நவம்பர் 15, 16 கேரள மாநிரம் கொச்சியில் நடைபெற்ற கட்டற்ற மென்பொருள்
மாநாட்டின் ஒரு பகுதியாக 'தன்மொழியாக்கம் - பன்மொழியாக்கம்'
(http://nfm2008.atps.in/) எனும் தலைப்பில் கோரா மொகந்தி - ஷ்யாம்
ஆகியோருடன் கலந்து கொண்டு அரங்கிலிருந்தோருடன் பகிர்ந்து கொண்ட விடயங்களை
இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இங்கே குறிப்பிடப்படும் விடயங்களுக்கு
பலரது பங்களிப்புகள் தேவைப்படுகின்றன.

தொடர்ச்சியாக எவ்விதத்திலாவது பங்களிக்க இயலும், ஏற்பாடு செய்ய இயலும்
என்றாலோ, அல்லது குறிப்பிடப்பட்டுள்ள திட்டத்தில் தாங்களோ தாங்கள்
சார்ந்த அமைப்போ ஏற்கனவே ஈடுபட்டிருந்தாலோ இங்கே பகிர்ந்து கொள்ளவும்.
பணி இரட்டிப்பும் வீண் விரயமும் நேரா வண்ணம் தொடர்ந்து திட்டங்கள்
மேற்கொள்ள இது உதவும்.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கட்டற்ற மென்பொருள் உலகிற்கு நாங்கள்
அளித்து வரும் பங்கும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியதாக நாங்கள்
கருதுபவற்றையும் இவ்விடத்தே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

குநோம், கேடியி ஆகிய குனு லினக்ஸ் இயங்கு தள பணிச்சூழல்களில் குநோமின்
தமிழாக்கப்பணி தொடர்ச்சியாகவும் நம்பிக்கையூட்டும் விதமாகவும் இருந்து
வருகிறது. கேடியி தமிழாக்கம் கடந்த வெளியீடு (4.1) முதற்கொண்டு
குறைந்தபட்ச எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தொடங்கியுள்ளது. இப்பணிகள்
தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன எனும் விடயமே நிறைவினைத் தரும்
ஒன்றாகும்.  ஆயினும் இவையெல்லாம் பிழைகளுக்காக சரிபார்க்கப்பட்டு
தரமானதாக்கப் படவேண்டியுள்ளன. ஆவணமாக்கம் எனும் விடயம் இன்னும் எட்டிப்
பார்க்கப்படாமலே இருக்கிறது.

இன்னும் அதிக அளவிலான தன்னார்வலர்கள் இதன் பொருட்டு தேவைப்படுகிறார்கள்.
மேலும் இடை முகப்புகளை மொழிபெயர்க்க தொடங்கிய காலங்களில் கணினிக்கு
பழக்கப்பட்டோரில், தமிழ் இடைமுகப்பினை விரும்பி பயன்படுத்துவோர்
குறைவாகவே இருக்கின்றனர் என்பதை உணர முடிந்தது. ஓபன் ஆபிஸ், பயர்பாக்ஸ்
போன்ற பயன்பாடுகள் தங்களது தொடர்ச்சியான பராமரிப்பிற்கு தகுந்தோரை
தேடிக்கொண்டிருக்கின்றன. தாம் விரும்பிப் பயன்படுத்தும் குனு லினக்ஸ்
பயன்பாட்டை மொழிபெயர்த்தும் உதவலாம்.

ஆயினும் தமிழில் ஆவணங்கள் வேண்டும் எனும் எண்ணமும் விளக்கங்கள் தமிழில்
கொடுக்கபடுவது நல்லது எனும் எண்ணமும் அதிகம் தென்படவே அத்தகைய முயற்சிகள்
மேற்கொண்டு அதில் தோன்றிய படியே பலனும் கிட்டியதெனலாம். கட்டற்ற
மென்பொருளாலால் ஆன இயங்கு தளமான உபுண்டுவிற்கு தமிழிலேயே ஆதரவு தர
வேண்டும், குனு/ லினக்ஸ் இயங்குதளமான அதில் தமிழ் தொடர்புடைய தொழில்நுட்ப
விடயங்கள் அலசப்படவேண்டும் எனும் நோக்கில் தொடங்கப்பட்ட உபுண்டு தமிழ்
குழுமமும் எண்ணிய படி நகரத் தொடங்கியுள்ளது.

ஆயினும் தமிழில் ஒருவர் தட்டெழுத விரும்பி தட்டச்சுப் பலகையைப்
பார்த்தால் அதில் தமிழ் எழுத்துக்கள் இல்லை. ஆங்கில வழி தமிழ்
தட்டெழுதும் முறையையே கணினியை தீண்டும் வசதி பெற்றிருப்போர்
பின்பற்றுகின்றனர். இது கூடாது என்றும் இணைய ஊடகங்கள் நடத்திய
நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இந்நிலை
முற்றிலும் மாற அந்த அந்த மாநில மொழி தாங்கிய இரு மொழி விசைப்பலகைகள்
புழக்கத்திற்கு வர வேண்டும். இதுவே நாளை அனைவரது இல்லத்திலும் கணினி
வரும் போது, சிறு குழந்தையும் தமிழை தட்டிப் பார்க்க கணினியை எட்டிப்
பார்க்கும் போது எளிதாக்கும்.

(முன்னரே எழுதியது.. தொடர்வேன்...)


-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Reply via email to