*சாம்பலில் அவதரித்த கோரக்கர் சித்தர்*

 [image: Picture]

கோரக்கர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று போகர்
கூறுகிறார். இவர் வட இந்தியாவை சேர்ந்த கோரக்கர் (மராட்டியர்) ஆயினும்
தமிழ்நாட்டில் உள்ள சதுரகிரியை நோக்கி பயணம் செய்து போகரை தோழராகக் கொண்டார்.
சட்டைமுனி, கொங்கணர் இவருக்கு நெருக்கமானவர்கள்.


*கோரக்கர் சித்தரின் வாழ்க்கை*


சித்த புருஷர்களில் பிறப்பிலேயே விசேஷமான தன்மை கொண்டவர். விபூதி எனில்
சாம்பல் என்று ஒருபொருளும், ஞானம் என்று மறுபொருளும் உண்டு. அப்படிப்பட்ட
விபூதியிலிருந்து பிறந்தவர் இவர், என்பார்கள். ஆணும் பெண்ணும் கூடி
அந்தக்கருவால் வளரும் உயிர்கள் கருமஞ்சார்ந்தவை... ஆனால் அவ்வாறு இல்லாமல்,
விதிவிலக்காக பல மனித உயிர்களும் தோன்றியுள்ளன. அப்படி விசேஷமாகப்
பிறந்தவர்களுக்கு ஒரு பெரிய கடமை இந்த உலகத்தில் காத்திருந்தது.
இந்தப்பட்டியலில் கோரக்கரையும் இவரது குருவான மச்சமுனியையும் சேர்க்கலாம்.


மச்சமுனியும் சரி, கோரக்கரும் சரி சிவாம்சத்துடனும் முழுமையான சிவனருளோடும்
பிறந்தவர்கள்! அதிலும் மச்சமுனியின் பிறப்பு மிக விசேஷமானது. தடாகம் ஒன்றின்
கரையில் சிவபெருமான் உமாதேவியாருடன் பிறப்பு மற்றும் இறப்பு பற்றியும்
உயிர்களின் தோற்றம் மாற்றம் பற்றியும் பலவாறாகப் பேசியபடி இருக்க, அதைக்
கேட்டபடி இருந்த உமா தேவிக்குக் கண்ணயர்ச்சி ஏற்பட்டு உறக்கம் வந்து விட்டது.
ஆனால், தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த தாய் மீன் ஒன்று, அதைக் கேட்டபடி
இருந்தது. மீனுக்கு ஏது காது?அதற்கு ஏது மொழியறிவு? அதனால் எப்படிக் கேட்க
முடியும்?  என்ற கேள்விகள் எல்லாம் இன்றைய விஞ்ஞான பாதிப்பு நமக்குள்
மூட்டுபவை.


ஆனால் இந்தச் சம்பவங்களை அன்றைய நாளில் எழுதி வைத்தவர்கள், இப்படிப்பட்ட
கேள்விகளை எல்லாம் கேட்கத் தெரியாதவர்கள் அல்லர். ஆனால், அவர்களுக்கெல்லாம்
பிறர் கூற வேண்டிய அவசியமே இன்றி இதற்கெல்லாம் விடைகள் தெரிந்திருந்தன.
எங்காவது பட்சிகள் பேசினால், நாகங்கள் காவல் பணிகளில் இருந்தால் அவை, பட்சி
வடிவம் கொண்ட ஒரு தேவன் என்றோ தேவதை என்றோதான் கருதினார்கள். அவர்கள் வரையில்
அவ்வாறு பட்சியாகவும் நாகமாகவும் தேவர்கள் இருக்க நிச்சயம் ஒரு காரணம்
இருந்தது.


