மனசு போல வாழ்க்கை 30: அன்பும் ஆக்கிரமிப்பு உணர்வும்[image: Return to
frontpage]  டாக்டர். ஆர். கார்த்திகேயன்
Published: October 13, 2015




*நாம் அன்பு செலுத்தும் மனிதர்கள் மீதே தொடர்ந்து வன்முறை நிகழ்த்திக்
கொண்டிருப்பது வாழ்க்கையின் வினோதங்களில் ஒன்று.*

*“தெரிந்தே கெடுப்பது பகையாகும்; தெரியாமல் கெடுப்பது உறவாகும்!” என்ற
கண்ணதாசன் வரிகள் இதை மிகவும் எளிமையாகச் சொல்லிவிடுகின்றன*

*நல்ல உள்நோக்கம்*

*நாம் நல்லது செய்வதாக நினைத்துச் செய்யும் பல விஷயங்களால் பாதகம்
நிகழ்ந்திருக்கின்றன. “உன் நல்லதுக்குத் தான் சொல்றேன்” என்று ஆரம்பித்து
பெற்றோர் செய்த பல காரியங்களில் குழந்தைகள் பாதிக்கப்படுவது இயற்கை.*

*“பொண்ணு கம்ப்யூட்டர்தான் படிக்க ஆசைப்பட்டா. ஐ.டி கம்பெனிக்கு வேலைக்குப்
போனால் என்ன செய்யறாங்கன்னுதான் சினிமாலயும் பத்திரிகையிலயும் காட்டறாங்களே.
அதான் ஒரே மனசா வேண்டாம்னு சொல்லிட்டேன். வேற எந்த வேலைக்கு வேணா
போம்மான்னுட்டேன்” என்று பேசிக் கொண்டிருந்த தகப்பனைப் பார்த்தேன்.*

*தன் மகள் மீது வைத்துள்ள மிதமிஞ்சிய அன்பினாலும் பாதுகாப்பு உணர்வாலும்,
தனக்குக் கிடைத்த தகவல் அறிவை வைத்துக்கொண்டு, மகள் வாழ்க்கைக்கு உதவும் என்று
தான் இந்த முடிவை எடுக்கிறார். அவரின் உள் நோக்கம் உன்னதமானது. ஆனால் பாதிப்பு
மகளுக்கு நிகழ்கிறது.*

*அறியாமையாலும் தவறான தகவலாலும் எடுக்கப்படும் பல முடிவுகளுக்குப் பின்னும்
ஒரு நல்ல உள் நோக்கம் கண்டிப்பாக இருக்கும்.*

*ஆக்கிரமிப்பு உணர்வு*

*தீவிரவாதியின் செயல் தீமை செய்கிறது. ஆனால் மீட்சிக்கு அதுதான் வழி என்று
நம்புகிறான் அவன். அதுதான் அவனுக்குப் போதிக்கப்பட்டுள்ளது. தன் உயிரையே
தியாகம் செய்கிறான். உள் நோக்கம் சிறந்தது. ஆனால் செயல் தீங்கானது.*

*குழந்தையை அடித்து விளாசும் ஒரு தாய் ஒழுக்கத்துடன் வளர அடி அவசியம் என
நம்புகிறாள். உள்நோக்கம் சிறந்தது. ஆனால் உடலாலும் மனதாலும் காயப்படும் அந்தக்
குழந்தையின் வலி அந்த உள் நோக்கத்தால் மாறிவிடாது. வளர்கையில் அந்த குழந்தை
அதை எப்படி எடுத்துக் கொள்ளும் எனவும் தீர்மானிக்க முடியாது.*

*நாம் யாரை அதிகம் துன்பப்படுத்தி யிருக்கிறோம்? தாயை. காதல் வசப்பட்டவரை.
வாழ்க்கைத்துணையை. குழந்தையை. உற்ற தோழரை. இவர்களைத் தான். அளவற்ற அன்பு
ஆக்கிரமிப்பு உணர்வைத் தருகிறது. என் காதலி எனக்கு மட்டும் தான் என்ற
ஆக்கிரமிப்பு வந்தவுடன், “அவனுடன் அதிகம் பேசாதே” என்று தடை போட வைக்கிறது.
பொறாமை கொள்ள வைக்கிறது.*

