வாங்கும் முன்பணத்தை வேறு
நோக்கங்களுக்கு பில்டர்கள் செலவிடுவதும், அதனால் வீடு வாங்குவோர்
பாதிக்கப்படுவதும் ஓரளவு குறையும். வெளிப்படைத்தன்மை கொஞ்சம் அதிகரிக்கும்”
என்கிறார் ரியல் எஸ்டேட் தொடர்பான கட்டுரையாளர் செல்லமுத்து குப்புசாமி.

இதில், சீரியஸாகப் பார்க்க வேண்டிய ஒரு விஷயம். ரியல் எஸ்டேட் துறையில்
ஏராளமாக கறுப்புப்பணம் புழங்குகிறது. இதை, கறுப்புப்பணம் குறித்த ஒரு வெள்ளை
அறிக்கையில் மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது. தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள்,
என்.ஆர்.ஐ-கள், மாஃபியாக்கள், பிரபலங்கள் ஆகியோர் ரியல் எஸ்டேட்டில்
கறுப்புப்பணத்தை முதலீடு செய்து அதை வெள்ளையாக மாற்றுகிறார்கள். ஆனால்,
முந்தைய காங்கிரஸ் அரசில் கொண்டுவரப்பட்ட மசோதாவிலோ, இப்போது பி.ஜே.பி அரசு
கொண்டுவந்துள்ள மசோதாவிலோ, ரியல் எஸ்டேட் தொழிலில் கறுப்புப்பணதைத் தடுக்கவும்
கட்டுப்படுத்தவும் எதுவும் சொல்லப்படவில்லை. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை
விற்பனை செய்ய முடியாமல் கட்டுமான நிறுவனங்கள் திணறிக்கொண்டு இருக்கும்
நிலையிலும், வீட்டு விலை குறையாமல் இருப்பதற்குக் காரணம், ரியல் எஸ்டேட்டில்
கொட்டப்பட்டிருக்கும் கறுப்புப்பணம்தான்.

இது, ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா என்ன

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to