பாதயாத்திரையின் போது முருகனே பக்தரைக் காண வருவான்![image: During patayattirai Murukan devotee will come!]
*பழநி மகிமை - 3* நூற்றியெட்டு செய்யுட்கள் அடங்கிய கந்தர் அலங்கார நூலில் அருணகிரிநாதர், ஊர்ப்பெயரையே திருநாமமாக வைத்து வழிபட்டிருப்பது பழநியை மட்டுமே. கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் பழநிமலையைத் தொலைவிலிருந்து கண்டதுமே புளகாங்கிதம் அடைகிறார்; கூடவே வருத்தமும் மேலிடுகிறது. *“ஒரு பொழுதும் இரு சரண நேசத்தே வைத்துணரேனே உனது பழநி மலையெனும் ஊரைச் சேவித்தறியேனே” * - என்று வருந்துகிறார். மற்றொரு பாடலில், *பரமமய, சோதிச் சிவமயமா நின் பழநி தனில் போய் உற்பவ வினைவிள, கன்சேர் வெட்சி குரவு பயில் நற்றாள் பற்றுவதொரு நாளே’’* - என்று இறைஞ்சுகிறார். பின், தன் மனத்தை முன்னிலைப்படுத்திப் பாடுகிறார்: *“படிக்கின்றிலை பழநித் திருநாமம்; படிப்பவர்தான்முடிக்கின்றிலை; முருகா என்கிலை; முசியாமல் இட்டுமிடிக்கின்றிலை; பரமானந்தம் மேற்கொள விம்மி விம்மிநடிக்கின்றிலை; நெஞ்சமே! தஞ்சம் ஏது நமக்கு இனியே!’’ - (கந்தர் அலங்காரம் எண்: 75)* “மனமே! பழநித் திருநாமத்தைத் திரும்பத் திரும்பக் கூறினாய் இல்லை. அவ்வாறு ஓதுபவர்களின் பாதங்களைச் சென்னியில் சூடினாய் இல்லை. முருகா என்று சொல்லவில்லை; வறியோர்க்குத் தளராமல் தானம் செய்ததில்லை; பரமானந்தம் அடைய அவன் நாமத்தை ஜெபிக்கும்போது துளிர்க்கும் கண்ணீரால் அபிஷேகம் செய்தாய் இல்லை; நெஞ்சமே! மரணம் என்று ஒன்று வரும்போது நமக்குத் தஞ்சமளிக்க எவரும் இருக்க மாட்டார்கள் என்பதை உணர்வாயாக!’’ - என்று உருகுகிறார். கந்தர் அந்தாதியில், “செல், வந்தி - கழுமலம் நெஞ்சமே’’ (கழுமலம் = சீகாழிப்பதி) என்கிறார் அருணகிரியார். மற்றொரு செய்யுளில், “உவா இனன் குடி, வானார் பரங்குன்று, சீரலைவாய், திரு ஆவினன்குடி, ஏரகம், குன்று தோறாடல், சென்று அதிர் உவா இனன் குடிகொண்ட தண்கார்வரை செப்பு’’ என்றும் பாடுகிறார். (“இளையோனாம் முருகன் எழுந்தருளியுள்ள திருப்பரங்குன்றம், செந்தூர், ஆவினன்குடி, ஏரகம், குன்று தோறாடல், பழமுதிர்சோலை ஆகிய தலங்களைக் கூறித் துதியுங்கள்.’’) ‘சுருதிமுடி போனம்’ எனத் துவங்கும் திருப்புகழில் அருணகிரியார், “பணியும் அடியார் சிந்தை மெய்ப்பொருளதாக நவில் சரவணபவா ஒன்று வற்கர முமாகி வளர் பழநிமலை மேல் நின்ற சுப்ரமண்யா!’’ என்று முருகனை விளிக்கிறார். “பணிகின்ற அடியார், தமது உள்ளத்தில் மெய்ப்பொருளாகக் கருதிப் போற்றும் ‘சரவணபவா’ எனும் ஆறெழுத்துகள் பொருந்திய வலிய பேரொளியாகி வளர்கின்ற பழநிமலை’ என்பது இதன் பொருள். பழநிமலை ஷடாக்ஷர மலையாகும். ஆதலால் ஷடா க்ஷரத்தை ஓதும் பலன், ‘பழநி’ எனும் திருநாமத்தை ஓதுவதாலேயே கிட்டி விடும் என்று கொள்ளலாம். எனவே தான் நெஞ்சை விளித்து ‘படிக்கின்றிலை பழநித் திருநாமம்’ என்று சாடுகிறார் அருணகிரிநாதர். தமிழ்க் கடவுளான முருகப் பெருமான், தண்டாயுதபாணியாக பழநி மலையிலும், குழந்தை வேலாயுதனாகத் திருஆவினன் குடியிலும், வள்ளி-தெய்வானையுடன் இணைந்த