🌹அப்பா மாறவில்லை🌹

நாற்பத்திரெண்டு வருடங்களுக்கு முன்னால், டிகிரி முடித்து விட்டு, சேலத்தில்
CA படிக்க ஆடிட்டரிடம் சேர்ந்தேன். CA முடிக்கவில்லை. பிறகு ஊட்டியில் ஒரு
கம்பெனியில் இன்டர்னல் ஆடிட்டில்  வேலையில் இருந்தேன். ஊட்டியில் நான் வாங்கிய
முதல் மாத சம்பளம் 500 ரூபாய்.

அதுவும் அந்த மாதத்தின் 7 ஆம் தேதி தான் கொடுப்பார்கள். அப்படி முதல் மாதச்
சம்பளம் வாங்கியதும், மனதில் சந்தோஷத்தை அலைகள்.  வீட்டிற்கு கடிதம்
எழுதினேன். பிறகு ஒரு வார இறுதியில் சேலம் வந்தேன்.

அப்போதெல்லாம் அப்பாவிடம் நான் அதிகமாக பேசுவதில்லை. மெல்லியதாக குசலம்
மட்டும் விசாரித்து விட்டு,
"உங்களுக்கு எதாச்சும் வேணுமா?"

அப்பா பதில் சொல்லவில்லை.
"அம்மாட்ட கேளு..." என்று சொல்லி
விட்டு போய்விட்டார்.

நான் அம்மாவிடம், "பாத்தியாம்மா.
நான் ஏதாவது வேணுமான்னு
அப்பாட்ட கேக்டேன். பதிலே சொல்லல. இவரெல்லாம்..." என்று துவங்கி, அப்பாவை
சிறிது வசை பாடிவிட்டு,
ஊட்டி கதைகளை அளக்க ஆரம்பித்தேன்.

அந்தக் கதைகளை அம்மாவிடம் பலமுறை சொல்லி இருந்தாலும், ஒவ்வொரு முறையும் முதல்
தடவை போல கேட்பாள் அம்மா.

"ஏண்டா! ஊட்டில இந்த சம்பளம் போறுமா? என்னதான் அக்கா வீட்டில இருந்தாலும் பணம்
குடுத்தா தானே நமக்கு மரியாதையா இருக்கும்-னு
அப்பா சொல்லிண்டு இருந்தார்."

"அதுக்கெல்லாம் அக்காகிட்ட கொடுத்துண்டு தான் இருக்கேன். பிரச்சனை எதுவும்
இல்ல"

அவ்வப்போது ஏதாவது இன்டர்வியூக்கு சென்னை சென்று வருவேன். லீவு போட்டால்
சம்பளம் கிடையாது. ஒரு முறை மாதத்தில் மூன்று முறை சென்னை செல்லும்படி
ஆகிவிட்டது.

திடீரென்று பணம் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. அக்காவிடம் கேட்க முடியாது.
அவளே சிரமத்தில் இருந்தாள்.
அப்பாவிடம் சொல்ல கஷ்டமாக இருந்தது. சரி என்று சக நண்பன் குன்னூர் முரளியிடம்
கொஞ்சம் பணம் வாங்கி மேனேஜ் பண்ணினேன்.

இதை ஏதேச்சையாக அம்மாவிடம் சேலம் வந்திருந்த போது, சொன்னேன். அடுத்த நாள்
ஊட்டி கிளம்பும் போது, அம்மா,  "டேய் அப்பா நேத்து கொஞ்சம் பணம் கொடுத்தா. அத
உன் பேக்குல  வச்சுருக்கேன். பாத்துக்கோ"

சரி என்று கிளம்பியவன் அதைப்ப்பற்றி அலட்டி கொள்ளாமல் இருந்து விட்டேன்.

ஊட்டி வந்து என் டிராவல் பேக்கை கிளியர் செய்தபோது பார்த்தேன். அதில் ஒரு
கள்ளியில் 500 ரூபாய் இருந்தது.

500 ரூபாயா? என் ஒரு மாத சம்பளம். அப்பா அம்மாவிடம் கொடுத்து, அம்மா உள்ளே
வைத்து இருக்கிறாள். மனதை என்னவோ செய்தது.

