மயில் குயிலாச்சுதடி – அ. நலங்கிள்ளி

POSTED BY SSINGAMANI <http://thoguppukal.wordpress.com/author/ssingamani/> ⋅


”செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாந் தலை” (குறள் – 411)

”கற்றிலன் ஆயினுங் கேட்க அஃதுஒருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாம் துணை” (குறள் – 414)

என்பன கேள்வி ஞானத்தின் உயர்வைப் புலப்படுத்தும் குறட்பாக்கள். ஒரு காலத்தில்
கேள்வி ஞானமே பெரு வழக்கில் இருந்தது. ஒருவர் சொல்லப் பலரும் கேட்டுப்
பயன்பெறும் கேள்வி ஞானம் மிக உயரியது. நாம் எந்த ஒன்றைக் காண்கின்றோமோ அதைப்
பற்றிய அறிவு நமக்குத் தேவை. அத்தகைய அறிவைத் தருவது கேள்வி ஞானம். அன்றைய
குருகுலப் படிப்பும், இன்றைய பள்ளிகளும், கல்லூரிகளும் கேள்வி ஞானத்தின்
இன்றியமையாமையை அடிப்படையாகக் கொண்டவை. ஆசிரியர்கள் கேள்வி ஞானத்தை நமக்கு
அளிக்கும் ஞானிகள். வெறும் புத்தகப் படிப்பு மட்டும் போதுமென்றால் கல்வி
நிறுவனங்கள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. ஆசிரியர்கள் பணியாற்றத் தேவையில்லை.
கண்ணுற்றுக் கற்பதோடு நின்றுவிடாது காது கொடுத்துக் கேட்கின்ற போதுதான் அறிவு
முழுமையடைகின்றது. காண்பதோடு நின்று விடாது கேட்டறிகின்றபோது மனம்
தெளிவடைகின்றது.

காணாத ஒன்றைப் பற்றிக் கேள்வியறிவால் உணரவியலும். ஆனால் கேள்வியறிவின்றிக்
காண்பது ஒன்றையே கொண்டு அதனைப் பற்றிய முழுமை அறிவுபெற முடியாது. காட்சிப்
பொருள் கேள்விப்பொருளாக மாறும்போது தான் முழுமையடைகின்றோம். எனவே தான்
”கேள்வியால் தோட்கப்படாத செவி” என்றார் வள்ளுவர். சேக்கிழார், தடுத்தாட் கொண்ட
புராணத்தில் திருமுனைப்பாடி நாட்டின் சிறப்பைக் கூறும்போது,

”மங்கையர் வதன சீத மதி இருமருங்கும் ஓடிச்

செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு” (பாடல்-1)

எனக் கூறுவர். திருமுனைப்பாடி நாட்டில், பெண்களின் கயல் போன்ற கண்கள்,
அவர்களின் முகத்தில் இரு மருங்கும் ஓடிக் காதில் அணிந்துள்ள குழைகளை
நாடுகின்றன என்பர். பெண்கள் காதளவோடிய கண்களைப் பெற்று அழகுடன் திகழ்கின்றனர்
என்பது எளியபொருள்.

சேக்கிழார் ஈண்டு ஒரு நுட்பத்தை உணர்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்கள், காதுகளை நாடிச் சென்றன என்றால் காட்சிப் பொருள் கேள்விப் பொருளாக
மாறுகிறது என்பது நுட்பம். திருமுனைப்பாடி நாட்டுப் பெண்கள் கேள்வியறிவு
பெற்று விளங்குகின்றனர் எனக் கூறி அந்நாட்டின் சிறப்பைச் சேக்கிழார்
எடுத்துக்கூறுவர். அந்நாட்டுப் பெண்கள் நுணங்கிய கேள்வியராக இருப்பதால்
வணங்கிய வாயினராகவும் இருப்பர் என்பதும் இதன் உட்கிடக்கை. எனவே, எனைத்தானும்
நல்லவை கேட்க வேண்டும் என்பதும், அதுவே ஆன்ற பெருமை தரும் என்பதும், கற்றலிற்
கேட்டலே நன்று என்பதும் உணர முடிகின்றது.