முத்துக்குமரனாகப் பெரியநாயகியம்மன் கோயிலிலும் காட்சி அளிக்கும் தனி அழகைப் பழநியில்தான் கண்டுகளிக்கலாம். பழநியின் மேற்குப் பாகத்தில் குடிகொண்டிருக்கும் பெரிய நாயகி அம்மையையும் அருணகிரியார் பழநித் திருப்புகழில் துதிக்கிறார்: *“பறைகள் பேணிய ருத்ரி, கரிய கார் அளகத்திபரமர் பாலுறை சத்தி எமதாயிபழைய பார்வதி கொற்றி பெரிய நாயகி பெற்றபழநி மாமலையுறை பெருமாளே’’ - (‘அறமிலா’ திருப்புகழ்)* குழலடவி எனத்துவங்கும் பாடலில், ‘பழநி மலைவரு பழநிமலை தரு பழநிமலை முருக விசாக’ எனும் வரிகளை, ‘பழநி, மலைவரு பழநிமலை தரு பழநிமலை முருக விசாகா’ எனப் பொருளுணர்ந்து பிரித்துப் பாடும் இன்பமே தனிதான். (பழநி = கனி போன்றவன். மலைவரு பழ நிமலை தரு = மலையில் அவதரித்தவளும் மூத்தவளும், மலமற்றவளும் ஆகிய உமை பெற்றருளிய பழநி மலை முருக - பழநிமலையில் வாழும் முருகப் பெருமானே) பொள்ளாச்சி - பழநி சாலையில் சண்முக நதிப் பாலத்தைக் கடக்கும்போதே மனம் உற்சாகமுற்றுப் பழநி ஆண்டியைத் தரிசிக்கத் தயாராகி விடுகிறது. சண்முக நதி எனும் இந்த ஆறுமுகனாறு, பாலாறு, வரத்தாறு, பொருந்தலாறு, சுருளியாறு, கல்லாறு, பச்சையாறு எனும் ஆறு சிற்றாறுகள் கூடிப் பெருக்கம் பெற்று ஏற்படுவதாகும். “ஆறு முகமான பொருள் நீ அருளல் வேண்டும்’’ எனும் பாடல் வரிகளை நினைவூட்டுவதாக ஓடுகிறது சண்முக நதி. மலை மீதுள்ள ஆண்டிக்கு சண்முக நதியுள் கலக்கும் வரத்தாற்றிலிருந்துதான் தொன்று தொட்டு வரும் வழக்கப்படி புனித நீர் கொண்டுவரப்படுகிறது. சண்முக நதிக் கரையிலே சுந்தர விநாயகருக்கும் தட்சிணாமூர்த் திக்கும் அழகிய சிறு கோயில்கள் உள்ளன. இவற்றுள்ளே ஆறு யானை முகங்களை ஒருங்கே உடைய சண்முக விநாயகர் திருமேனி காணத்தக்கது. பழநி என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது, பக்தர்களின் பாதயாத்திரை. பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பழநிப் பாத யாத்திரை எங்கே, எவ்வாறு துவங்கியது? பக்தர்கள் பாவடியிலும் காவடியிலும் மகிழ்ச்சி கொள்ளும் முருகப் பெருமானுக்குத் தலைமுறை தலைமுறையாகத் தொண்டு செய்து வருபவர்கள் நாட்டுக் கோட்டை நகரத்தார்கள். தமிழகத்திலும், தாம் சென்று குடியேறிய நாடுகளிலும் நகரத்தார் செய்த திருப்பணிகள் பல. இவற்றுள் மிகப்பழ மையானது அவர்கள் சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் பழநியில் செய்த இறைப்பணியே எனலாம். கடல் கடந்து வாணிபம் செய்த நகரத்தார்கள், (“செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை’’ என்பது ஒரு பழமொழி) பாண்டிய நாட்டிற்குக் குடிபெயர்ந்தபின் உள்நாட்டு வாணிபம் செய்யத் தொடங்கினர். வாணிபத்தில் வந்த லாபத்தில் ஒரு பங்கைத் தண்டபாணிக்கு எடுத்து வைத்து அத்தொகை பெருகியதும் அதை வைத்துத் திருப்பணி கள் செய்தனர். அவர்கள் பெருமையைக் கூறும் எட்டு அறப்பட்டயங்கள் கி.பி. 1600 முதல் 1805 வரையுள்ள காலத்தில் எழுதப்பட்டுள்ளன என்கிறார் பேராசிரியர் சொ.மீ.