senthilvayal.com
<http://senthilvayal.com/2015/12/16/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2/>
Read
Later
உயிரைப் பொருட்படுத்தாமல்… ஆக்கிரமிப்புகள் அகற்றம்…

   - by Vayal
   -  Dec. 16, 2015
   -  2 min read
   -  original
   
<http://senthilvayal.com/2015/12/16/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2/>

 ஆக்‌ஷன் IAS ஸ்டார்ஸ்

சென்னையையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வெள்ளக்காடாக மாற்றியதற்கு
காரணமாக அமைந்த மழையின்போது, பெரிய புயல் எல்லாம் வீசவில்லை. ஆனால் அதன்பிறகு
இரண்டு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காட்டிய ஆக்‌ஷன் புயல்தான் தலைநகரைப்
புரட்டிப் போட்டிருக்கிறது. காஞ்சிபுரம் கலெக்டர் கஜலட்சுமியும் தொழிலாளர்
நலத்துறைச் செயலாளரான அமுதாவும்தான் அந்தப் புயல்கள். வெள்ளம் வழிந்துசெல்ல
முடியாமல் நீர்வழிப் பாதைகளை அடைத்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை
எல்லாம் அடித்து நொறுக்​கினார்கள் இந்தப் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.

மணிமங்கலம் அருகே கால்வாயை ஆக்கிரமித்து கோயில் கட்டியிருக்கிறார்கள். இதைச்
செய்த புத்திசாலிகள், கால்வாய்க்குள் தூண்களை எழுப்பி கோயிலைக் கட்டியுள்ளனர்.
ஆனால், கோயிலுக்குக் கீழ் இருக்கும் பாதை மிகச் சிறியது என்பதாலும், தேங்கிய
குப்பைகள் தடுத்ததாலும் நீர் அதன் மூலமாக வெளியேறாமல், ஊருக்குள்
புகுந்திருக்கிறது. கிட்டத்தட்ட முதல் தளத்துக்கும் மேலாக தண்ணீர்
பாய்ந்திருக்கிறது. இத்தனை கொடுமை நடந்த நிலையிலும் ‘கோயிலை மட்டும்
இடிக்காதீங்க’ என்று அமுதாவிடம் மக்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்ததை
என்னவென்று சொல்வது? அந்தச் சமயத்தில் பிரச்னை ஏதும் வரக் கூடாது என்பதால்,
கோயிலை இடிக்காமல், அதன் கீழே இருக்கும் குப்பைகளை அகற்றியதோடு… படிக்கட்டு
மற்றும் பக்கவாட்டு சாலையை உடைத்து தண்ணீர்போக வழிசெய்தார் அமுதா.

கோயிலுக்கு எதிரே அந்தக் கால்வாயை ஆக்கிரமித்து, தன்னுடைய இரண்டு மாடிக்
கட்டடத்துக்​கான படிக்கட்டை அமைத்​திருந்தார் ஒருவர். மொத்தம் 9 அடி
நீளம்கொண்ட கால்வாய், அந்த இடத்தில் மூன்று அடி அகலம்கூட இல்லை. அந்த அளவுக்கு
ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. முதல் கட்டமாக அந்த மாடிக் கட்டடத்தின்
படிக்கட்டுகளை இடித்து நொறுக்கிய அமுதா, அடுத்தகட்டமாக, “உள்ளே இருக்கும்
பொருட்களை எல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று மூன்று நாட்களுக்கு முன்பே
எச்சரிக்கை கொடுத்துவிட்டார். மூன்றாவது நாள் இடிக்க வந்தபோது, ‘நீங்கள்தான்
படிக்கட்டை இடித்துவிட்டீர்களே… எப்படி பொருட்களை எடுப்பது?’ என்று
எதிர்கேள்வி கேட்டார் கட்டடத்தின் உரிமையாளர். உடனே, ‘உங்கள் கண்
முன்பாகத்தானே படிக்கட்டுகளை இடித்தோம். உடனடியாக உள்ளே உள்ள பொருட்களை
எல்லாம் எடுத்துவிடுங்கள். இல்லாவிட்டால் இடித்துவிடுவோம்’ என்று எச்சரிக்கைக்
கொடுத்த அமுதா, சொன்னதை செய்து காட்டினார்.

