தெரியுமா? ஜடாயு பாறை!

கேரளாவின் கொல்லம் மாவட்டம், ஜடாயுமங்கலம் என்ற இடத்தில் 65 ஏக்கர் பரப்பளவில்
பறவைகளுக்கான அழகிய பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு அழகிய சிறிய மலைகள்,
பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள் உள்ளன.

அத்தோடு சுற்றுலாப்பயணிகள் மலை ஏறுதலில் ஈடுபடும் வகையிலும் இந்த பூங்கா
உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு இராமாயணத்தில் இடம் பெற்றுள்ள பறவை ஜடாயுவின்
சிலை 200 அடி நீளத்திலும், 150 அடி அகலத்திலும், 70 அடி உயரத்திலும்
அமைக்கப்பெற்றுள்ளது.


இராவணன், சீதா தேவியைக் கடத்திக்கொண்டு ஆகாய மார்க்கமாக புஷ்பக விமானத்தில்
சென்று கொண்டிருந்தபோது, சீதை, தன்னைக் காப்பாற்றுமாறு உதவி கேட்டு அலறினாள்.
அந்தக் குரல், ஜடாயுவின் காதிலும் கேட்டது. உடனே, சீதா தேவியைக்
காப்பாற்றும்பொருட்டு ஜடாயு, இராவணனுடன் போரிட்டான். போரில் இராவணன் ஜடாயுவின்
ஒரு இறக்கையை வாளால் வெட்டிவிட்டான். ஒரு இறக்கையை இழந்த ஜடாயு, ஒரு பாறை மீது
விழுந்துவிட்டார். அது முதல் அந்தப் பாறை, ஜடாயு பாறை என்று அழைக்கப்பெறுகிறது.

இராமாயண காலத்துப் புகழ்பெற்ற இந்த ஜடாயு பாறை, கேரளாவில் கொல்லம் மாவட்டம்
கிளிமனூர் மற்றும் கொட்டாரக்கராய் என்ற கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
தன் அழகிய தோற்றத்தால் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரையும் தன் பக்கம் கவர்கிறது .
அந்தக் கறுப்புப்பாறை. தற்போது, கேரளாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக இது
விளங்குகிறது.


பாறையின் மீது ஒரு நீர் ஊற்று உள்ளது. அதாவது, இராமனும் லட்சுமணனும், சீதா
தேவியைத் தேடிக்கொண்டு ஜடாயு பாறைக்கு வந்தபோது, ஜடாயுவின் தாகம் தீர்க்கும்
பொருட்டு ஸ்ரீராமனின் கால்பட்ட இடத்திலிருந்து தோன்றியதாகச் சொல்கிறார்கள்.
மலை உச்சியில் சிறிய ராமர் கோயிலும் உள்ளது. டிசம்பர் மற்றும் ஜனவரி
மாதங்களில் கைவினைப் பொருட்கள் திருவிழா இங்கு நடைபெறுகிறது. வெவ்வேறு
பகுதியிலிருந்து கைவினைப் பொருட்களைக் கொண்டு வந்து இங்கு விற்கின்றனர்.
இந்தச் சமயத்தில் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீராமரை வழிபட்டுச் செல்கின்றனர்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 அடி உயரத்திலிருக்கும் இந்த மலையில்,
சமீபத்தில் மிகப்பெரிய ஜடாயு சிற்பம் வடிவமைக்கப்பெற்றுள்ளது. சுமார் 60 அடி
உயரமும், 200 அடி நீளமும் 150 அகலமும் கொண்ட இந்தச் சிலை, ஓர் இறக்கையை
இழந்தபடி, மற்றொரு இறக்கையை விரித்துத் தலையைச் சற்று மேல்நோக்கி தூக்கியபடி
காட்சி தருகிறது. பறவையின் உட்பகுதியில் மூன்று மாடிக் கட்டடம் உள்ளது. அதில்,
ஒரு மியூசியமும் மினி தியேட்டரும் உள்ளன.

இதன் நுழை வாயில், பறவையின் கண்போல வடிவமைக்கப்பெற்றுள்ளது. இது ஆசியாவிலேயே
மிகப்பெரிய சிலையாகக் கருதப்பெறுகிறது. தற்போது செதுக்கப்பட்ட சுமார் 18 அடி
உயரம் கொண்ட இராமர்சிலையும் இங்குள்ளது. மலை உச்சியை அடையப் பல கிலோ மீட்டர்
தூரம் செல்ல வேண்டும். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக வழியெங்கும்
குகைகளும், வண்ண விளக்குகளும், ஓய்வு கொள்ள வசதிகளும் உள்ளன. டீ, காஃபி,
ஸ்நாக்ஸ் கடைகளும், சிறிய தங்கும் விடுதிகளும் உண்டு.ஜடாயு பாறை திரில்லிங்கான
சுற்றுலாத் தலமாகவும், அதே சமயம், ஒரு பக்திப் பயணமாகவும் அமைகின்றது. சபரி
மலைக்கு யாத்திரை செல்லும் வழியில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து
செல்கின்றனர்.

செல்லும் வழி: கேரளாவின் கொல்லத்திலிருந்து கிளிமனூர். இங்கிருந்து 14 கிலோ
மீட்டரில் சடய மங்கலம் கிராமம். இங்குதான் ஜடாயு பாறை உள்ளது.


<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



*v **a n a k k a m**  S u b b u*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to