சுந்தரம். இவற்றுள் முதலில் குறிப்பிடப்பட்ட பழநி கோயில் நடப்பு அட்டவணையில் பாதயாத்திரை வரலாறு விளக்கமாகத் தரப்பட்டுள்ளது. இளையாத்தங்குடி ஏழு நகரத்தார்களில், நேமங்கோயிலைச் சேர்ந்த குமரப்பன் என்பவர் பழநி ஆண்டியைத் தரிசிக்கவும், பழநியில் உப்பு வியாபாரம் செய்யவும் எண்ணங்கொண்டு, தான் ஒரு உப்புக் கடகத்தைத் தூக்கிக்கொண்டு, மரவன் தேவன் தலைமையில் பத்துக் கடகம் தூக்கி வரச்சொல்லி, சுப்ரமண்ய வேளாண் என்பவனைச் ‘சோறு வடிக்க’ கூட்டிக்கொண்டு பழநிக்கு நடைப்பயணமாகச் சென்றார். ஆவணி மூல வீதியில், தெய்வநாயக பண்டாரத்தின் மனையில் வந்திறங்கி, உப்பு வியாபாரம் தொடங்கி, ஒரு பணம் லாபம் கிடைத்தால் 1/8 பணத்தை அறப்பணிகளுக்காக எடுத்து வைத் தார். தெய்வநாயக பண்டாரத்தின் மனைவி பார்வதி அம்மாள் ‘சோறு வடித்துப்’ போட, பரதேசிகளும் சோறுண்டு மகிழ்ந்தனர். பண்டாரம், அவர்களுக்கு மலையில் வழிபாடு செய்து வைத்தார். (போக மாமுனிவரின் சீடர் புலிப்பாணி பாத்திர உடையாருடைய சீடர்களாய், சைவ மரபில் வந்தவர்கள் பண்டாரங்கள்; வரத்தாறிலிருந்து மலைமேலுள்ள ஆண்டவனுக்குத் திருமஞ்ச நீர் கொண்டு வருவது போன்ற பல திருத்தொண்டு புரிபவர்கள்) பண்டாரத்திற்கு ஒரு பணமும், பார்வதி அம்மாளுக்கு ஒரு பணமும் கொடுத்து அடுத்த மாதம் வருவதாகச் சொல்லி குமரப்பன் ஊர் திரும்பினார். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வியாபாரம் நடைபெற்றது. விரைவிலேயே பெரும் செல்வம் திரண்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கலாமடம் ஈசானிய சிவாச்சாரியரின் வேண்டுகோளின்படி, குமரப்பன் காவடி கட்டி எடுத்துக்கொண்டு நடந்து வந்து பழநியை அடைந்தார். இவ்வாறு ஒரு சிலரோடு துவங்கிய பாதயாத்திரை இன்று நகரத்தார் அல்லாத வரும் பங்கு பெறுகின்ற பெரும் விழாவாக மாறிவிட்டது. குமரப்ப செட்டியார் தன்னுடன் விபூதிப் பையை மட்டும் கொண்டு வந்தார். பின்னர் காவடியும், ரத்தினவேலும் சேர்ந்து கொண்டன. கண்டனூர் குட்டையன் மேல் முருகன் ‘அருள்’வர அவர் ‘அருளாடியார்’ என்றழைக்கப்பட்டார். அருள்வாக்கு கூறிவந்த அவர், களைத்தவர்களுக்கு விபூதி இட்டு, அவர்கள் களைப்பை நீக்கவும் உதவினார். இன்றளவும் ‘அருளாடியாராக’ வருபவர் எடுத்துவரும் ரத்தினவேல், 170 ஆண்டுகளுக்கு முன், பாதயாத்திரை குழுவினருக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டதாகும். அன்னதான கல் மண்டபம் கட்டுவதற்கான பணி தடைபட்டபோது முருகனே அதை நீக்கி பணியை முடிக்க உதவினான் என்று ஒரு பட்டயம் கூறுகிறது. மண்டபத்திற்குக் கல் திருப்பணி செய்தவர் பரம்பரையில் வந்தவர்களுக்கு இன்றளவும் தனி மரியாதை அளிக்கப்படுகிறது. பழநிப் பாதயாத்திரையின் போது செம்மடைப்பட்டி என்ற ஊரில் வெள்ளி ஊஞ்சல் வைக்கப்பட்டு புனிதமான ரத்தினவேல் இருக்கும் விபூதிப் பையையும், அதன் பின்னால் ஒரு பெரிய வேலினையும் அலங்கரித்து வைத்து, பக்தர்கள் அனைவரும் பாடிய வண்ணம் ஊஞ்சலை ஆட்டி மகிழ்வார்கள். பல இடங்களில் காவடிப் பூஜையும், வேல் பூஜையும் நடத்தப்பட்டு அன்னதானமும் செய்யப்படுகிறது. குழந்தை வேலன் கோயிலில் நேர்த் திக் கடனாக