*ஜயதேவர்* ஆர். கிருஷ்ணசாமி பத்மாவதியைத்தேடி அரண்மனைக்குள் விரைவாக வந்து கொண்டிருந்தார் ஜயதேவர். அதற்குள் அரசியார் பத்மாவதியின் உடலை உடனடியாக மறைக்க வேண்டிய காரியத்தில் முனைப்பாக இருந்தாள். அங்கும் இங்கும் பார்த்தாள். எதிரில் பெரிய வீணைப்பெட்டி கண்ணில் பட்டது. இதுதான் சரியான மறைவிடம் என்று எண்ணியவளாக, வீணைப் பெட்டியிலிருந்து வீணையை எடுத்து வெளியில் வைத்துவிட்டு அதனுள் பத்மாவதியைப் படுக்க வைத்து வீணைப் பெட்டியையும் மூடி விட்டாள். வீணைப்பெட்டிக்கு மேல் வீணையை வைத்து விட்டு, அரசனை எதிர்கொண்டழைக்க வந்தாள். தவறு செய்பவர்களுக்கு முதலில் தைரியத்தைக் கொடுப்பது அதே தவறான செயலை மற்றவரிடமிருந்து மறைக்க எண்ணும் எண்ணமேயாகும். மனத்தை அடக்குவது மிகவும் கடினம். கெட்டவழியில் மனம் சென்றுவிட்டால் அது எந்தப் பாதகச் செயலையும் செய்யத் தைரியம் கொடுக்கும். அந்த நிலையில்தான் அரசியாரும் செயல்பட்டாள்.
அரண்மனையில் எங்கு தேடியும், பத்மாவதி காணப்படாததால், ஜயதேவர் தன்னையும் மறந்து கதறலானார். தனக்கு ஈசன் அருளியதை அவள் காண வேண்டும் எனத் துடித்தார் ஜயதேவர். அரசனும் அவர் படும் அவதியைப் பார்த்து கடைசியாக, தேடுவதற்கு எஞ்சியுள்ள இடமான அரசியாரின் அந்தப்புரத்திற்குச் செல்வோம் எனத் தீர்மானித்தவராக அரசியின் சேடிகளை அழைத்தார். சேடிகளிடம் பத்மாவதியார் கடைசியாக எங்கு காணப்பட்டார்? என்று விசாரித்ததில் அவர்கள் கொடுத்த தகவல்களிலிருந்து அரசியாரின் அந்தப்புரத்தில் உள்ள அறையில்தான் இருப்பார் என நினைத்து காவலர்களுடன் அங்கு சென்றார். அங்கு அரசியாரைக் கண்டார். அவளிருந்த நிலையைக் கண்ட அரசர், ஏதோ தவறு நடந்திருக்கிறது என யூகித்தார். அரசியாரிடம் பத்மாவதியைப் பற்றிக் கேட்டார். அவரால் பதில் ஏதும் கூற முடியவில்லை. வெளிறிய முகத்தோடு அரசனையே நோக்கி விக்கித்து நின்றார். அதற்குள் அரண்மனையின் முக்கியஸ்தர்களும் வந்துவிட்டனர். ஜயதேவர் கண்ணனைப் பாடியபடியே நீர்நிறைந்த கண்களோடு அங்கு வந்து சேர்ந்தார். எல்லார் முகத்திலும் கவலை தென்பட்டது. இதையே சாதகமாக எடுத்துக் கொண்டு அரசியாரும் உண்மையாக கவலைப்பட்ட முகத்தோடு காணப்பட்டாள். எனினும் மற்றவர்கள் கவலை பத்மாவதியைப் பற்றி இருக்க, அரசியின் கவலை தன் நிலைபற்றி இருந்தது. இறுக்கமான இந்த நேரத்தில் தன்கணவரிடம் இந்த விஷயத்தைச் சொல்லிவிடலாமா என்று ஒரு முறை அரசி நினைத்தாலும், இதனால் தனக்கு ஏற்படப்போகும் விளைவுகளைக் கண்டு, பேசாமல் இருப்பதே சிறப்பு எனத் தீர்மானித்தவளாக தன் சேடிகளையும் கண்ஜாடையால் எச்சரித்தாள். மனம் உடைந்த நிலையில் ஜயதேவர் கண்ணனையே எண்ணியவராக கற்பனை உலகத்திற்குச் சென்றார். தன்னைக் கண்ணனாகவும், பத்மாவதியை ராதையாகவும் எண்ணினார். அந்த ராதையின் பிரிவால் கண்ணனுக்கு ஏற்பட்ட விரகதாபத்தை அனுபவிக்க ஆரம்பித்தார். “என் ராதை என்னை விட்டுப் பிரிந்திருக்கிறாளே! அவள் அழகைக் காண இரு கண்கள் போதாதே” என்ற உணர்வு பாடலாக எழுந்தது. அருமையான