-
ஓம்
பேரிடர் கொடுமைதந்தது.
 எண்ணிப்பார்க்காத அளவினதாகத் தொடர் பேய்மழை!
வானம் கிழிந்து கொட்டித்தீர்த்தது.

தாங்கமுடியாத பலவீனமான நீர்நிலைக் கரைகள், வடிவாய்க்கல்கள், கலுங்குப்
புறக்கால்வாய்,  பண்டுதொட்டுப் பராமரித்துத் தூர்வாராத நிலையில்
கண்டுகொள்ளாமல் இருந்தவர்களை வஞ்சகம் இன்றிக் காயப்படுத்தி வருங்காலத்தில்
செய்யத்தவறினால் இன்னும் வறியதாகும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

குடிமராமத்து என்றதொரு விதி இருந்தது. குடிமக்கள் சேர்ந்து அருகில் தன்
ஊருக்கு வளமை சேர்க்கும் நீர்நிலைகளைப் பெருநிலக்கிழார்களின் உதவியுடன்
பராமரித்தும் தூர்வாரியும் பாதுகாக்கும் கைங்கர்யம் இருந்தது. பழுது நேர்ந்த
காலங்களில் கிராம நீர்காண்டி உடன் தகவல் தந்து விரைவில் நீக்கப்பட்ட
அனுபவங்கள் உள. பழுது சீர்செய்ய எவருடைய பொருள்களையும் உரிமையாளரின் அனுமதி
பெறாமலேயே எடுத்துக் கையாள விதிமுறைகள் இருந்தன. ஆனால் எந்தக்
கைங்கரியத்திற்கும் மக்கள் முன்வராமல் அரசின் கரத்தையே நம்பியுள்ள பாங்கு
தற்போதையச் சூழ்நிலை.

மழை நீரும், ஏரி உபரி நீரும், மேட்டிலிருந்து தாழ்வான பகுதிகளைக்கடக்கும் போது
புதை சாக்கடையில் குழாய் வெடித்த  நீரையும் சேர்த்துக்கொண்டு அழையா
விருந்தாளியாக பொற்கைப்பாண்டியன் போன்று அனைவர் இல்லங்களிலும் கதவைத்
தட்டியும், மற்றும் கேளாமலேயே உட்புகுந்தும், என்னஎன்ன பொருட்கள் வைத்துள்ளனர்
என்று சுவைத்தும், இழுத்தும் பறித்தும் வெளியே சிதறிக்கொட்டிவிட்டு குப்பை
கூழஙளாக அடையாள்ம் காட்டிவிட்டுச் சென்றுள்ளது.

நான்மட்டும்தானா, நீ செய்யாமல் விட்டதில்லையா ? நான் பெரியவனா?  நீ பெரியவனா.
வலது கை செய்வதை இடதுகை அறியாமல் செய்வது என்பது போய் பூக்கடைக்கும் விளம்பரம்
இருந்தே ஆகவேண்டிய கட்டாய நாகரிகம்.

மாமியார் உடைத்தால் மண்கலம்; மருமகள் உடைத்தது வெண்கலம் என்பதுபோல் ஊடகங்கள்
ஒன்றைஒன்று போட்டி போட்டுக்கொண்டு அதனதன் போக்கில் விமர்ச்சித்தும் விளக்கம்
தந்தும் உருக்கமான காட்சிகளை விவரித்தன.

 தன்னார்வலர்களும் நிறுவனங்களும்,  அரசுப்பணியாளர்களும் கைகொடுத்தனர்.

யானைப் பசிக்குச் சோளப்பொறி என்பதுபோல் இழப்புகளுக்கு நிவாரணப்பொருள்கள், பணம்
ஈடுகட்ட இயலாது என்பதுதான் உண்மை.
இருபதாண்டு உழைத்து குருவிபோல் சேர்த்துவைத்தும் கடன்பட்டு மெருகேற்றிய
பொருள்கள், மாணவர்களின் புத்தகங்கள், சீருடைகள் பெரும்பாலும்
அழிந்திருக்கின்றன. கட்டிய துணி தவிர ஏதும் இல்லாத நிலையில் பலநாள்
பட்டினியுடன் உயிர் காக்கப் போராடும் குடும்பங்களும் உள்ளன.  எப்படிக்
கடைதேறுவது என்பது பெருங்கேள்விக்குறியாக அமைந்திருக்கிறது.

 நெருப்புக்கு பகுஜனனன் என்று ஒருபெயர் உண்டு. பலமுறை பிறப்பவன் என்பது அதன்
பொருள். தொட்டதையெல்லாம் எரிக்கும் தன்மை நெருப்புக்கு உண்டு.
நீரும் அந்த வகையில் மாதம் மும்மாரிபொழிந்தது போலன்றி மொத்தத்தையும் ஒருசேரக்
கொட்டி ஆற்றங்கரையில் மரத்தை அடியோடு அகற்றி இழுத்துச் சென்றுவிட்டது. கரையும்
அழிந்துவிட்டது.

கரையின்றிக் கடலைக் கட்டிவைத்த இறைவன் மக்களைக் காக்கட்டும்.
வெ.சுப்பிரமணியன் ஓம்

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to