செலுத்தப்படும் மிட்டாய்கள் அன்பர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. பழநி ஆண்டவன் மேற்கு நோக்கி நிற்பதாலேயே அத்திசையிலுள்ள கேரளம், நீர் நிலவளம் நிரம்பியதாகத் திகழ்கிறது என்று ஒரு பரவலான கருத்து உண்டு. தைப்பூசத்தின்போது கேரளத்திலிருந்து ஏராளமான மக்கள் காவடி எடுத்துக்கொண்டு பழநிக்கு நடந்து வருவதைக் காணலாம். “தைப்பூசக் காவடி ஆட்டம், தங்க மயில் பீலியாட்டம், மனசிலே அம்பலத்தின் தேரோட்டம்’’ போன்று காவடிக் குறிப்புகள் அடங்கிய பாடல்களும் உள்ளன. ஆலப்புழையை அடுத்த ஹரிப்பாடு சுப்ரமண்ய சுவாமி கோயிலில் காவடி ஆட்டத்தில் சுமார் 5000 காவடிகள் பங்கு பெறுகின்றன! வைக்கம் ஊரில் தைப்பூசத்தின் போது பஞ்சாமிர்தக் காவடி, பால் காவடி, விபூதிக் காவடி ஆகியவற்றைக் காணலாம். செங்கன்னூர் எனுமிடத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட காவடிகள் தைப்பூச விழாவில் பங்கு பெறுகின்றன. அனைத்து ஊர்களிலும் நடக்கும் காவடி ஆட்டத்திற்கும் பாதயாத்திரைகளுக்கும் முன்னோடி பழநிப் பாதயாத்திரையே எனலாம். சபரிமலை யாத்திரை செல்பவர்கள் கட்டாயம் பழநி வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். வாகனங்களில் செல்லும்போது நாம் முருகனைக் காணச் செல்கிறோம். பாதயாத்திரையின் போது முருகனே நம்மைக் காண வந்துவிடுவான் என்பது பல முருகனடியார்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இசைப்பிரியனான முருகனுக்குகந்த பாதயாத்திரையில் இசை வழிபாடும் சேர்ந்துகொள் ளும்பொழுது அதன் மகிமை இரட்டிப்பாகிறது. “திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை செயித்தருளும் இசைப்பிரிய’’ (‘கருப்பு விலில்’ திருப்புகழ்) என்று பழநியில் பாடுகிறார் அருணகிரிநாதர். இசையை விரும்பும் முருகன் நாம் பாடும்போது நம்முடன் இருப்பான்; அவனைத் துதித்துப் பாடிய வண்ணம் நடக்கும்போது அவனும் நம்முடனே வருவான். ‘தமிழ் பாடி நடந்தால் தாள்வலி என்ன, பிறவித் தாள்வலியும் மறைந்து விடும்’ என்கிறார் ஒரு பக்தர்! பாதயாத்திரை செய்பவர்களை ஊக்குவிக்கப் பாடப்படும் ஓசையுடன் கூடிய இசையை ‘காவடிச்சிந்து’ என்பர். நாட்டுப்புறப் பாடல் வகைகளுள் ஒன்று சிந்துப் பாடலாகும். முருகனடியார்கள் காவடி தூக்கிச் செல்லும்போது பாடும் பாடல்கள் இந்த மெட்டில் அமைக்கப்படுகின்றன. நமக்குக் கிடைத்துள்ள காவடிச் சிந்துகள் பல இருந்தும் அவற்றுள் மிகப் பழமையானது திருநெல்வேலி சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் அவர்கள் கழுகுமலை முருகன் மீது பாடிய காவடிச் சிந்துப் பாடல்களேயாம். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் சிந்து இலக்கியம் பதிப்பிக்கப்பட்டபொழுது, திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகத்திலுள்ள ஏட்டுச் சுவடிகளுள் இருந்த ‘பழநி ஆண்டவர் காவடிச் சிந்து” எனும் நூல் அச்சில் பதிப்பிக்கப்பெற்றது. இது சுத்தமடம் முத்துக்கறுப்பண்ணன் என்பவர் எழுதிய சிறு நூல். மொத்தம் 11 பாடல்களே உள்ளன. ஆசிரியர், தன்னை அடியவராக அமைத்து, தோகை மயிலை நோக்கி, ‘மயிலே! நீ விரைவாகச் சென்று