இராமலிங்க வள்ளலார் ஆறாம் திருமுறையில் பாடியுள்ள அருட்பாப் பாடலொன்று இங்குச்
சுட்டத்தக்கது.

”வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

மயில் குயிலாச்சுதடி – அக்கச்சி

மயில் குயிலாச்சுதடி”

என்பர். வானத்தின் மீது ஆடிய மயில் அவருடைய பார்வைக்குக் குயிலாகிவிட்டது.
மயிலின் ஆட்டம் காண்பதற்கு இனியது. குயிலின் ஓசை கேட்பதற்கு இனியது. மயில்
காட்சிப்பொருள்; குயில் கேள்விப் பொருள். காட்சிப் பொருள் கேள்விப் பொருளாக
மாறுகிறது. இராமலிங்க அடிகளாருக்கு இவ்வுலகில் காட்சியளவிற் கண்ட அனுபவம்,
கேள்வி ஞானமாக மாறியது. கேள்வி ஞானம் அவருக்கு இறையனுபவத்தைத் தந்தது. கேள்வி
ஞானம் பெற்றவர்கள் பேதைமையானவற்றைச் சொல்ல மாட்டார். அத்தகைய கேள்வி ஞானம்
உடையவர்களின் வாய்ச் சொற்கள், துன்பக் காலத்தில் நம்மனோர்க்கு இன்பமளிக்கும்.

உலக இயக்கத்திற்கு ஒளியும் ஒலியும் இன்றியமையாதன. அறிவியல் வளர்ச்சிக்குத்
துணை செய்பவை. இறைவனைச் சோதியே, சுடரே என்றும், ஓசை ஒலியெலாம் ஆனாய் என்றும்
பரவி வழிபட்டனர். கற்றல் கேட்டல் உடையவர்கள் இறைவன் திருவடியைக் கைகளினால்
தொழுது ஏத்தினர். இறைவனை ஒளியாகவும் ஒலியாகவும் உருவகிக்கின்ற போது காட்சி
ஞானம், கேள்வி ஞானம் இரண்டும் உணர்த்தப்படுகின்றன. மயில் ஒளிப்பொருள்; குயில்
ஒலிப் பொருள். ஒளியானது காட்சி; ஒலியானது கேள்வி. இவ்வகையிலும் காட்சிப்
பொருள் கேள்விப் பொருளாக மாறிய திறத்தினை இராமலிங்கரின் பாடலில் உணரலாம்.
நாதம், விந்து இரண்டும் உலக அடிப்படை என்பர். நாதம் ஒலி, விந்து ஒளி,
”நாதவிந்துகளாதி நமோ நம” என அருணகிரியார் பரவிய திறமும் சுட்டுதற்குரியது.
எதையும் காண்பதுவும் வேண்டும்; கேட்பதுவும் வேண்டும்.

கேள்வி ஞானம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். ”எனைத்தானும் நல்லவை கேட்க” என்றார்
வள்ளுவர். அவர் மேலும் ”தான் பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு” என்றும்
கூறுவர். கேள்விச் செல்வமே நுண்பொருளை அறியவியலும் என்பது தெளிவு. ”மயில்
குயிலாச்சுதடி” என்பது காட்சிப் பொருள் கேள்விப் பொருளாக மாற வேண்டும் என்ற
கருத்தினைக் கொண்டு விளங்குகின்றது. இவ்வகையில் மயில் என்பதைக் கல்வியறிவு
என்றும், குயில் என்பதைக் கேள்வியறிவு என்றும் உருவகித்துக் கொள்ள இடமுண்டு.

நன்றி: ஆய்வுக்கோவை

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddt4zscoc4M6ygt73LZHnbeEJwkf%3D%3DZOyXqkxVg56FNfkQ%40mail.gmail.com.

Reply via email to