ஒரு வாரமாக தேங்கி இருந்த வெள்ளநீர், ஆக்கிரமிப்புகளை அகற்றிய அடுத்த சில மணி
நேரங்களில் வடிந்ததைப் பார்த்த பொதுமக்கள், அமுதாவின் பணியினை வெகுவாகப்
பாராட்டுகிறார்கள். பாரபட்சமில்லாத இவரது செயல்பாடு, நீர்நிலைகளை
ஆக்கிரமித்திருப்போர் மனதில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதேபோல்தான் கஜலட்சுமியும் கலக்கிக் கொண்டிருக்​கிறார்.

அதி கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்​பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரவு பகல்
பாராமல் மக்களோடு மக்களாக களத்தில் நின்று மீட்புப் பணியில் ஈடுபட்டவர்,
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி. அவரால் மீட்கப்பட்ட பொதுமக்கள்
தற்போது அவருக்கு நேரில் நன்றி சொல்லி வருகிறார்கள். அவரைச் சந்தித்து சில
கேள்விகளை முன்வைத்தோம்.

“ஆட்சி​யராகப் பொறுப்பேற்று ஒருமாதம்கூட ஆகாத நிலையில், இப்படி ஒரு பேரிடர்
வந்து​விட்டது. இந்தப் பேரிடரை எப்படி எதிர்கொண்​டீர்கள்?”

“ ‘தாம்பரம் வெள்ள நிவாரணக் குழு’ என்று வாட்ஸ்அப்-ல் குரூப் உருவாக்கி, அதில்
அனைத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் இணைத்தோம். யாராவது ஒருவர் ஒரு பிரச்னையைப்
பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவலைச்
சொல்வோம். அவர்கள் அந்தப் பணியை முடித்தபிறகு, படத்தை எடுத்து வாட்ஸ்அப்பில்
அனுப்பிவிடுவார்கள். சில நேரங்களில் வயர்லெஸ் மூலமாகத் தகவல்களைப்
பரிமாறிக்கொண்டோம். காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ராஜாராம் தலைமையில்
12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ராணுவம் உள்ளிட்ட அதிரடி மீட்புப் படைகள் என நாங்கள்
கேட்ட வசதிகளை உடனடியாகச் செய்துகொடுத்தார்கள். திறமைசாலியான பணியாளர்கள் இரவு
பகலாக தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது மீட்புப் பணியை மேற்கொண்டனர்.”

“காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி எந்த நிலையில்
இருக்கிறது?”

“மஞ்சள் நீர் ஓடை, வேகவதி ஆற்றங்கரையோரம், ஜி.எஸ்.டி. சாலை, மகாலட்சுமி நகர்,
பாப்பான் கால்வாய் முகத்துவாரத்தில் உள்ள சமத்துவ பெரியார் நகர் உட்பட பல
இடங்களில் ஆக்கிரமிப்பு​களை அகற்றினோம். ஆக்கிரமிப்புகள் தொடர்​பான நிறைய
புகார்கள் வருகின்றன. அந்தப் புகார்களின் மீது ஆய்வுசெய்து ஆக்கிரமிப்புகளை
அகற்றும் பணியைத் தொடர்வோம்.”

*“ஒதுங்கும் அரசியல்வாதிகள்!”*

1998-ம் ஆண்டில் ஆக்கிரமிப்புகளால் செங்கல்பட்டு மார்க்கெட் பகுதி திணறியது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தார் துணை மாவட்ட ஆட்சியர். ஆக்கிரமிப்புகளை
அகற்றவிட மாட்டோம் என அரசியல்வாதிகள் கைகோத்து நின்றார்கள்.