முருகனைக் கூட்டிக்கொண்டு வா’ என்று கூறுவதாகவே பாடல்களை அமைத்திருக்கிறார். ‘உள்ளம் உருகுதையா முருகையா’ என்ற காலத்தாலும் அழியாத பாடலை எழுதி நம் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட ஆண்டவன் பிச்சை அம்மா அவர்கள் தம் பழநிப் பதிகத்தில் இவ்வாறு பாடுகிறார்: *“பாவடிக் கிசைந்து வரும் காவடிகள் ஆட்டமும்சேவடிகள் காணவரும் அடியார்கள் கூட்டமும்மாவடிவங் கொண்டவனை மாய்த்தவன் மேல் நாட்டமாய் தாவடி ஓட்டும் மயில்போல தாவி ஓடிற்றம்மா’’* இவை தவிர, *“வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும்உள்ளம் குழையுதடி கிளியே, ஊனும் உருகுதடிமாடுமனை போனால் என்ன, மக்கள் சுற்றம் போனா லென்ன கோடிச் செம்பொன் போனாலென்னகுறுநகை போதுமடி - முருகன்குறுநகை போதுமடி’’* - எனும் காவடிச் சிந்து கிளிக் கண்ணியும் மிகப் பிரபலமான காவடிப் பாடலாகும். காவடிப் பாடல்களைப் பற்றி எண்ணும்போது சென்ற நூற்றாண்டில் பக்திப் பரவசப் பாடல்களால் மக்களை மயக்கிய பெங்களூர் ரமணி அம்மாளைப் பற்றிய நினைவு வரும். “பால் மணக்குது பழம் மணக்குது பழநிமலையிலே மலையைச் சுற்றி முருகன் நாமம் எங்கும் ஒலிக்குதாம் பழநி மலையைச் சுற்றி முருகன் நாமம் எங்கும் ஒலிக்குதாம்... *பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடியாம்சர்க்கரைக் காவடி, சந்தனக் காவடி, சேவல் காவடியாம்சர்ப்பக் காவடி, மச்சக் காவடி, புஷ்பக் காவடியாம்மலையைச் சுற்றிக் காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்வேலனுக்கு அரோஹரா, முருகனுக்கு அரோஹரா,கந்தனுக்கு அரோஹரா அதோ வாரான்டி பழநி ஆறுமுகம் தாண்டி...”* - போன்ற அவரது எளிய பாடல்களை ஆண்டுகள் பல சென்ற பின்னும், இன்றளவும் மக்கள் பாடிக்களிக்கின்றனர். அருணகிரிநாதரும் பல திருப்புகழ் பாக்களைக் காவடிச் சிந்து மெட்டில் பாடியுள்ளார். கீழே தரப்பட்டுள்ள பொதுப் பாடல் இவ்வகைக்குரியது. *“ஏட்டிலே, வரை பாட்டிலே, சில நீட்டிலே இனிதென்று தேடிஈட்டு மா பொருள் பாத்துணாதிகல் ஏற்றமான குலங்கள் பேசிகாட்டிலே, இயல் நாட்டிலே, பயில் வீட்டிலே உலகங்கள் ஏசக்காக்கை நாய் நரி பேய்க் குழாமுண யாக்கை மாய்வதொழி ந்திடாதோகோட்டுமாயிர நாட்டனாடுறை கோட்டு வாலிப மங்கை கோவேகோத்த வேலையில் ஆர்த்த சூர் பொரு வேல் சிகாவள கொங்கில் வேளேபூட்டுவார் சிலை கோட்டு வேடுவர் பூட்கை சேர் குற மங்கை பாகாபூத்தமாமலர் சாத்தியே சுழல் போற்று தேவர்கள் தம்பிரானே.”* காவடி சுமந்து, பாட்டுப்பாடி, மலை ஏறுமுன், நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் குறிப்பிட்டிருக்கும் ஆற்றுப்படை வீடுகளுள் ஒன்றான ‘தாழக்கோயில்’ எனப்படும் புராதனமான திருவாவின்குடிக் குழந்தை வேலாயுதன் கோயிலுக்குச் செல்வோம். *சித்ரா மூர்த்தி* <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> [image: Inline image 1] *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *v **a n a k k a m** S u b b u* [image: Miles Otoole] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