பின்பு ஒரு பிரிட்டிஷ் கம்பெனியில், விற்பனை பிரதிநிதி வேலை கிடைத்து,
சென்னைக்கு வந்தேன்.

சம்பளம் நாலு இலக்கு. பேட்டா அது இது என்று சந்தோஷமான வாழ்க்கை.

சென்னையில் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

வார இறுதியில் வழக்கம்போல சேலம் வந்து, என் சென்னை பிரதாபங்களை அம்மாவிடம்
ஒப்பித்தேன். அப்பா எப்பவும் போல நலம் விசாரித்து விட்டு, அமைதியாக அவர்
வேலையை பார்த்துகொண்டு இருந்தார்.

"ஏண்டா அடுத்த மாசம் தீபாவளி வர்றது.
எனக்கு ஒன்னும் வேண்டாம். அப்பாவுக்கு வேட்டி சட்டை ஏதாவது எடுத்துண்டு வாடா.
வேண்டாம்-னு உங்கிட்ட சொன்னாலும், மனசுக்குள்ள சந்தோஷப்படுவா"

சரி. பார்க்கலாம் என்று சென்னை வந்து விட்டேன். தீபாவளிக்கு தி. நகரில்
எனக்கு  பேண்ட் சர்ட் எடுத்துகொண்டு, சேலத்தில் ஜாலி டெய்லரிடம் தைத்து
கொள்ளலாம் சேலம் என்று வந்து விட்டேன்.

வந்ததும் டெய்லரிடம் டிரஸ் தைக்க கொடுத்து விட்டு, சொன்னேன்.

"மச்சான்! எப்பவும் போல தலைய தலைய ஆட்டிட்டு, அம்போன்னு வுட்டுராதே. நைட்டு
கொடுத்துரு. தீபாவளிக்கு வேற டிரஸ் இல்லடா"

"ஏண்டா! கடைசி நிமிஷத்துல வந்து, என்னோட உயிர வாங்கறதே உனக்கு பொழப்பா போச்சு.
சரி. யார் கிட்ட கதை வுடறே?  போனவாரம் தான் உங்கப்பா வந்து, உன்னோட அளவு
பேண்ட், சர்ட் கொடுத்து, ரேமண்ட்ஸ் டிரஸ் மெட்டீரியலும் கொடுத்து, உன்னோட
தீபாவளி டிரஸ்-னு சொன்னார்.
நானும், உன்னோட அளவு எங்கிட்ட இருக்குன்னு சொல்லி,  தைச்சு நாலு நாலுல
கொடுத்துட்டேன். அப்பாவே வந்து வாங்கிண்டு போனாரே"

அப்படியா! எனக்கு தீபாவளி டிரஸ் தைச்சாச்சா? வீட்டுல இருக்கா?
நீண்ட நாள் நண்பன் இவன். பொய் எல்லாம் சொல்ல மாட்டான். அம்மாவும் ஒன்னும்
சொல்லலயே. பார்க்கலாம்.

"சரிடா. எனக்கு தெரியல. பரவாயில்ல. இதையும் இன்னிக்கு தைச்சு நைட்டு
கொடுத்துரு. இரண்டா இருக்கட்டுமே"

அவன் காதில் போட்டு கொள்ளவில்லை என்பது அவன் துணியை பிடுங்கி  உள்ளே வைப்பதில்
இருந்தே தெரிந்தது.

சாப்பிடும் போது அம்மா ஏதேச்சையா கேட்டாள். "அப்பாவிற்கு துணி எடுத்துண்டு
வந்திருக்கியாடா"

அடடா! சுத்தமாக மறந்து போச்சே. எடுக்கலயே. குற்ற உணர்வு மனதில் வட்டமிட,
அம்மாவை பார்த்தேன்.

என் அமைதியை அம்மா புரிந்து கொண்டு விட்டாள்.

"சரி. எடுக்லேன்னா பரவாயில்லை. அடுத்த முறை எடுத்துக்கலாம். அப்பா அதை எல்லாம்
எதிர் பார்க்கமாட்டா"

"ஏம்மா, எனக்கு டிரஸ் எடுத்தருக்கேளா?
ஜாலி சொன்னான்."

