யாருடையது காவிரி நீர் ?..

பத்து வருடம் முன்பு பெங்களூருவில் நான் வேலை பார்த்த நிறுவனத்தில்,
27 ஊழியர்களுக்கு நான் மேலாளர். 27 பேரும் (ஆண் பெண் உட்பட முப்பது வயதுக்குக்
குறைவான இளைஞர்/இளைஞிகள்.
7 கன்னடர்கள், 9 தமிழர்கள், 5 தெலுங்கர்கள், மீதி வடநாட்டவர்.

ஒரு நாள் coffee இடைவெளியில் பேசிக்கொண்டிருக்கும்போது, நந்தகுமார் என்ற
இளைஞர் (கன்னடர்- மைசூர் - பிறந்து வளர்ந்தது - MBA பெங்களூரு பல்கலைக்கழகம்)
சற்றுத் தயங்கி,
"சார், தப்பா நினைக்கக் கூடாது. நீங்கள் நியாயவாதி என்பதால் உங்களைக்
கேட்கிறேன். கேட்கலாமா?" என்றார்.

அப்போது, இன்று போலவே காவிரி நீர்ப் பிரச்னை உச்சம்.

"கேளேன் நந்து" என்றேன். அவர் கேட்டது (ஆங்கிலத்தில்தான்)
"சார், கன்னட மக்கள் உழைப்பில், கர்நாடக அரசின் முதலீட்டில் விஸ்வேஸ்வரய்யா
கஷ்டப்பட்டு கட்டிய காவிரியிலிருந்து தமிழக மக்கள் பங்கு கேட்பது எந்த
விதத்தில் நியாயம் ?: என்று கேட்டார்.

""அதாவது KRS அணை பற்றிக் கேட்கிறீர்கள் இல்லையா" ? என்றேன்.

"அதுவும்தான்" என்றார். எனக்கு புரை ஏறிவிட்டது.

"காவிரியை விச்வேஸ்வரய்யா கட்டினாரா?" என்றேன்.
அவர் குழப்பத்துடன் "பின்னே" என்றார்.

அவரிடம் இருந்த குழப்பமே, மீதி இருந்த ஆறு MBAக்களிடமும் இருந்தது.

நான் உடனே சொன்னேன், "நந்து, இதற்குப் பதில் பின்னால் சொல்கிறேன். முதலில்
உங்களுக்கு அரை நாள் விடுமுறை தருகிறேன். உங்கள் வேலையை நான் செய்து
கொள்கிறேன். நீங்கள் கூகிள் இல் உட்காருங்கள். நான் இப்போது எழுதிக்கொடுக்கும்
பத்து வார்த்தைகளைத் தேடி, விக்கிபீடியாவில் அவை எல்லாம் முழுதாகப் படித்து
விட்டு, மாலை என்னிடம் வரவேண்டும்" என்றேன்.

"சரி சார்" என்றார். நான் எழுதிக் கொடுத்தேன்.

Cauvery River, Chola Kingdom, Kallanai, Karikaal Chola, Raja Raja Chola,
Tanjore, Coorg, Upper Riparian State, Lower Riparian State, KRS Dam

மாலை தொங்கிப் போன முகத்தோடு வந்தார். "எல்லாம் படித்து விட்டேன். நீங்கள்
சொல்ல ஏதும் இல்லை சார். சாரி" என்று சென்று விட்டார்.

"ஒரு நிமிடம்.... நந்து, நீங்கள் படித்ததையெல்லாம் உங்கள் மீதி
நண்பர்களுக்கும் சொல்லுங்கள்" என்றேன்.

நான் மேலே சொன்னதை நம்புபவர்கள் நம்புங்கள். நம்பாதவர்கள், கர்நாடகாவில்
யாரிடமாவது காவிரி பற்றிப் பேசிப் பாருங்கள்.
-----
நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை.

குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து
தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில்
கலக்க விட்டுவிட்டு ஏதோ கர்நாடகக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு
கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் பேசிட்டு இருக்காங்க.

அவங்க பேசுவதை பார்த்தால் காவிரி ஆறு உற்பத்தியாகி 200 ஆண்டுகள்தான் ஆனதுபோல
இருக்கு.

ஒரு விஷயம் அவுங்களுக்கு புரியவே இல்லை, பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில்
கலந்துகொண்டுதான் இருந்தது.

அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்துகொண்டேதான் இருந்தது.

ஆனால் பிரச்சனை ஆரம்பித்ததே 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண
ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகுதான்.

அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல
மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருந்தது.

KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை.
காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது.

அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக்கொண்டிருக்கும்.
அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

(KRS அணையை தொடர்ந்து கபினி,ஹேமாவதி,ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டபோதும்
அப்படித்தான்)

நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை என்னமோ யாசகம் போல
நினைத்துக்கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா? கடல் நீரை குடி நீராக்கி குடிக்க
கூடாதா என்கிறார்கள்.

அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும்
சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது.
நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.

புவியியல் வல்லுந‌ர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கான விளக்கத்தை தருவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு
அணையை கட்டியது.

அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை
சோலைவனமாக்கியது. ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால்
உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி கடற்கரையின் உப்பு
அளவு அதிகரித்தது.

கடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆறு பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய
பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.

அதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள்
பாலைவனமாகும்.

நம் மாநிலத்திற்குள் அணைகளே கட்டக்கூடாது என நான் சொல்லவில்லை. அணைகள் கட்டி
அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர்
கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.

அணைகள் பற்றி பேசுவோம். கர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி
அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில்
தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது.

கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில்
இருக்கும் அணைகள்தான்.

ஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை. காவிரி
டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர்,
மேட்டூர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை
மட்டும் கட்ட முடியும்.

இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.
சிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம்.
ஆம். கேள்வி சரிதான்.

கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து
வறட்சி காலத்தில் திறந்துவிட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும்
காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி பல சிறு சிறு வாய்க்கால்களுக்கு
பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி
நீரை கூட தேக்க முடியாது.

காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே
போதும்.
அதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.
நிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த
நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.

ஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால்
இயற்கை நம்மை பழிக்கும்.

டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது
கற்பனையாகத்தான் இருக்கும்.

உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு
தடுப்பணைகளை மட்டுமே கட்ட முடியும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய
தவறுதான். தர்க்க ரீதியில் தவறுதான் ஆனால் இயற்கையை நாம் மாற்ற
முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.

இதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு
செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.
சர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ்
பகுதியில் இருப்பவர்களுக்குத்தான்.

நமது உரிமையைத்தான் கேட்கிறோம் பிச்சை அல்ல. நமது அரசியல் சண்டைக்காக நமது
உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்!

முடிவாக ஒன்று. காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும்
உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும்
குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும்
எடுத்துக்கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது?

படித்தது.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DduR4DCVEP5B%2BnX-Lej8HgWHDS5fWeZyS4wjHfO-uJ%2BWow%40mail.gmail.com.

Reply via email to