கண்ணதாசன் இரசித்த கம்பன்

(பிரான்சுக் கண்ணதாசன் கழகம,; பரி நகரின் (Paris) புற நகராம் மோ என்னும் பெரு
நகரில் 22.06.2008 ஞாயிறு அன்று கவியரசர் கண்ணதாசன் விழாவைச் சிறப்பாகக்
கொண்டாடியது. அவ்விழாவில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ ஆற்றிய சிறப்புரை.)

வானிலே வலம் வரும் ஆதவனுக்கு அறிமுகம் தேவை இல்லை! இரவிலே உலா வரும்
நிலாவுக்கும் அறிமுகம் தேவை இல்லை! தமிழ்க் கவிதை வானிலே ஆதவனாய்த்
தமிழ்த் திரை உலகின் மாதவனாய்த்; திகழ்ந்த கவியரசர் கண்ணதாசனுக்கும் அப்படியே!

ஏனெனில், கண்ணதாசன் -
காவியத் தாயின் இளைய மகன்,
காதற் பெண்களின் பெருந்தலைவன்!
அவன் நிரந்தரமானவன், அழிவதில்லை!
எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை!

கால் போட்ட மதுவிலும்
கால் நீக்கிய மாதுவிலும்
வழுக்கி வீழ்ந்தவன்!
மனத்தை மயக்கும் கவிதைகளைச் செதுக்கி வாழ்ந்தவன்!

அந்தக் கண்ணதாசன் திரைப்படத் துறையில் கால் பதித்த காலத்தில்; திரைப்
பாடல்களில் பக்திச் சுவையைப் புகுத்தி இருந்தார், பாபநாசம் சிவன்.
முத்துமுத்தானகருத்துகளைச்
சினிமாப் பாடல்களில் பொருத்தி இருந்தார் பட்டுக் கோட்டை கலியாண
சுந்தரம்.. இந்தச் சூழலில் வெள்ளித் திரை வானிலே ஒளிவீச வந்த இக்கவிஞன், தான்
படித்துச் சுவைத்திருந்த பைந்தமிழ் இலக்கியங்களை, வைரமாய் ஒளி வீசும் இலக்கிய
வரிகளை, கருத்துக் கருவூலங்களைத் தன் பாடலில் இழுத்து வந்து இழைத்து வைத்தான்.
பாமர மக்களையும் அவற்றைச் சுவைக்கவைத்தான.

பரந்த கடல் மேல் பரவும் மேகம் அதன் நீரை தனக்குள் இழுத்துக்கொள்கிறது. பிறகு
நீராக உள் வாங்கியதை மழையாகப் பொழிகிறது. அதைப் போலத்தான் கண்ணதாசன் என்னும்
மேகம் தமிழாகிய கடலில் தான் உட்கொண்டவற்றைத் தன் பாடல் வரிகளில் எளிய மொழியில்
மழையாகப் பொழிந்து தள்ளுகிறது. எடுத்துக்காட்டாக, இப்பாடலைப் பாருங்களேன் ,
பாடிப் பாருங்களேன்

"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே வழியம்பு ஒழுக மெத்திய மாதரும் வீதி மட்டே
விம்மிவிம்மி இரு கைத்தல மேல் வைத்தழு மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே!"

பாட முடிகிறதா, பாடினாலும் பொருள் புரிகிறதா...

புரிந்தாலும் உள்ளத்துக்குள் புகுகுகின்றதா! படித்திருக்கும் உங்களுக்குப்
புரிந்தாலும் ஏட்டையே தொட்டிராத ஏழைகளுக்கு இதில் ஓரெழுத்தாவது புரியுமா!
பட்டினத்தார் பாடல்களுள் ஒன்று இது! அவர் பாடல்களும் கடல்தான்! அந்தக் கடல்
மேல் பரந்து திரிந்து மனத்தைப் பறிகொடுத்த கண்ணதாசன் என்னும் மேகம், இந்தப்
பாடலைத் தனக்குள் ஈர்த்துக்கொள்கிறது.