செங்கல்பட்டில் ரொட்டிக்கடை சேகர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருடைய
தம்பி குரங்கு குமார், நகர்மன்ற துணைத்தலைவர். அவர்களைப் பார்த்து அதிகாரிகள்
அஞ்சிய காலம் அது. குரங்கு குமாரை கண்டவுடன் ஜே.சி.பி இயந்திரத்தின் ஓட்டுநர்
கீழே இறங்கிவிட்டார். உடனே, ஜே.சி.பி-யில் ஏறினார் துணை மாவட்ட ஆட்சியர்.
ஆக்கிரமிப்புக் கட்டடங்களை தரைமட்டம் ஆக்கினார். அந்த அதிரடியில்  இறங்கிய
அதிகாரிதான் அமுதா ஐ.ஏ.எஸ்.

சமீபத்திய மழை வெள்ளத்தைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில்
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில்
ஒருவரான அமுதாவைச் சந்தித்தோம்.

“எங்கள் குழுவின் தலைவர் ராஜாராம் ஐ.ஏ.எஸ். மீட்புப் பணி, மீட்கப்பட்டவர்களைப்
பராமரிப்பது, குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் வடிய ஏற்பாடு செய்வது ஆகிய
மூன்று பணிகளுக்காக நியமிக்கப்பட்டு உள்ளோம். தாம்பரம் நகராட்சிப் பகுதி,
பெருங்களத்தூரில் உள்ள சமத்துவ பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடியவே
இல்லை.

அங்குள்ள அடையாறு ஆற்றுப்பாலம் குறுகலாகவும், பாப்பான் கால்வாய் ஆக்கிரமிக்கப்
பட்டதாலும்தான் தண்ணீர் தேங்கியது. ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் தண்ணீர்
வேகமாக வடிந்தது. பிறகு முடிச்சூர், வரதராஜபுரம், மணிமங்கலம் ஆகிய
பகுதிகளுக்கு என்னை அனுப்பிவிட்டார்கள். அடையாறு ஆரம்பிக்கும் இடம் அது.
அங்கே, ஆக்கிரமிப்பாளர்கள் குழுவாகச் சேர்ந்துகொண்டு எங்கள் வேலைகளைத்
தடுக்கிறார்கள். அதையும் மீறி எங்கள் பணியைத் தொடர்கிறோம்.”

“அரசியல்வாதிகளின் தலையீடு எந்த அளவுக்கு இருக்கிறது?”

“உள்ளூர் அரசியல் புள்ளிகள் பட்டா வாங்கி கொடுப்பதாகச் சொன்னதைக் கேட்டு,
ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பலர் வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் எல்லாம் வருகிறார்கள். நான், யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்
என்று தெரிந்தவுடன் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.”

கஜலட்சுமி

சொந்த ஊர் சேலம். தந்தை ராமசாமி, அரசு மருத்துவர். எம்.எஸ்சி. (விவசாயம்)
படித்தவர். 2000-ம் ஆண்டில் டி.எஸ்.பி பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
மீண்டும் குரூப்-ஒன் தேர்வு எழுதி, 2002-ல் ஈரோடு வருவாய் கோட்டாட்சியராகப்
பணியாற்றினார். தற்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்.

அமுதா

சொந்த ஊர் மதுரை. 1996-ல் ஐ.ஏ.எஸ். பணிக்குத் தேர்வாகி, கடலூரில் துணை மாவட்ட
ஆட்சியராகவும், 1997 – 1998-ல் செங்கல்பட்டு துணை மாவட்ட ஆட்சியராகவும்
பணியாற்றினார். திண்டுக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஆட்சியராகப்
பணியாற்றினார். தற்போது தொழிலாளர் நலத்துறையின் ஆணையர்.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to