வரலெட்சுமி விரதம் முன்ஜென்ம கர்ம பாவ வினைகளால் உண்டாகும் தடைகள், தோஷங்கள், பிணிகள், கவலைகள் நீங்கி தெய்வ திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள், விரதங்கள் பெரிதும் துணை நிற்கின்றன. ஆயுள், ஆரோக்யம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்ய யோகம் கிடைக்கவும், மன அமைதி, சந்தோஷம் ஏற்படவும் பல பூஜை, புனஸ்காரங்கள் இருக்கின்றன. அந்த வகையில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யும் விரத பூஜையே வரலட்சுமி பூஜை அல்லது வரலட்சுமி நோன்பாகும்.
‘வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை வளமும், நலனும், ஞானமும் விரதங்களால் கிடைக்கின்றன’ என்று புராணங்கள் கூறுகின்றன. மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாளில் செய்யும் ஸ்வர்ண தன ஆகர்ஷண தேவி பூஜை மிகவும் சிறப்பானது, பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும். *லட்சுமி பூஜை பற்றிய புராணக் கதை* பத்ரச்ரவஸ் என்ற மன்னன் விஷ்ணு பக்தன். அவனுடைய மனைவி சுரசந்திரிகா, மகள் சியாமபாலா. மகளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். காலங்கள் கடந்தன. ஒருநாள் வயது முதிர்ந்த ஒரு சுமங்கலி மூதாட்டி பத்ரச்ரவசின் அரண்மனைக்கு வந்தாள். மூதாட்டியின் வடிவெடுத்து வந்தது சாட்சாத் மகாலட்சுமி தேவி. வரலட்சுமி விரதத்தின் அருமை பெருமைகளை சொன்ன மூதாட்டி, அந்த விரதத்தைக் கடைப் பிடிக்குமாறு சுரசந்திரிகாவிடம் சொன்னாள். வந்திருப்பது இலட்சுமி தேவி என்பது அவளுக்குத் தெரியவில்லை. பிச்சை கேட்க வந்த கிழவி உளறுவதாகக் கருதி, அவமானப்படுத்தி விரட்டினாள் சுரசந்திரிகா. இலட்சுமிதேவி ஒரு இடத்துக்கு வருவது சாமானிய காரியம் அல்ல. அரண்மனையைத் தேடிவந்தவளை விரட்டினால் அங்கு இருப்பாளா? அந்த இடத்தை விட்டு அகன்றாள் இலட்சுமி தேவி. விளைவு..? மணிமகுடத்தையும் செல்வச் செழிப்பையும் இழந்தாள் சுரசந்திரிகா. அந்த இடத்தைக் காலிசெய்த மகாலட்சுமி நேராக அரசியின் மகள் சியாமபாலாவிடம் சென்றாள். வரலட்சுமி விரதத்தின் பலன்கள் பற்றி அவளிடமும் சொன்னாள். சியாமபாலா பக்தி சிரத்தையுடன் அதைக் கேட்டாள். பயபக்தியுடன் வரலட்சுமி நோன்பு மேற்கொண்டு பூஜை செய்து வழிபட்டாள். விரத மகிமையால் அவளிடம் மலை போல் செல்வம் குவியத் தொடங்கியது. பெற்றோர் வறுமை நிலையில் இருப்பதை சியாமபாலா அறிந்தாள். ஒரு செப்புப் பானை நிறைய தங்கத்தை நிரப்பி அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அவள் அனுப்பி வைத்தாலும், அதை அனுபவிப்பதற்கு யோகம் இருக்க வேண்டுமே. அவர்களைச் சூழ்ந்திருந்த தரித்திரம், அவயோகம் அந்த வாய்ப்பைத் தடுத்துவிட்டது. அவர்களிடம் வந்ததுமே, ஒரு பானைத் தங்கமும் கரியாக மாறிவிட்டது. இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தாள் சியாமபாலா. வீடு தேடி வந்த லட்சுமி தேவியை அவமானப்படுத்தி அனுப்பியதாலேயே அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாள். வரலட்சுமி விரதத்தின் மகிமைகளைத் தாய்க்கு எடுத்துச் சொன்னாள். தாங்கள் செய்த தவறுகளை மன்னித்து அகம்பாவத்தைப் போக்குமாறு மகாலட்சுமியை மனமுருக வேண்டினாள் சுரசந்திரிகா. வரலட்சுமி விரதம் மேற்கொண்டு, பூஜை, வழிபாடு செய்து பிரார்த்தனை செய்தாள். இழந்த செல்வங்களை மட்டுமின்றி, ஆட்சி, அதிகாரமும் அவர்களை வந்தடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன. வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கும் முறை; மகாலெக்ஷ்மி பாற்கடலில் உதித்த தினம். சுமங்கலிகள் மட்டும் அனுஷ்டிப்பது. மகாவிஷ்ணுவின் தேவியான இலட்சுமி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும். விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். இலக்ஷ்மம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந் துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி ஆகும். ஆடி அல்லது ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சுமங்கலிகள் அனுஷ்டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர். இந்த விரதம் இருக்க வீடு அல்லது கோயில்களில் கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பெற்ற வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளிச் சிலை வைக்கலாம். சிலையைத் தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பின் ஐந்து வகையான ஆரத்தித் தட்டுக்களால் பூஜை செய்ய வேண்டும். கும்ப பூஜை முடிந்தபிறகு கணேச பூஜை செய்ய வேண்டும். அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும். நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசிப் பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். வரலட்சுமி விரதம் பூஜை முறை பூஜைக்குத் தேவையானவை : மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை. நிவேதனப் பொருள்கள்: பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு. பழ வகைகள்: ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை... பூஜைக்கான முன்னேற்பாடுகள்: வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும். (சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.) விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் & ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். மஞ்சள் பில்ளையார் பிடித்து வைத்து அதில் அருகம்புல் சொருகி வினாயகர் மந்திரத்தை உச்சரித்து விட்டு,மகாலட்சுமி துதியை சொல்லவும்.. அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும். நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோ த்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும். பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.சிறு பெண் குழந்தைகளை அழைத்து வந்து பூஜையில் கலந்து கொள்ளச்செய்ய வேண்டும் அவர்களுக்கு இனிப்பு பலகாரங்கள் பூஜையின் இறுதியில் கொடுத்து கையில் மஞ்சள் கயிறு கட்டி அனுப்பவும்... <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* [image: [?]] *v **a n a k k a m** S u b b u* [image: [?]] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
