*ஓம்*

”ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி;
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

”பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்..”

 நாலடியாரும் திருக்குறளும் மேற்கண்ட பழமொழிகளின் ஒப்பப் போற்றுதல் ஆகும்.
     நாலடியார்....
கொடிய வறுமையால் பல நாடுகளில் வாழ்ந்த சமணப் புலவர்கள் எண்ணாயிரவர் பாண்டி
நாட்டை அடுத்துப் பாண்டியன் அரவணைப்பால் வாழ்ந்தனர்; பின்னர் நாட்டில் மழை
பொழிந்து வளம் பெருகியதறிந்து அவரவர் நாடு செல்ல அவாவினர்; புலமை மிக்க
அவர்களைப் பிரிய மனமில்லாத வேந்தன் வழியனுப்பாது காலம் தாழ்த்தினான்..
அப்புலவர்கள் ஒவ்வோர் வெண்பா இயற்றித் தத்தம் இருக்கையில் கிடத்து வைத்து
அகன்றனர். அரசன் அறிந்து வருந்தி  அவர்கள் மேல் கொண்ட வெறுப்பால் அனைத்துப்
 பாக்களையும் கட்டாகக் கட்டி ஆற்றில் போட்டுவிடச் செய்தான். அக்கட்டு ஏடுகளில்
நானூறு ஏடுகள் நீரை எதிர்த்து நாலடி செல்ல அவற்றை எடுத்து நூலாகத்
தொகுத்தமையால் நாலடி நானூறு எனப் பெயர்பெற்றது என ஒரு புனைவும் இதற்கு உண்டு.
      மன்னன் வழுதியர்கோன் வையைப் பேராற்றின்
      எண்ணி இருநான்குகோ டாயிரவர் - உன்னி
      எழுதியிடு மேட்டில் எதிரே நடந்த
      பழுதிலா நாலடியைப் பார்..
நாலடியாரைத் தொகுத்து அடைவு செய்தவர் பதின்மர். இதற்குப் பழைய உரைகள் மூன்றும்
புத்துரைகள் சிலவும் உளவாயின.
     நாலடியார் மூலம், கி.பி.1812-ஆம் ஆண்டில் திருக்குறள் மூலப் பதிப்போடும்
இணைத்து நெல்லை அம்பலவாணகவிராயரால் வெளியிடப்பட்ட பெருமை உண்டு.
நாலடியார்
அறத்துப்பால் (செல்வம் நிலையாமை)
-------------------------------------------------------------------------
     அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
     மறுசிகை நீக்கிஉண் டாரும் - வறிஞராய்ச்
     சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனின் செல்வம் ஒன்று
     உண்டாக வைக்கபாற் றண்டு.

அறுசுவை உணவை அருமை மனைவி அருகே இருந்து விரும்பி உண்பிக்கவும், தம் வளமைப்
பெருக்கால் மற்றொரு கவளம் வேண்டா என்று விலக்கி உண்பவரும், ஒரு காலத்தில்
வறுமையடைந்து மற்றொருவரிடத்து இரந்து உண்பார் என்றால் செல்வம் என்னும் ஒன்று
நிலைக்கத்தக்கது என்று கருதக்கூடியது அன்றாம்.
வெ.சுப்பிரமணியன்

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to