அஷ்டபதி அங்கு உருவாகியது. “பிரியே-சாருகிலே” என்ற அஷ்டபதியைப் பாடி முடித்தார். பிறகு கூறினார்: “இறைவா! இதுவும் உன் சோதனையோ? நீ ராதையைப் பிரிந்து பட்ட துன்பத்தை எனக்குக் கொடுக்கத்தானா இந்தத் திருவிளையாடல். உன் ஒவ்வோர் அவதாரத்திலும் ஏதோ ஒரு தத்துவத்தை எடுத்துக் காட்டுகிறாய். மற்ற அவதாரங்களில் அமானுஷ்ய லீலைகள் புரிந்தாலும் இராமனாக அவதரித்து, மனிதனாக வாழ்ந்து, அந்த அவதாரத்திலும் மனைவியைப் பிரிந்து தவித்தாய். கிருஷ்ணாவதாரத்தில் ராதையைப் பிரிந்து விரக தாபத்தை அடைந்தாய். இவை யாவும் பின் வரும் காலங்களில் மனைவியைப் பிரிந்தவர்களுக்கு அனுபவம் அளிக்கத்தானோ என என்மனம் எண்ணுகிறது. கடைசியில் இராமனுக்கு சீதை கிட்டினாள். உனக்கு இராதையும் கிட்டிவிட்டாள். அதேபோல் எனக்கும் என் பத்மாவதியைக் கொடுத்துவிடு. அவளில்லாமல் என் உயிர் வாழாது. அவள் வாடியபின் இந்த உலகத்தில் எனக்கு ஏதும் இல்லை. எனக்கு என் பத்மாவதியைக் காட்டிவிடு. இருவருமே உன் பாதங்களில் சரணடைவோம். கண்ணா! கரை சேர்க்கக்கூடியவன் நீ ஒருவன்தான். என் கதறலைக் கேட்டு எனக்கு ஆறுதல் அளிக்கவேண்டும்.” என்று உணர்ச்சியோடு கதற அங்கு ஓர் அதிசயம் நடைபெற்றது. ஜயதேவர் தன் சுகத்திற்காக மனைவியைக் காணத் துடிக்கவில்லை. தன்னோடு சேர்ந்து அவளுக்கும் நற்கதி கிடைக்கவேண்டும் என எண்ணினார். திருமணத்தின் போதே கூறியதுபோல் இல்லற சுகத்திற்காக பத்மாவதியை மணக்கவில்லை. அவளையும் இறைவனின் அடியாராகத் தான் ஜயதேவர் எண்ணினார். அடியார் படும் துயரை எவ்வாறு இறைவன் போக்குவானோ அப்படியே இறைவன் ஸ்தானத்தில் இருந்து ஆசார்யார்களும், குருமார்களும் போக்குவார்கள். ஆதலால்தான் மகனீயர்களையும், ஆசார்யர்களையும் மக்கள் அணுகுகிறார்கள். கருணை கொண்ட மனத்தோடு, இம்மகனீயர்கள் காட்டும் பரிவு, அண்டியவரின் துக்கத்தைப் போக்கி, இன்பத்தை அளிக்கிறது. குருவின் திருவடித் தாமரைகளைத் தஞ்சமென்று அடைந்தால், அந்த குரு, இறைவன் ஸ்தானத்திலிருந்து அருள் பாலிக்கிறார். இதைத்தான் முத்தேவர்களும், குருவின் வடிவே என ஆன்றோர்கள் அனுபவித்தனர். இந்தப் பேருண்மையை உணராதவரா ஜயதேவர்? அவருடைய குருவான கண்ணனைத் தஞ்சமடைந்தார். கண்ணன் வழிகாட்டினான். தன் பாட்டினைத் தொடர்ந்தார் “கண்ணா! நீ ராதையைப் பிரிந்து எவ்வாறு கலங்கினாய்? ராதையையும் உன்னையும் பிரிக்கமுடியுமா? பரமனும் ஜீவனும் இணைந்த தோற்றம்தானே உன் தோற்றம்? ஜீவன் பரமனைவிட்டுப் பிரிந்தாலும், ஜீவன் பரமனை நோக்கி விரைந்தாலும் “பிரிவு” என்பது எண்ணத்தையும் தாண்டியது. அந்தப் பிரிவு எவ்வாறு இருக்கும் என்பதை நீ அனுபவித்தாய். என்னையும் அனுபவிக்கச் செய்கிறாய்.” இவ்வாறு தன்னுடைய ஆதங்கத்தை ஜயதேவர் தன் பாட்டில் வெளிப்படுத்தினார். இந்தப் பாட்டில் தான் ஜயதேவர் ராதையின் பெருமையை அறிவித்திருக்கிறார். இப்பாடலில் காணும் அந்த வார்த்தைகள் இறைவனாலேயே எழுதப்பட்டு பத்மாவதியின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டியது