அந்தத் திருக்குளத்து மீனும் கூட மீன் வடிவத்தில் இருந்த ஒரு தேவதை போலும்...
அந்த தேவதை மீனின் வயிற்றில் ஒரு குஞ்சு மீன்! அந்த மீன், கொடுத்து வைத்த
மீன். கருவில் திருகொண்ட மீன். உலக நாயகன், உலகநாயகிக்குக் கூறிய உபதேச
மொழிகளை முழுவதுமாகக் கேட்க கொடுத்து வைத்திருந்த மீன் அது. ‘என்று ஒரு தேவ
குரலை அது செவி மடுக்கிறதோ, அன்று அதற்கு சாபவிமோசனம்’ என்று இருந்திருக்க
வேண்டும். அந்தக் குஞ்சு மீன், ஒரு பாலகனாய் மாறி உமாதேவன் முன்னால் காலை
உதைத்துக் கொண்டு அழுதது. தாய்மீனும் மானிட வடிவம் கொண்டு ஓடிவந்து அணைத்துக்
கொண்டு, அப்படியே உலக நாயகன் நாயகி காலில் விழுந்தாள். மச்சமாய் இருந்து, இறை
உபதேசம் கேட்டு பிறந்ததால் மச்சேந்திரநாதன் என்ற திருப்பெயரும் ஏற்பட்டது.
கூடவே, அந்த ஈஸ்வரனின் பரிபூர்ண கிருபா கடாஷமும் மச்சேந்திரனுக்குக்
கிட்டியது! இப்படி பிறக்கும் போதே சித்த நிலை கொண்டு பிறந்தவர் மச்சேந்திரர்
என்கிற மச்சமுனி. இவரால் கோரப் பெற்றவர்தான், கோரக்கர்.


எப்படி? மச்சமுனி ஒருநாள், பிட்சை கேட்டு வந்தபடி இருந்தார். உடம்பை
வளர்த்தால்தானே உயிரைப் பேண முடியும்? உடம்பு வளர உணவு வேண்டுமே..? பசியும்
தாகமும் உடம்போடு ஒட்டிப் பிறந்ததாயிற்றே... அல்ப வித்தைகளால், காற்றை மட்டுமே
ஆகாரமாகக் கொண்டு உயிர் வாழ முடியும்தான்... மச்சமுனியோ, அதைப்பிறகு
பார்த்துக் கொள்ளலாம். சிறிது காலம் பிட்சை கொண்டு உடம்பைப் பேணுவோம் என்று
முடிவு செய்து விட்டார். இப்படி சித்த புருஷர்கள் மனதில் பிட்சை கேட்கவேண்டும்
என்று தோன்றுவதற்குப் பின்னால் ஒரு கணக்கு உள்ளது.


அவர்கள் அப்படிப் பிட்சை கேட்டு வரும் போது, பிட்சையிடும் வாய்ப்பு
ஒருவருக்குக் கிடைக்கிறது என்றால், அதற்குப் பின்னாலும் ஒரு கணக்கு உள்ளது.
நல்ல சாஸ்த்ர ஞானம் உள்ளவர்கள் குரு தரிசனத்தை இருள் விலகப்போகிறது என்பதற்கான
முன்னோட்டமாகவே பார்ப்பார்கள். அதேபோல அவர்களுக்குப் பணிவிடை செய்யும்
வாய்ப்பை, கர்மத்துயரத்தை விலக்கக் கிடைத்த ஒரு மறைமுக சந்தர்ப்பமாகவே
கருதுவார்கள். ஆனால் சராசரிகளோ, சித்த புருஷர்களை பிச்சைக்காரர்களாகவே
பார்ப்பார்கள்.


மச்சமுனி பிச்சை கேட்டு வரும்போது, ஒரு மாதரசி கூட அப்படித்தான் பார்த்தாள்.
அவளுக்கோ பிள்ளைப் பேறு இல்லை. அவள் ஜாதகம் அப்படி... அதனால் அவள் முகத்தில்
சதா சர்வ காலமும் ஒரு துக்கம். இந்த நிலையில்தான் மச்சமுனி அவள் எதிரில்
நின்றபடி பிச்சை கேட்டார். அவளும் அலுப்புடனேயே பிட்சை இட்டாள். பிட்சை
இட்டால் காலில் விழுந்து வணங்க வேண்டும். வணங்கும்போது சித்த சன்யாசிகள்
ஆசிர்வதிப்பார்கள். அவள் மனம் துயரத்தில் இருந்ததால், அவளுக்கு வணங்கத்
தோன்றவில்லை. பேசாமல் திரும்பி நடந்தாள்.

‘‘நில் தாயே..’’  தடுத்தார், மச்சமுனி.

அவளும் திரும்பினாள்.

‘‘பிட்சையிட்ட நீ வணங்க வேண்டாமா?’’  மச்சமுனிதான் கேட்டார்.

‘‘நான் வணங்க நீர் என்ன தெய்வமா?’’  அவள் கேள்வியில் அஞ்ஞானம் கொடி கட்டிப்
பறந்தது. மச்சமுனியின் முக்கால ஞானத்திற்கோ நொடியில் அவள் நிலைப்பாடு விளங்கி
விட்டது.

‘‘தாயே... என்போன்ற சித்த சன்யாசிகளும் கடவுள் தானம்மா..’’ என்றார்.