மூலக்கருத்து சிதையாமல் பாலொடு தேன் கலந்தது போல் பொருத்தமான சொற்களால்
மழையாகப் பொழிவதைக் கேளுங்கள் :

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசி வரை யாரோ!

கல்லாத நல்லவர்களின் கவனத்தையும் ஈர்க்கின்ற வரிகள்! படியாத பாமரர்க்கும்
புரிகின்ற மொழிகள்! இதுதான் கண்ணதாசன்!இலக்கிய வரிகளை, கருத்துகளைத் தன்
திரைப்படப் பாடல்களில் கலக்கிக் கொடுத்த கண்ண தாசனுக்குக் கம்பன் மேல் தணியாத
காதல்!
கம்பன் மேல் கரைகடந்த காதல் கொள்ளாத கவிஞன் எவனுண்டு!

கம்பனைப் பாட வரும் கண்ணதாசன்,
'பத்தாயிரம் கவிதைகளை முத்தாக அள்ளி
வைத்த கம்பனுக்கு ஈடு - இன்னும்
வித்தாகவில்லை என்றே நீ பாடு' என்று பாடுகிறான்!

இந்தக் கண்ணதாசன், கம்பதாசனாகி ரசித்த கம்பன் வரிகள் சிலவற்றைக் காண்போமா -

தரந்தாழாமல் பரந்திருக்கும் தமிழோ பெருங்கடல்! அதில் நிரந்தரமாய்ப்
பள்ளிகொண்டிருக்கும் கம்பன் காவியமோ தனிக்கடல்! இந்தக் கம்பக் கடலில்
மூழ்காதவர்களே இல்லை! - இதில்சொம்பள்ளிக் குளித்தாலும் சுகமாக நீந்திக்
களித்தாலும் கிட்டுகின்ற இன்பத்துக்கு எட்டுகின்ற வானமே எல்லை! வ.வே.சு
ஐயராகட்டும் டி.கே.சி முதலியாராகட்டும் வை.மு.கோ ஐயங்காராகட்டும் அறிஞர் அண்ணா
துரையாகட்டும் கம்பனடிப்பொடியாகட்டும் மு.மு.இசுமாயிலாகட்டும்...ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதத்தில் இதில் மூழ்கியவர்கள்தாம்! தமக்குரிய விதத்தில் கம்பன் அமுதை
உண்டு ரசித்தவர்கள்தாம்!

இந்த வரிசையிலே முந்திக்கொண்டு வந்து சேருகிறார் கவியரசர் கண்ணதாசன்.

பூவுக்குப் பூ தாவும் இந்தத் தேனீ, கம்பன்
பாவுக்குப் பா தாவித் தாவிச் சுவைக்கிறது.

கம்பன் தமிழில் செம்புலப் பெயல் நீராய் உருகி கம்பன் அமுதை அள்ளிப் பருகி உள்
வாங்கிய தமிழ்த் தாதுவை எல்லாம் கள்வாங்கிய திரைப்படப் பாடலாக
மாற்றித் தருகிறது, கம்பனைப் பெயரிட்டு அழைத்தே போற்றி வருகிறது! ஏனெனில்
கம்பன் என்ற பெயரே கொம்புத் தேனாக இனிக்கிறது இவருக்கு!

'செந்தாழம் பூவில்' என்னும் பாட்டில்
"இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வருணனை" என்கிறார் கண்ணதாசன்.

ஆலயமணியில் ஒலித்த பாடலைத்தான் எடுத்துக்கொள்ளுங்களேன் :

'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா!
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா!
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா!
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா! எனக் கேட்டு நமக்குள் எல்லை இல்லா
இனபம் ஊட்டும் கவிஞர்,
என்ன சொல்லித் தொடர்கிறார் கேளுங்கள் :

'கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா!"
சீதையெனும் தாயாகவும் சகுந்தலை எனும் சேயாகவும் தன் காதலியைக் காணும்
கவிஞருக்கு யாருடைய சீதையைப் பிடித்திருக்கிறது பாருங்கள்!