என வரலாறு கூறுகிறது. அந்தப் பாட்டில் இறைவனாலேயே எழுதப்பட்ட வரிகள் “ஜயது பத்மாவதி ரமண ஜயதேவகவி பாரதி பணிதமிதகீதம்” என்று குறிப்பிடப்பட்டு பத்மாவதியின் கணவராகிய ஜயதேவகவி பாரதி எழுதிய கவிதை எனப் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த வரிகளை உருக்கமாக ஜயதேவர் பாட, பூட்டியிருந்த வீணைப்பெட்டி பெரிய சப்தத்துடன் வெடித்தது. உள்ளிருந்து சிரித்த முகத்துடன் பத்மாவதி வெளிப்பட்டாள். அவரைக் காணும்போது ஏதோ ஒரு தேவி வெளிப்படுவது போல் காணப்பட்டாள். அரசனும் இக்காட்சியைக் கண்டு வியந்தான். அரசன் மனத்தில் பல கேள்விகள் எழுந்தன. எப்படி பத்மாவதி வீணைப் பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்தாள்? இது பத்மாவதியின் செயலாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பெட்டி வெளியே பூட்டப்பட்டிருந்தது. ஏதோ சதி ஒன்று நடந்திருக்கிறது. பத்மாவதிக்கு யாரோ இத்தீங்கினை இழைத்திருக்கிறார்கள் உடனே அங்கிருந்த சேடிகளை விசாரித்தபோது, உண்மை வெளிப்படவில்லை. அவர்கள் அரசியைப் பார்த்தனர். குறிப்பறிந்த அரசன், அரசியிடமே கேட்டான். தயங்கியபடியும், இனி மறைப்பதில் பயனில்லை, என்ற எண்ணத்திலும், அரசி நடந்த நிகழ்ச்சிகள் யாவற்றையும் விரிவாகக் கூறினாள். இதைப் பத்மாவதியும் கேட்டாள். ஜயதேவரும் கேட்டார். கூடியிருந்த அரண்மனை முக்கியஸ்தர்களும் கேட்டனர். அரசியைப் பற்றி பல்வேறு எண்ணங்களை, கேட்பவரின் மனத்தில் தோன்ற வைத்தன. அரசரும் மிகுந்த கோபத்தோடு தலைக்குனிவோடு காணப்பட்டார். அரசியிடம் சீறினார். “என்ன காரியம் செய்தாய் நீ? குருவினிடம் அவநம்பிக்கை கொள்ளலாமா? இதனால் எற்பட்ட விளைவப் பார்த்தாய் அல்லவா? உன் புத்தி ஏன் இவ்வாறு பேதலித்துவிட்டது? இச்செய்கைக்கு பிராயச் சித்தமே கிடையாது. இறைவனைப் பழித்தாலும் “சரணாகதி” என்று சென்றுவிட்டால் இறைவன் பழி பாபத்திலிருந்து விடுவிப்பான். அருள் பாலிப்பான். குருவிற்கு இழைத்த அநீதிக்கு இறைவனாலும் மன்னிக்க இயலாது. இப்பாபத்தைச் செய்துவிட்டு, இந்நாட்டு மன்னனுக்கு மனைவியாகவும் இந்நாட்டுக்கு அரசியாகவும் உள்ள நிலையை இழந்துவிட்டாய். உன்னால் இந்நாட்டுக்கும் எனக்கும் அவப்பெயர் வந்து விட்டது. உனக்குத் தகுந்த தண்டனை அளிக்கும் நிலைக்கு நான் தள்ளப்பட்டுவிட்டேன். குருவிற்கு அநீதி இழைத்தவர்களுக்கு இந்நாட்டில் இடமில்லை. இந்நாட்டுக் குடியுரிமையை இழந்தவர்களாவார்கள். ஆகவே, உன்னை நாடுகடத்துவதுதான் தண்டனையாகும். சட்டம் எல்லாருக்கும் ஒன்று. அரசி அதற்கு விதிவிலக்கல்ல.” இவ்வாறு கூறிய அரசனை ஜயதேவர் தடுத்து நிறுத்தினார். அவர் கூறிய வார்த்தைகள் மனித நேயத்திற்கும், மனிதமேம்பாட்டிற்கும் உகந்த கருத்துகளாக அமைந்தன. தொடரும்... https://www.youtube.com/watch?v=eyBrP_q-KiY <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *v **a n a k k a m** S u b b u* * .* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
