திருக்குறள் கூறும் விருந்தோம்பலின் சிறப்பு:-

திருவள்ளுவர் விருந்தோம்பலுக்கு என்று தனி அதிகாரம் (விருந்தோம்பல் 9) படைத்து
அதில் உள்ள பத்து குறள்களில் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தைக்
குறிப்பிட்டுள்ளார்.

அவையாவன:

1. மனைவியுடன் வீட்டில் இருந்து பொருள்களைப் பாதுகாத்து இல்வாழ்க்கை
நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் தன்மையுடையதாகும்.

2. விருந்தாக வந்தவர் வீட்டின் வெளியே இருக்கத் தான் மட்டும் உண்பது, சாவா
மருந்தாகிய அமிழ்தமே என்றாலும் அது விரும்பத்தக்கது அன்று.

3. நாள்தோறும் தன்னை நாடிவரும் விருந்தினரைப் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை
துன்பத்தால் வருந்திக்கெடுதல் என்பது என்றுமே இல்லாத ஒன்றாகும்.

4. முகமலர்ச்சியுடன் நல்ல விருந்தினரைப் போற்றுகின்றவனுடைய வீட்டில் திருமகள்
மனம் மகிழ்ந்து வாழ்வாள்.

5. விருந்தினரைப் போற்றி உணவிட்டபின் எஞ்சியதைத் தான் உண்ணுகின்றவனுடைய
நிலத்தில் விதைக்காமலேயே பயன் விளையும்.

6. வந்த விருந்தினரைப் போற்றி இனிவரும் விருந்தினரை எதிர்பார்க்கின்றவன்
வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

7. விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவிலானது என்று கூற முடியாது.
விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற தன்மை உடையதாக அமையும்.

8. விருந்தினரை மதித்து உபசரிக்கும் வேள்வியில் ஈடுபடாதவர் பின்னர் பொருளை
வருந்திக் காத்துப் பயனை அடையாமல் போனோமே என்று வருந்தும் நிலையை அடைவர்.

9. செல்வச் செழிப்புடன் இருக்கும் காலத்தில் வறுமை என்பது விருந்தோம்பலைப்
போற்றாத அறியாமையாகும் அது. அறிவில்லாதவர்களிடம் மட்டுமே காணப்படும்.

10. அனிச்சமலர் முகர்ந்தவுடன் வாடிவிடும் விருந்தினரோ விருந்தளிப்பவரின் முகம்
மலராமல் வேறுபட்டுத் தோன்றிய உடனேயே வாடிவிடுவர்.

"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு" (81)

"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து" (90)

சிலப்பதிகாரத்தில் விருந்தோம்பலின் சிறப்பு:-

இளங்கோவடிகள் மனையறும் படுத்த காதையில் "விருந்து புறந்தரூஉம் பெருந்தண்
வாழ்க்கையைக்" கூறும்போது கண்ணகியின் விருந்தோம்பும் திறனைக் குறைக்கவில்லை.
கொலைக்களக்காதையில்,

"அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும்..."

என்ற பாடல்வரிகள் அறநெறிச் செல்வோர்க்கு உணவு, உடை, அளிப்பதும் மேலோர்களைப்
பேணிப் பாதுகாப்பதும் தவ வாழ்வு மேற்கொண்டு ஒழுகுபவர்களை வரவேற்று
உபசரிப்பதும் மிகச் சிறப்புடையதான விருந்தினர்களுக்கு உணவளித்துக் காப்பதும்
போன்ற விருந்தோம்பல் முறைகளைக் கோவலன் பிரிவினால் கண்ணகி செய்யாதிருந்தாள்
என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன.

விருந்தோம்பலின் சிறப்பு:-

புதியதாக வருகின்ற விருந்தினரை வரவேண்டாம் என்று கூறுவது தமிழர் பண்பாடு
இல்லை. அதுபோன்று உண்ணும்நேரம் பார்த்து வந்த விருந்தினரை ஒழிந்து போகுக என்று
கூறுவதும் குற்றமாகும். விருந்தோம்பலின் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும்
மகிழ்ச்சியும் உண்டாகும்.

தொகுப்புரை:-

தொல்காப்பியம் "விருந்து" என்பதை புதியது என்ற பொருளில் குறிப்பிடுகின்றது.

விருந்தினரை எதிர்நோக்கும் பண்பும், இரவில் விருந்தோம்பும் முறையும்
நற்றிணையில் கூறப்பட்டுள்ளன. வறுமையிலும் விருந்தோம்ப வேண்டும் என்ற செய்தி
புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு வகையான
உணவைப் படைக்கும் செய்தி சிறுபாணாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது.

திருக்குறள் விருந்தோம்பலுக்கு உவமையாக அனிச்சமலரைக் குறிப்பிடுகின்றது.

சிலப்பதிகாரம், கணவனைப் பிரிந்த நிலையில் விருந்தோம்பல் பெறாது என்கின்றது.

விருந்தோம்பல் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது. சிறப்பு மிக்கது என்பதை
நூல்களின் மூலம் அறிய முடிகின்றது. ஆனால் இன்றைய காலத்தில் விருந்தோம்பும்
பண்பு குறைந்து கொண்டே வருகின்றது. இந்த நிலை மாறவேண்டும் என்பதை உணர்த்துவதே
இக்கட்டுரையின் நோக்கமாகும்.



<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

                    *V A N A K K A M     S U B B U    *
[image: 5HLRltELRTuhFyJ0_ouiDnr_qDYmmw6GZkgZJNMUnLUn39M_vn79dw==.gif]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to