கம்பனின் சீதைதான் பிடித்திருக்கிறதாம்! ஏன் தெரியுமா?கம்பன் என்றொரு மானிடன்

'சீதை நடையழகும் சீராமன் தோளழகும்
போதை நிறைந்ததெனச் சொல்லி அவனைப்
போட்டானாம் மதுக்குடத்தில் அள்ளி"!
கண்ணதாசனின் வரிகள்- மாலைத் தென்றலாய் மனத்தை மயக்கும் மாணிக்க வரிகள்!
அவள் ஒரு மேனகை என்ற பாடலில்,

'என்ன சொல்லி என்ன பாடக்
கம்பன் இல்லை கவிதை பாட' என்றும்

'அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
கம்பன் பாடிய வெள்ளி நிலா" என்றும் இன்னும் பல இடங்களிலும்

கம்பன் பெயரை வைத்திழைத்தே செம்பொன்னாய் ஒளிரும் பாடல்களைப் படைத்திருக்கிறார்
கண்ணதாசன்!கம்பன் பெயரை அவர் ரசித்தமைக்குச் சான்றுகள் அல்லவா, இவை!

இதோ, கண்ணதாசன் ரசித்த கம்பன் -கம்பீரமாய் வருகிறான் உண்ணத் தெவிட்டாக்
கனியமுதாய்த் தமிழமுதைத் தருகிறான்!

எங்கிருந்து தொடங்க? கம்பன் கவிதைகள் - கட்டிக் கரும்புகள்! தொட்ட இடமெல்லாம்
சுவைப்பவை கடித்த இடமெல்லாம் - இல்லை, இல்லை படித்த இடமமெல்லாம் இனிப்பவை!
எங்கே தொடங்கினாலும் எங்கெங்கே தொட்டாலும் அங்கெங்கெனாதபடி சுவை பயப்பவை! என்
சிறப்புரையில் சொல்லாத -அண்மையில் எழுத்துக் கூடத்தில் வெளி வந்த நன்றி
:சத்தியா - நிலா முற்றம். என்ற கட்டுரையில் இடம் பெற்ற " காத்திருந்தேன்
காத்திருந்தேன்" என்னும் பாடலில் இருந்தே தொடங்கலாமா?
திருமதி பி சுசீலா அவர்களின் தேன் குரலில்தவழ்ந்து வரும் தென்றலாய்க்
காற்றினிலே வரும்; இந்தக் கீதத்தில் கடைசி நான்கு வரிகளைக் குறிப்பிடும் இதன்
ஆசிரியர்,

" அடுத்து வரும் வரிகளில் (கண்ணதாசன்) இலக்கியச் சிறப்பின் உச்சிக்கே நம்மை
இழுத்துச்
சென்று விடுகிறார்.

"கண் திறந்து நானிருந்தேன்
கட்டழகர் குடி புகுந்தார்
கண் திறந்தால் போய் விடுவார்
கண் மூடிக் காத்திருப்பேன்".... என எழுதுகிறார்.

உண்மைதான்-கண்ணதாசனின் இந்த இலக்கியச் சிறப்பின் உச்சிக்கு வைர மணி
வரிகளுக்குக் காரண கருத்தா கம்பனின் மாணிக்க வரிகள்தாம். இதோ, கம்பனின்
காவியம் விரிகிறது அதில் கண்ணதாசன் ரசித்த இந்தப் பகுதி தெரிகிறது!வாருங்கள்
வாருங்கள், வந்து பாருங்கள்:கம்பன் காலம் - மூவருலா, விக்கிரம சோழனுலா... என
உலா இலக்கியங்கள் உலா வந்த காலம்!