‘‘அப்படியானால், எனக்குப் புத்திரபாக்யமில்லை. உம்மால் தர இயலுமோ?’’

அவளிடம் இருந்து கோரிக்கை துள்ளி வந்து விழுந்தது.

உடனேயே புன்னகையுடன் சிவநாமத்தை ஜெபித்து, ஒரு சிட்டிகை விபூதியை அவளுக்குத்
தந்தார் மச்சமுனி. ‘‘இதை சிவநாமம் கூறி நீ உண்பாயானால் உனக்கு பிள்ளைப் பேறு
உண்டாகும்...’’


‘‘இது சாம்பல்.. இது எப்படி எனக்குப் பிள்ளைப்பேறு தரும்?’’

‘‘சாம்பல் தானம்மா... இருந்தாலும் ‘இதை நீ உண்டால் பிள்ளைபேறு பெற்றிடுவாய்..


ஒருநாள், நான் அந்த பாலகனைக் காண நிச்சயம் திரும்பவும் வருவேன்’’ என்று
கூறியபடியே பிட்சைப் பொருளுடன் திரும்பி நடந்தார்.


பார்த்துக் கொண்டேயிருந்தாள், பக்கத்து வீட்டுக்காரி, ஓடி வந்தாள். ‘‘கையில்
என்ன?’’ கேட்டாள். ‘‘விபூதி..’’ கோ சாலை நோக்கி நடந்தபடியே பதில் சொன்னாள்
அந்தப் பெண். ‘‘இது விபூதியல்ல. அவனும் ஒரு மாயாவி. இதை நீ உண்டால் மயங்கக்
கூடும். திரும்பவந்து உன்னை அவன் அபகரிக்க கூடும். இதை வீசி எறி..’’


அவள் கூறிட, அந்த பெண்ணும் உடனே கோசாலையாகிய மாட்டுத் தொழுவத்தில்
எருமுட்டைகள் கொண்டு மூட்டப்பட்ட வென்னீர் அடுப்பில் அந்த விபூதியைப்
போட்டுவிட்டு, கைகளையும் தட்டி உதறிக்கொண்டாள்.


அவள் விதி, அந்த விபூதியின் வழியை மாற்றி விட்டது.

கிட்டுவதே கிட்டும், ஒட்டுவதே ஒட்டும் என்று ஆன்றோர்களும் காரணமில்லாமலா
கூறிச் சென்றனர்?


சில காலம் சென்றது. மச்சமுனி, முன் சொன்னது போல திரும்பி வந்தார். அந்தப்
பெண்ணிடம், ‘‘விபூதியால் பாலகன் பிறந்தானா, எங்கே அவன்?’’ என்று கேட்க,
அவளிடம் தடுமாற்றம். திக்கினாள், திணறினாள். ‘‘உங்களை மாயாவியாக நான் எண்ணி
விட்டதால், கோவகத்து அடுப்பில் அந்த விபூதியை வீசி விட்டேன். அதுவும்
சாம்பலோடு சாம்பலாகி விட்டது..’’ என்றாள்.


உடனே அந்த அடுப்பின் முன் சென்று நின்றவர் மனம் வருந்தினார். ‘‘தாங்கள் கடவுள்
என்றால், அந்த அடுப்புச் சாம்பலில் இருந்து கூட ஒரு உயிரை உருவாக்க இயலுமே’’
என்று சந்தேகத்தையே முன் நிறுத்தினாள்.


மச்சமுனி அதைக்கேட்டு சினமுற்றார். சித்தன் வாக்கு பொய்க்கக் கூடாது. எந்த
விபூதியால் ஒரு பிள்ளை பிறக்கும் என்றேனோ அந்த விபூதியால் நிச்சயம் பிள்ளை
பிறக்கும். உன் கருப்பைக்குள் வளரத்தான் உன் கர்மம் இடம் தரவில்லை. ஆனால்,
கோசாலையாகிய இந்த கோவகம் அதற்கு இடமளித்துவிட்டது. நான் சிவசித்தன் என்பது
சத்யமானால், இந்த கோவகம் ஒரு கோவகனைத் தரட்டும். நான் கோருவதால் வரப்போகும்
பிள்ளை, கோவகன் மட்டுமல்ல, கோரகனும் கூட. கோவாகிய பசுவுக்கு உள்ள இரக்கம்
இவனிடமும் இருக்கப் போவது சத்யம். அதனால், இவன் கோ இரக்கனும்கூட. முக்கண்ணன்
அருளால் நான் மச்சத்தில் இருந்து உதித்து மச்சமுனியானது போல, என்னுள்ளில்
இருக்கும் அந்த முக்கண்ணனே மூன்று நாமங்களை இவனுக்குப் பிறக்கும் முன்பே
அளித்துவிட்டான். அந்த நாமங்களைக் கூறி அழைக்கிறேன்... கோவகனே... கோரகனே... கோ
இரக்கனே... சிவமுனி அழைக்கிறேன் வா...’’ என்று உணர்ச்சி மிகுதியோடு அழைத்திட,
கோரக்கரும் அந்த சாம்பலுக்குள் இருந்து ஒரு பாலகனாய் வெளிப்பட்டார்.


பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி, கோரக்கன் இப்படி எழுந்து வந்த நாள்,
ஒரு கார்த்திகை மாதத்து அவிட்ட நட்சத்திர நாளாகும்... இச்சம்பவம் நிகழ்ந்த
ஊர், வடபொய்கை நல்லூர்.


அதன்பின் கோரக்கர், மச்சமுனியின் திருச்சீடராக அவர் செல்லும் இடமெல்லாம்
சென்றார். குருசேவையை தன் வாழ்வின் கடப்பாடாய் கொண்டார். இப்படி அவர் சேவை
செய்த நாளில் எவ்வளவோ சோதனைகள்.. அவைகளை சாதனைகளாக ஆக்கிக் காட்டினார். அதில்
ஒன்று, குருவுக்காக கண்ணையே இழந்த படலம்.


ஒருநாள், குருவுக்கும் சேர்த்து பிட்சை கேட்கச் சென்றபோது, ஒரு பார்ப்பனப்
பெண் நெய்யில் பொரித்த வடையை பிட்சையாக இட்டனள். வாசம் மணக்கும் அந்த வடை,
புலன்களை அடக்கி ஆள வேண்டிய கோரக்கர் நாவில் நீர் ஊறச் செய்தது. இருந்தும்
அடக்கிக்கொண்டு, அதைக் குருபிரசாதமாக்கினார். மச்சமுனியும் அந்த வடையை உண்டு,
அதன் ருசியில் மயங்கி விட்டார். வந்தது ஆபத்து.. பண்ட ருசி என்பதும் உலக
மாயையில் ஒன்று. ஒரு ருசி ஒருமுறை ஒருவருக்குள் புகுந்தால் பலமுறை அதற்காக
ஏங்க வைத்துவிடும். நம்பேச்சை உடல் கேட்டது போக அதன் பேச்சை நாம் கேட்கும்
நிலை தோன்றி விடும். மகாஞானியான மச்சமுனிக்கு மீண்டும் வடைதின்னும் ஆசை
தோன்றிவிட்டது. சீடன் கோரக்கனிடம் ‘எனக்கு மேலும் வடை தேவை’ என்றார்.
கோரக்கரும் பார்ப்பனப் பெண்ணிடம் சென்று வடை கேட்டார். அவளோ அனைத்தும் தின்று
தீர்ந்தாகிவிட்டது என்றாள். ‘சுட்டுத்தாருங்கள் தாயே’ என்று மன்றாடினார்.


 ‘‘ஏலாதப்பா...! எனக்கு களைப்பாக உள்ளது. உரிய பொருட்களும் இல்லை..’’ என்றாள்,
அவள்.  ‘‘இது குருவின் விருப்பம். உயிரைத் தந்தாகினும் நான் ஈடேற்ற வேண்டும்’’
என்றார், கோரக்கர். ‘‘உன் குருவுக்கு ஏன் இப்படி ஓர் அற்ப ஆசை. நான் முன்பே
வடை பொரிக்கும்போது எண்ணெய் தெரித்து கண்ணில்பட்டு கண்போகத் தெரிந்தது.
 நல்லவேளை தப்பித்தேன். இனியொருமுறை வடைபொரிக்கும்போது, எனக்குக் கண் போனால்,
நீ என்ன உன் கண்களை பிடுங்கியா தருவாய்?’’ எகத்தாளமாய் கேட்டாள். ‘‘அதற்கென்ன
தந்தால் போச்சு..’’ என்ற கோரக்கர், அடுத்த நொடியே நெய்வடைக்காக தன்
மெய்க்கண்கள் இரண்டையுமே பறித்து, தந்துவிட, அந்தப் பெண்மணி அரண்டுபோனாள்.
அடுத்த நொடி, கோரக்கரின் குரு பக்திக்காகவே சுடச்சுட நெய்வடை பொரித்துத்
தந்தாள்.