"ஆமாடா. எனக்கே தெரியாது. அப்பா உனக்கு டிரஸ் எடுத்து,  உன்னோட டெய்லர்கிட்ட
போய், அவரே கொடுத்து, தைச்சு வாங்கி கொண்டு வந்துட்டார்.
பீரோல தான் இருக்கு. உனக்கு சர்ப்ரைசா கொடுக்கலாம்-னு இருந்தேன். அதுக்குள்ள,
அந்த ஜாலி உங்கிட்ட சொல்லிட்டானா?"

பீரோவை திறந்து பார்த்தேன். ஜாலி சொன்னமாதிரி, ரேமண்ட்ஸ் சூட்டிங். தைத்து
அழகாக மடித்து வைக்கப்பட்டு இருந்தது. தரமான மெட்டீரியல். விலை அதிகமாக
இருக்குமே? நான் கூட இப்படி காஸ்ட்லியாக எடுக்கலயே?

நான் வேலைக்கு போன பிறகும், அப்பா எனக்கு தீபாவளி டிரஸ் எடுப்பதை
நிறுத்தவில்லை. நான் கூட தீபாவளிக்கு அப்பா அம்மாவிற்கு எதுவும் வாங்கி
வரவில்லை.

ஆனால் இவர்கள் நான் வீட்டிற்கு வரும் முன்னமே, துணி எடுத்து, தைத்து  வைத்து
இருக்கிறார்கள்.

அப்பா வந்தார். டிரஸ் வாங்கியதை பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை.

"என்னடா பட்டாசு ஏதாவது வாங்கனும்-னா, ராஜகணபதி கோவில் பக்கத்துல, நம்ம மணி,
பட்டாசு கடை போட்டிருக்கான். உன்னை வந்தவுடன் கடைக்கு வரச்சொன்னான். என்ன
வேணுமோ வாங்கிக்கோ. பணம் அப்புறமா நான் கொடுத்துடறேன்"

"இல்லப்பா. பட்டாசு எல்லாம் ஒன்னும் வேண்டாம். சும்மா சாங்கியத்துக்கு கொஞ்சம்
நானே வாங்கிக்கிறேன்"

நான் சொல்வதை அப்பா நம்பாதது மாதிரி அவருடைய பார்வை இருந்தது. ஆச்சரியமாக
பார்த்து கொண்டு நகர்ந்து போய் விட்டார்.

சின்ன வயதில் பட்டாசு கம்மியாக வாங்கி கொடுத்ததற்கு, அப்பாவிடம் சண்டை
போட்டது, ஞாபகத்திற்கு வந்து போனது. பாவம் அப்பா.

கையில் கொஞ்சம் காசு வந்தவுடன்,
நான் தான் மாறியிருந்தேன்.

அப்பா மாறவேயில்லை.

போனவரம், நாரதகான சபாவில் ஒரு பாகவதர் உபன்யாசம் கேட்க, நண்பன் கிருஷ்ணனோடு
போயிருந்தபோது,
பாகவதர் சொன்னது ஞாபகத்தில் வந்தது.  அவர் சொன்னது இது தான்.

"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே".

ஒரு கட்டத்தின் வெளித் தோற்றம் மாதிரி அம்மா. பார்க்க அழகாக இருப்பாள். வீடும்
அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பாள்.  ஆனால் அந்த வீட்டின்
அஸ்திவாரம் அப்பா.
அதன் பலன் வெளியே தெரியாது. ஆனால் உறுதியாக இருக்கும்.

நான் போகும் பாதை எல்லாம் என் தந்தை போட்டு வைத்தது. எனை சேரும் செல்வம்
எல்லாம், அவர் பார்த்து விதைத்தது!

கையில் கொஞ்சம் காசு வந்தவுடன்,
நான் தான் மாறியிருந்தேன்.

அப்பா மாறவேயில்லை...

இதுபோல் ஆயிரம் அப்பாக்கள்.
Sent from Yahoo Mail on Android
<https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_>

-- 
You received this message because you are subscribed to the Google Groups
"iyer123" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an
email to iyer123+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/iyer123/228812781.2624644.1699928262340%40mail.yahoo.com
<https://groups.google.com/d/msgid/iyer123/228812781.2624644.1699928262340%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZfiqKTt%2BsDhL%3Du5wFJwpJGGpiXJC0zkhmS79dDhPAfSiA%40mail.gmail.com.

Reply via email to