senthilvayal.com <http://senthilvayal.com/2014/12/12/%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%88/> Read Later வங்கிக் கணக்கு ஜாக்கிரதை !
- by Vayal - Dec. 12, 2014 - 2 min read - original <http://senthilvayal.com/2014/12/12/%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%88/> கையில் பணத்தை வைத்துக்கொண்டு செலவு செய்யத் தயங்குபவர்கள், தவறாமல் பர்ஸில் வைத்திருப்பது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைத்தான். இந்த இரண்டுமே பாதுகாப்பானவை என்று நினைக்கிறார்கள் பலர். ஆனால், இந்த இரண்டு கார்டுகளையும் நாம் பத்திரமாக வைத்துக்கொள்ளவில்லை எனில், நம் பணம் களவுபோக நிச்சயம் வாய்ப்புண்டு. இந்த இரண்டு கார்டுகளை எப்படி பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி இனி பார்ப்போம். டெபிட் கார்டு என்கிற தொழில்நுட்பமே அதிக பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதல்ல. நீங்கள் ஸ்வைப் செய்யும் பாதுகாப்பு குறைவான இடங்களில் ஸ்கிம்மர் கருவியைப் பயன்படுத்தி எளிதாக போலி கார்டுகளைத் தயாரித்துவிட முடியும். நீங்கள் பெட்ரோல் போடும் இடத்திலோ அல்லது மால்களில் ஷாப்பிங் செய்யும் போதோ அல்லது ஹோட்டல்களில் உணவருந்தும்போதோ உங்கள் டெபிட் கார்டில் இருக்கும் ரகசியத் தகவல்களை எளிதாக எடுத்துவிட முடியும். சில சமயம் உங்கள் வங்கி ஏடிஎம் மையங்களில் கார்டை நுழைக்கும் இடத்தில்கூட இந்த மோசடிக்காரர்கள் சிறிய அளவிலான ஸ்கிம்மர் கருவிகளைப் பொருத்தி தகவல்களையும் பெர்சனல் பின் நம்பரையும் திருடிவிடுவார்கள். டெபிட் கார்டில்தான் இந்தப் பிரச்னையா என்றால், கிரெடிட் கார்டிலும் இதேபோன்ற குறைபாடுகள் உள்ளன. ஆனால், டெபிட் கார்டில் நம் பின் நம்பரை கேட்காமலேயே பணப் பரிவர்த்தனை செய்யும் ‘பைபாஸ்’ வசதி இருக்கிறது. கிரெடிட் கார்டிலும் இந்த வசதி இருந்தது. தற்போது அப்டேட் செய்யப்பட்ட கார்டுகளில் உங்கள் பின் நம்பரை கட்டாயம் தந்தால் தான் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும். உங்கள் கிரெடிட் கார்டின் பின் நம்பர் தெரிந்தால், அதை வைத்து புதிய கிரெடிட் கார்டை குளோனிங் முறையில் தயாரித்துவிட முடியும். இதை வைத்து உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை எளிதாக எடுத்துவிட முடியும். எப்படி பாதுகாப்பது? பொது இடங்களில் உங்கள் கண்களுக்கு எதிரே வைத்து கார்டுகளை ஸ்வைப் செய்ய அனுமதியுங்கள். கூடியமட்டும் நீங்களே பின் நம்பரை பதிவு செய்யுங்கள். மறைவான இடத்துக்குச் சென்று கார்டை ஸ்வைப் செய்வதை அனுமதிக் காதீர்கள். கார்டுகளை ஸ்வைப் செய்யும் கருவியின்மேல் ஏதாவது தனி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதா என்பதைக் கவனியுங்கள். அப்படி பொருத்தப் பட்டிருந்தால் அது ஸ்கிம்மர் கருவியாக இருக்க வாய்ப்புண்டு. அப்படியொரு சந்தேகம் உங்களுக்கு வரும்பட்சத்தில், உங்கள் கார்டுகளைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். நீங்கள் பொருட்களை வாங்கும் கடைகளிலோ, பொது இடங்களிலோ வெளிப்படையாக உங்கள் பின்நம்பரை கூறாதீர்கள். அந்தக் கடைக்காரரோ அல்லது அருகில் இருப்பவரோ உங்கள் பின் நம்பரை தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. பின் நம்பர் இல்லாமலே பைபாஸ் செய்து உங்கள் கணக்கிலிருந்து வேறு ஒரு கணக்குக்கு ஆன்லைன் மூலம் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதால், அதை செய்ய முடியாதபடிக்கு உள்ள லேட்டஸ்ட் தொழில்நுட்பம் கொண்ட கிரெடிட் கார்டுகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இன்டர்நெட் பேங்கிங்! கிரெடிட், டெபிட் கார்டுகள் ஆபத்தானவை. எனவேதான், நான் வங்கியில் இன்டர்நெட் பேங்கிங் வசதியை ஆக்டிவேட் செய்துள்ளேன். இதனால் எனக்கு எந்தக் கவலையும் இல்லை என்று நினைக்கிறார்கள் சிலர். ஆன்லைன் ஹேக்கர்கள் மூலம் ஆபத்துகள் வர வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. என்ன பிரச்னை? உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நீங்கள் பயன்படுத்தும் கணினியை நீங்கள் மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தாலும், இன்டர்நெட்டில் தோன்றும் விளம்பரங்கள் சில