கோரக்கரும் முகத்தை மூடியபடி வந்து வடையைத்தர மச்சமுனியும் உண்டுவிட்டு,
கோரக்கர் முகத்தை மறைத்திருப்பதன் காரணம் அறிய முயலப் பகீரென்றது. ‘‘கோரக்கா..
எனக்காக.. அற்ப வடைக்காக உன் கண்களையா தந்தாய்?’’ ‘‘ஆம் ஸ்வாமி. வேறுவழி
அப்போது தெரியவில்லை.’’ ‘‘அடப்பாவி.. இப்படி ஒரு குருபக்தியா?’’என்று கேட்டு,
கோரக்கனை ஆரத்தழுவி ஆலிங்கனம் புரிந்த மச்சமுனி தன் தவ ஆற்றலால் மீண்டும்
கண்களை தருவித்தார்.


கோரக்கரும் பார்வை பெற்றார். அதன் பின்னும் குருசேவை கோரக்கர் வரை
தொடர்ந்தபடிதான் இருந்தது. மெல்ல மெல்ல மச்சமுனி மூலமாகவே சிவஞானபோதம்
அறிந்தார். காயகற்ப முறைகளைக் கற்றார். தன் உடம்பை உருக்கு போல ஆக்கிக்
கொண்டார்.


ஒரு சமயம் மச்சேந்திரர் மலையாள நாட்டிற்குச் சென்றார். அந்நாட்டு அரசி பிரேமலா
என்பவளை மணந்து இல்வாழ்க்கை நடத்திவந்தார்.


இவர்களுக்கு மீனநாதன் என்ற குழந்தை பிறந்தது. இதனையறிந்த கோரக்கர் குருவை
எப்படியும் அழைத்துக் கொண்டு வர வேண்டுமென்று மலையாள நாட்டை அடைந்தார்.
மச்சேந்திரரைப் பார்த்து குருவே புறப்படுங்கள் நாம் நமது இருப்பிடத்திற்குச்
செல்வோம் என்று அழைத்தார்.

இவர்களுக்கு வழிச்செலவிற்கு வேண்டும் என்று பிரேமலா ஒரு தங்கக் கட்டியை
பையிலிட்டு கோரக்கர் அறியாமல் மச்சேந்திரரிடம் கொடுத்தார். இருவரும் செல்லும்
வழியில் ஆங்காங்கே எதிர்பட்டவர்களிடம் இங்கே கள்வர்கள் பயமுண்டோ என்று
கேட்டுக்கொண்டே வந்தார் மச்சேந்திரர். இதனைக் கவனித்த கோரக்கர்,
மச்சேந்திரருக்குத்
தெரியாமல் அவருடைய பையிலிருந்த தங்கக்கட்டியை எடுத்து வெளியே எரிந்துவிட்டு
அதற்குப் பதிலாக ஒரு கல்லை வைத்தார்.

மச்சேந்திரர் தங்கக்கட்டி உள்ளதா என்று பையைத் திறந்து பார்த்த பொழுது
தங்கத்திற்குப் பதிலாக கற்கள் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். கோரக்கர் மீது
கோபம் கொண்டார்.

“அடப்பாவி! நீ என்னுடைய பொருளைக் கைப்பற்றிக் கொண்டாயே. நீ எனக்குச்
சீடனில்லை. இனி நீ என்னுடன் சேராதே” என்று கூறினார். குருவை நல்வழிப் படுத்த
நினைத்த கோரக்கர் ஒரு மலை மீது ஏறி சிறுநீர் கழித்தார். உடனே அந்த மலை
முழுவதும் தங்கமலை ஆனது. கோரக்கர் குருவைப் பார்த்து தங்களுடைய பொருளை
எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

அறியாமையையால் உழன்ற மச்சேந்திரரைப் பிடித்திருந்த மாயை விலகியது. மனம் தெளிவு
பெற்ற குரு, சீடரை வெகுவாகப் பாராட்டினார். ஆயினும் குருவைப் பிரிந்து
கோரக்கர் தனியே சென்று தவம் புரிந்து அஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும்
பெற்றார்.

பின்னர், திருக்கையிலாயத்தை அடைந்து அங்கு அல்லமாதேவர் என்பவரைச் சந்தித்தார்.


(it will be contd.......)







*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



[image: No Buy Spongie (TY kind owner :-)] *v **a n a k k a m**  S u b b u*
 [image: No Buy Spongie (TY kind owner :-)]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to