*விலங்கின் நியாயம்*

*நாம் நினைப்பது கிடைக்காதபோது சந்தேகப்பட வைக்கிறது. கோபம் வருகையில் தகாத
வார்த்தைகள் பேச வைக்கிறது. என்னுடன் பேசாதே என்று தள்ளிப்போக வைக்கிறது.
அன்பை வைத்துக் கொண்டு வெறுப்பைக் காட்ட வைக்கிறது. பொய் பேசத் தூண்டுகிறது.
உறவுகளில் நாடகம் துவங்குகிறது.*

*“இவனுக்கு எவ்வளவு செய்தேன் நன்றி இருக்கா?” என்ற கணக்கு பார்ப்பது இதன்
தொடர்ச்சியில்தான். “உங்களுக்கு மனசாட்சியே கிடையாது” என்று நீதிபதியாகத்
தீர்ப்பு கூற வைக்கும். “ என் எதிரிக்குக் கூட இந்த நிலை வரக்கூடாது” என்று
போலி தத்துவம் பேச வைக்கும்.*

*தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பயத்தால் நம்மைத் தாக்கும் விலங்கின்
நியாயம் புரிந்தாலும் அது விளைவை எள்ளளவும் மாற்ற முடியாது. வாழ்க்கையின்
எல்லாச் சம்பவங்களுக்கும் இது பொருந்தும்.*

*இதன் நீதி: “உங்கள் நெருங்கிய உறவுகளுக்கு நீங்கள் இழைக்கும் வலிகளுக்கும்
வேதனைகளுக்கும் உங்கள் உள் நோக்கத்தைக் காரணமாகக் காட்டி நீங்கள் தப்பித்துக்
கொள்ள முடியாது!”*

*பல வருஷ பழங்கதை*

*எவ்வளவுதான் அன்பு இருந்தாலும் அவரிடம் ஆக்கிரமிப்பு உணர்வு இருந்தால் அது
கூண்டுக்குள் சிக்கியிருக்கும் உணர்வைத் தரும். எவ்வளவு நன்மைகள் செய்தாலும்
நன்மை செய்தவர் சுடு சொற்கள் பேசினால் அது காயங்களைத்தான் தரும். மிகவும்
சரியான நோக்கத்துக்காகத்தான் பிடிவாதம் பிடிக்கிறார் என்றபோதும் அந்த
பிடிவாதம் ஒரு இறுக்கத்தைத்தான் தரும்.*

*“ நான் சென்னை வந்த போது காசில்லை. எப்படி கஷ்டப்பட்டேன் தெரியுமா? உனக்கு
என் கஷ்டம் ஏதாவது உண்டா? படிக்கறத தவிர என்ன வேலை..?” என்று கண்ணீர் மல்கப்
பேசிக் கொண்டிருந்த அப்பாவின் பேச்சை இடைமறித்துச் சீரியஸாகக் கேட்டான் மகன்:
“பீட்சாவை ஆர்டர் பண்றோமா? இல்லப் போய்ச் சாபிடறோமா?”*

*நொந்து போய் என்னிடம் மீண்டும் அந்தச் சம்பவத்தை வாழ்ந்து பார்த்து மனம்
உடைந்து சொன்னார் அவர். “என் அக்கறையே அவனுக்குப் புரியலை. நீங்க தான் பேசிப்
புரிய வைக்கணும்!”*

*மகன் பளிச்சென்று பதில் சொன்னான்: “இந்தக் கதையைப் பத்து வருஷமா கேக்கறேன்.
புதுசா கேக்கற மாதிரி எப்படிக் கேக்க முடியும்? வெளிய போலாம்னு சொல்லிப் பேச
ஆரம்பிச்சு ஒன்பது மணி ஆச்சு. ஒரே பசி. அதான் குறுக்கே பேசிக் கேட்டேன்!”*

*நம் நோக்கங்கள் நம் செயல்களை நியாயப்படுத்தலாம். ஆனால் செயல்களின் விளைவுகளை
அவை மாற்றுவதில்லை.*

*எவ்வளவு நியாயமான காரணத்துக்குப் போட்டு உடைத்தாலும் கண்ணாடிக் கிண்ணம்
உடையாமல் இருக்குமா என்ன?*

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



*v **a n a k k a m**  S u b b u*    [image: Divorce Advice - Legal Advice]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to