பிரபல இ-மெயில் தளங்களைப் போன்றும், ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைப் போன்றும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த போலி இணையதளங்கள் ‘பிஷ்ஷிங்’ என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்கள் இ-மெயிலின் பாஸ்வேர்டு தெரிந்து கொண்டால் போதும். உங்கள் பெர்சனல் விஷயங்கள் அனைத்தும் திருடப்படுவதற்கு வாய்ப்புண்டு. இந்தத் தளங்களில் சென்று நீங்கள் ஆன்லைனில் உங்கள் வங்கிக் கணக்கு விவரத்தையோ அல்லது கார்டுகளின் விவரத்தையோ அளிக்கும்போது, அது அவர்களது ஹேக்கிங் தளமாக இருக்கும் பட்சத்தில், பதிவாகிய தகவல்களை அவர்கள் எளிதாக எடுத்துவிடுவார்கள். நீங்கள் அவசரத்துக்காக அருகில் உள்ள ஒரு பிரவுஸிங் சென்டருக்குச் சென்று ஒரு வங்கிப் பரிவர்த்தனை செய்ய நேரிடலாம். ஒருவேளை அந்த பிரவுஸிங் சென்டர் ஸ்கிரீன் கேப்சரிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நீங்கள் கணினி திரையில் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்களுக்குத் தெரியாமல் கண்காணிக்கலாம். எப்படி பாதுகாப்பது? அலுவலக அல்லது வீட்டு கணினிகளைப் பயன்படுத்தும்போது, இ-மெயில் அல்லது ஷாப்பிங் இணையதளங்களை பார்வையிட, அதன் பாஸ்வேர்டை நீங்களே டைப் செய்து உள்நுழைவது சிறந்தது. பொது பிரவுஸிங் சென்டரில் லாக் இன் செய்யும்போது கவனமாக உங்கள் அனைத்து வேலைகளையும் முடித்த பின்பு ‘ஹிஸ்டரி’யில் பதிவான பதிவுகளை அழிக்கத் தவறாதீர்கள். அதோடு நிற்காமல் பிரவுஸர் அமைப்பில் உள்ள குக்கீஸ் பதிவுகளையும் டெலிட் செய்துவிட்டு செல்லும்போது உங்கள் பாஸ்வேர்டு திருடப்படுவது தவிர்க்கப்படும். நீங்கள் பயன்படுத்தும் கணினியில் நீங்கள் மவுஸை நகர்த்தாமல் கர்ஸர் எங்காவது நகர்கிறதா என்று கவனியுங்கள். அப்படி இருந்தால், உடனே அந்த கணினி மையத்தில் பிரவுஸிங் செய்வதை நிறுத்துங்கள். ஏனெனில், அந்த மையம் உங்களை ஸ்கிரீன் கேப்சரிங் அல்லது ஸ்கிரீன் வியூவர் மூலம் கண்காணிக் கிறது என்று அர்த்தம். உங்கள் செல்போனில் நீங்கள் இ-மெயில் மற்றும் சமூக வலைதளக் கணக்குகளை இணைத்து வைத்திருந்தால், அதனை யாரிடமும் காட்டாதீர்கள். இன்று பெரும்பாலான போன்களில் உள்ள ஷோ பாஸ்வேர்டு ஆப்ஷனைப் பயன்படுத்தி உங்கள் பாஸ்வேர்டை எளிதாக எடுக்கலாம் என்பதால் அதில் கவனமாக இருங்கள். பேங்கிங் ஆப்ஸ்! கார்டுகள், இன்டர்நெட் இவையெல்லாம் பிரச்னையை ஏற்படுத்துகின்றன. இதனால் இனி இவற்றைவிட்டு நான் என் கையில் பாதுகாப்பாக உள்ள செல்போனில் மொபைல் பேங்கிங் ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து பயன்படுத்தப் போகிறேன் என்பவர்களுக்கும் சிக்கல் உள்ளது. என்ன பிரச்னை? வங்கிகளின் பெயரிலேயே போலி ஆப்ஸ்கள் வலம்வர தொடங்கியுள்ளன. இந்த ஆப்ஸ்கள் உங்கள் வங்கியின் அமைப்பைப் போலவே இருக்கும் என்பதால், உங்களுக்கு வித்தியாசம் தெரியாமல் இந்த ஆப்ஸ்களை டவுன்லோடு செய்துவிட்டால், இதில் நீங்கள் பதிவு செய்யும் உங்கள் வங்கி விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. இந்த போலி ஆப்ஸ்கள் இணையதளங்களில் வேகமாகப் பரவிவருவதால் உங்கள் கணக்கின் விவரங்கள் போலி ஆப்ஸ் தயாரிப்பவர்கள் கையில் சிக்க அதிக வாய்ப்புள்ளது. எப்படி பாதுகாப்பது? ஆப்ஸ்களை டவுன்லோடு செய்யும்போது உங்கள் வங்கியை அணுகி சரியான ஆப்ஸுக்கான லிங்கை பெற்று டவுன்லோடு செய்வது சிறந்தது. அதை டவுன்லோடு செய்யும்முன், அது உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ சேனல் என்றால் மட்டும் டவுன்லோடு செய்யுங்கள். இப்படி நீங்கள் செய்யும் வங்கி பணப் பரிவர்த்தனை வசதிகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டில் இருந்து சமயோஜிதமாக யோசித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் மட்டுமே உங்கள் பணம் திருடப்படுவதைத் தடுக்க முடியும். பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பாதுகாத்துக் கொள்ளுங்கள் -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thatha_patty+unsubscr...@googlegroups.com. For more options, visit https://groups.google.com/d/optout.