தன்னேரில்லாத் தலைவன் வீதிவாய் உலா வருகிறான்.; பேதை முதல் பேரிளம்
பெண்கள் ஈறாக உள்ள எழுபருவத்துப் பெண்கள் மாரன் கணை தொடுக்க, தலைவனைக்
காண்பதற்கு வந்து குவிவார்களாம். இதனை நேரிசைக் கலிவெண்பாவில் பாடி முடிப்பதே
உலாவாகும்
இப்புதுவகை இலக்கியத்தில் மனத்தைப் பறிகொடுத்த கம்பன் தன் காவியத்திலும் இதன்
கூறுகளைத் தொடுகிறான். உலாவியற் படலம் என்றொரு சிற்றுலாவை பலாப்பழச் சுவையோடு
படைத்து உலாவ விடுகிறான்!

மிதிலை நகரிலே, தென்றல் கொடி அசைக்கச் சீதை கரம் பிடிக்கச் சீராமன் வீதிகளில்
வலம் வருகிறான். மாவீரன் வரும்போது மலர் தூவி வரவேற்பது முறை அல்லவா! அப்படியே
இங்கும் இராமனை வரவேற்கும் மங்கையர்கள் வெறும் மலரிட்டு வரவேற்கவில்லையாம்!

மாநெடுங்கண் நஞ்சு சூழ் விழிகளைப் பூமழையாக அவன் மீது தூவி வரவேற்றார்களாம்.

இராமனைக் கண்டு நிலைகுலையும் பெண்களைப் பற்றிப் பேசும் இப்பகுதி காதல்
பெண்களின் பெருந்தலைவன் கண்ணதாசனைக் கவர்ந்ததில் வியப்பில்லைதான்! மான் இனம்
போல, மயில் இனம் போல மீன் இனம் போலக் குவிந்த மகளிர்தம் மனநிலைகளை - கண்ணினால்
காதல் என்னும் பொருளையே காணும் உடல், உள்ள நிலைகளைப் பல பாடல்களில் கம்பன்
பாடுகிறான்.

இதில் உள்ள ஒரு பாடல் இலக்கியச் சுவையின் உச்சியாய் விளங்கும் ஒரு பாடல்
கண்ணதாசனைக் காந்தமாய்க் கவர்ந்திழுக்கிறது. கன்னித் தமிழெடுத்த கம்பன்
தன்னை மறந்து பாடும் அந்தக் காட்சி : அங்கே-சொன்னலம் கடந்த காமச் சுவையை ஓர்
உருவம் ஆக்கி இன்னலம் தெரியவல்ல ஓவியன் ஒருவன் தீட்டிய ஒவியமாய் ஒருத்தி!

மைக்கருங் கூந்தல் செவ்வாய் வாள்நுதல் கொண்ட அவள் உலா வரும் இராமனின் அழகு
நலமெலாம் கண்டுகண்டு நெக்கினள்;, உருகினள்...பக்கத்தே நிற்கும் தோழியிடம்
மறுகினள்:

"நெஞ்சிடை வஞ்சன் வந்து புக்கனன் போகாவண்ணம் கண்எனும் புலங்கொள் வாயில்
சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள்".

கம்பனின் இக்காவிய வரிகளைக் கண்ணதாசன் தனக்குச் சொந்தமாக்கிக் களிக்கிறார்.
தனக்கே உரிய செந்தமிழில் திரைப் பாடலாக்கி அளிக்கிறார்:

"கண் திறந்து நானிருந்தேன்
கட்டழகர் குடி புகுந்தார்
கண் திறந்தால் போய் விடுவார்
கண் மூடிக் காத்திருப்பேன்"....

கம்பனின் வரிகளை ரசித்தவர் அவற்றில் லயித்தவர் அவற்றையே தமதாக மாற்றி நமக்குள்
தமிழ்த் தேனை ஊற்றி அவர் வரிகளில் நம்மை லயிக்கவும் ரசிக்கவும்
செய்துவிடுகிறார் நம் மனங்களை எல்லாம் கொய்துவிடுகிறார் கவியரசர் பட்டத்தை
எய்துவிடுகிறார்.

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
                     தொடரும்...



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

[image: dennis a]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to